வெளியிடப்பட்ட நேரம்: 17:55 (19/11/2018)

கடைசி தொடர்பு:18:07 (19/11/2018)

நம் ஆயுளில் மூன்று வருடங்கள் கழிப்பறையில்தான்... அதை எப்படிப் பராமரிப்பது? #WorldToiletDay

நம் ஆயுளில் மூன்று வருடங்கள் கழிப்பறையில்தான்... அதை எப்படிப் பராமரிப்பது? #WorldToiletDay

`நம்மளோட வாழ்நாள்ல ஒரு இடத்துல மூணு வருஷம் இருக்கப் போறோம்னா, அந்த இடத்தைப் பத்தி, நமக்குத் தெரிய வேண்டியது எவ்வளவு முக்கியம்...?'  

`அதென்ன மூணு வருஷம் ஒரே இடத்துல'னு உங்களுக்குச் சந்தேகம் வரலாம்.

நமது வாழ்நாளில், சராசரியாக மூன்று வருட காலங்களை, நாம் கழிப்பறைகளில் கழிக்கிறோம் என்ற உண்மை நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? அதிலும் ஆண்களைக் காட்டிலும், பெண்கள் ஒன்று முதல் ஒன்றரை வருட காலம் அதிகம் செலவிடுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. பொதுக் கழிப்பிடங்களில், அதிலும் `வெஸ்டர்ன் டாய்லெட்'டுகளைப் பயன்படுத்தவேண்டிய சூழலில் நோய்த்தொற்று ஏற்படாமல் பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

கழிப்பறை

மலக்குடலிலிருந்து வெளியேறும் கழிவுப்பொருள்களில், ஏறத்தாழக் கோடிக்கணக்கான வைரஸ்கள், லட்சக்கணக்கான பாக்டீரியாக்கள், ஆயிரக்கணக்கான பாராசைட் என்ற ஒட்டுண்ணிகள் காணப்படுகின்றன. இதனடிப்படையில் பாக்டீரியா, வைரஸ் மற்றும் பிற கிருமிகளின் புகலிடமாகக் கழிப்பறைகள் விளங்குகின்றன. அதிலும் `வெஸ்டர்ன் டாய்லெட்'டின் கம்மோட் (Commode) மீது நேரடியாக அமர்வதால் சிறுநீர்த் தொற்று, பிறப்புறுப்பில் புண், வெள்ளைப்படுதல், தோல் அழற்சி போன்ற பல்வேறு நோய்த் தொற்றுகள் மிகச் சுலபமாகப் பெண்களுக்கு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. 

நோய்த்தொற்றுக்கு முக்கியக் காரணமாக விளங்கக்கூடியவை இ.கோலி (E.coli), ஷிகெல்லா (Shigella), சூடோமோனாஸ் (Pseudomonas), ஸ்டாஃபிலோகாக்கஸ் (Staphylococcus) போன்ற பாக்டீரியாக்கள் என்று கூறும் ஐக்கிய நாடுகள் சபை, இந்த பாக்டீரியாக்களால் ஏற்படும் சிறுநீர் மற்றும் தோல் தொற்றுநோய்கள் ஆண்களைக் காட்டிலும், பெண்களைப் பல மடங்கு அதிகமாகப் பாதிப்பதாகக் கூறுகிறது. `டாய்லெட் கம்மோட்'களில் மட்டுமன்றி, கழிப்பறைக் கதவுகள் மற்றும் கைப்பிடிகளில் உள்ள கிருமிகளின் அளவு 40 ஆயிரத்துக்கும் மேலாகும். இந்தக் கிருமிகளால் சிறுநீர்த் தொற்று மற்றும் பிறப்புறுப்பில் தொற்று ஏற்படுவது மட்டுமல்லாமல், வயிற்றுப்போக்கு, சீதபேதி, டைபாய்டு, காமாலை ஆகியவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே, டாய்லெட்டைப் பயன்படுத்தியதும் கைகளைக் கழுவ வேண்டியது மிக அவசியம். 

கழிப்பறை

`வெஸ்டர்ன் டாய்லெட்' பயன்படுத்தும் பெண்களுக்கான சில பாதுகாப்பு முறைகள்: 

* கழிப்பறையைப் பயன்படுத்தும் முன்பும், பயன்படுத்திய பிறகும் ஃப்ளஷ் செய்ய வேண்டும்.
* கைகளைச் சுத்தமாக சோப் மூலம் கழுவ வேண்டும்.
* இந்தியக் கழிப்பறைகளில் கடைப்பிடிப்பதுபோல தண்ணீரைக் கொண்டு கழுவ வேண்டும்.
* டிஷ்யூ அல்லது டாய்லெட் பேப்பரைப் பயன்படுத்த வேண்டும். குறிப்பாகப் பெண்கள் தங்கள் கைப்பையில் சோப், டிஷ்யூ பேப்பரை எப்போதும் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
* பிடெட் (Bidet) என்ற டாய்லெட் ஹேண்ட் ஷவரைப் பயன்படுத்த வேண்டும்.

இத்தகைய வழிமுறைகள் அனைத்தையும், பொதுக் கழிப்பறைகளைப் பயன்படுத்தும் பெண்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

பெண்களுக்கு மட்டும் விழிப்புஉணர்வு ஏற்படுத்தினால் போதுமா, ஆண்களுக்கு வேண்டாமா என்று கேட்கலாம். வீடுகளிலும், பணியிடங்களிலும் Unisex என்ற இருபாலருக்குமான கழிப்பறைகளில், `வெஸ்டர்ன் டாய்லெட்'டுகளைப் பயன்படுத்தும் ஆண்களும்  கழிப்பறை ஒழுங்குமுறைகள் (Toilet Etiquettes) சிலவற்றைப் பின்பற்ற வேண்டியது அவசியம். அதற்கு முன் `வெஸ்டர்ன் டாய்லெட்'டின் பகுதிகளையும், அவற்றின் பயன்பாடுகளையும் புரிந்து கொள்வோம்.

மூட்டு வலி மற்றும் மூட்டு வீக்கம் உள்ளவர்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் வரப்பிரசாதமாக உள்ள `வெஸ்டர்ன் டாய்லெட்' எனப்படும் `கம்மோட்'டில் மூன்று பகுதிகள் உள்ளன. அவை, டாய்லெட் பேசின், டாய்லெட் சீட் என்ற பிளாஸ்டிக் வளையம் மற்றும் டாய்லெட்டின் மேல் மூடி அல்லது தட்டு என மூன்று வகைப்படும்.

கழிப்பறை

இங்கே நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், சிறுநீர் மட்டும் கழிப்பவர்கள் வளையம் மற்றும் தட்டு என இரண்டையும் தூக்கிவிட்ட பிறகே பயன்படுத்த வேண்டும். ஆண்கள் அமர்ந்தவாறு சிறுநீர் கழிப்பது நல்லது. ஏனென்றால் மூடியை மட்டும் வெறுமனே தூக்கி சிறுநீர் கழித்தால், முந்தைய நபர் அதன்மீது சிதறிய சிறுநீர், பின்னால் வருபவரின் உடலில் பட வாய்ப்புள்ளது என்பதால், சுகாதாரத்தை வலியுறுத்தவே, இந்த வளையம் அமைக்கப்பட்டுள்ளது. மலம் கழிப்பவர்கள், தட்டை மட்டும் தூக்கி, வளையத்தின் மேல் உட்கார வேண்டும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதிலும் முதலில், ஃப்ளஷ் செய்துவிட்டு மலம் கழிக்க வேண்டும். கடைசியில் மீண்டும் மறக்காமல் ஃப்ளஷ் செய்ய வேண்டும். முக்கியமாக டாய்லெட் பேஷின், எப்போதும் மூடிய நிலையிலேயே இருக்க வேண்டும்.

நம் நாட்டில் டிஷ்யூ பேப்பரைக் குறைவாகப் பயன்படுத்துகிறோம் என்றாலும், அது கைகளில் கிருமிகள் பரப்புவதைப் பெரிதும் குறைக்கிறது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். மேலும் பக்கெட், மக் ஆகியவற்றால் பரவும் நோய்த்தொற்றைக் குறைக்க பிடெட் (Bidet) என்ற டாய்லெட் ஹேண்ட் ஷவரைப் பயன்படுத்தலாம். இவை அனைத்துக்கும் மேலாக, ஆன்டிசெப்டிக் வில்லைகளை ஃபிளஷ் டேங்கில் பயன்படுத்துவது நல்லது. ஃபிளஷ் டேங்கை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். வாய்ப்பிருந்தால் `Disposable Toilet Cover' என்ற சற்றே பெரிய டிஷ்யூ பேப்பரை டாய்லெட் வளையத்தின் மீது பயன்படுத்துவது நோய்த்தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும். 

வெஸ்டர்ன் மற்றும் இந்தியன் டாய்லெட்கள் இரண்டும் உள்ள பொதுக் கழிப்பறைகளில், இந்தியன் டாய்லெட்டுகளைப் பயன்படுத்த வேண்டியது ஏற்ற ஒன்றாகும். ஏனென்றால் இயல்பாக நாம் குத்தவைத்து அமரும் நிலை (Squatting Method) முழுமையாக மலம் கழிக்க உதவும். அத்துடன் இடுப்பு மற்றும் தொடையின் தசைகளுக்கு வலிமையை அதிகரிக்கும். இதனால் மூலநோய் தொல்லைகளைத் தவிர்க்க முடியும். 

நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, மொகஞ்சதாரோ நாகரிகத்தில் முதன்முதலாகக் கழிப்பறைகளை ஏற்படுத்திய நமக்கு, அதன் பயன்பாடு பற்றிய விழிப்புஉணர்வு சற்று அதிகம் தேவைப்படுகிறது என்பதுதான் இன்றைய உண்மை நிலையாகும்.


டிரெண்டிங் @ விகடன்