வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (19/11/2018)

கடைசி தொடர்பு:13:53 (20/11/2018)

`டெங்கு, பன்றிக்காய்ச்சல் பாதிப்புகளை எப்படிக் கையாள்வது' -மருத்துவர் தரும் விளக்கம்

டெங்கு, பன்றிக்காய்ச்சல் பாதிப்புகளை அனைத்து நிலையில் உள்ள மக்களும் எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து விளக்குகிறார் பொதுநல மருத்துவர் எழிலன்:

டெங்கு, பன்றிக்காய்ச்சல் தடுப்பு முறை

``டெங்கு காய்ச்சல் இரண்டு கட்டமாகப் பாதிப்பை ஏற்படுத்தும். முதல்கட்டத்தில், நான்கு நாள்கள் காய்ச்சல், மூட்டு, கை, கால் உடல் வலி, மூட்டுகளில் வீக்கம், தோலில் சிவப்பு நிறத்தில் அரிப்பு உள்ளிட்ட அறிகுறிகள் தோன்றும். ஆனால், 4 அல்லது 5-வது நாளில் காய்ச்சல் குறைந்துவிடும். இரண்டாவது மற்றும் அபாய கட்டம் என்பது காய்ச்சல் குணமான பின்னர்தான் தொடங்கும். ரத்தத்தில் தட்டணுக்கள் குறைவு, நீர்ச்சத்து இழப்பு, ரத்த அழுத்தம் குறைவது 4-வது நாளில் இருந்து 8-வது நாள் வரை ஏற்படும். இந்த இரண்டு தன்மையை மக்கள் சரியாகப் புரிந்துகொள்ளாததால், காய்ச்சல் குணமாகிவிட்டது என்று நினைத்து அலட்சியமாக இருந்துவிடுவார்கள். அதன் பின்னர் டெங்குவின் தீவிரம் அதிகரித்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுக்களைத் தடுக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது நம் வாழ்வியலாக மாற வேண்டும்" என்கிறார். 

 

 

 

``வெப்பநிலை அதிகம் இல்லாத குளிர்தன்மையில், அடர்த்தியான மக்கள்தொகை இருக்கும் இடங்களில் பன்றிக்காய்ச்சலைப் பரப்பும் கிருமிகள் தேங்கியிருந்து பாதிப்பை ஏற்படுத்தும். நோய் எதிர்ப்புச்சக்தி குறைவாக உள்ளவர்களுக்குப் பன்றிக்காய்ச்சலின் பாதிப்பின் வீரியம் அதிகமாக இருக்கும். பன்றிக்காய்ச்சல் தடுப்புக்கு மாத்திரைகள், தடுப்பூசி உள்ளது. ஆனால், தடுப்பூசிகளை முன்னதாகவே போட்டுக் கொள்ள வேண்டும். ஊரெல்லாம் நோய் பரவிய பிறகுதான் பலர் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்கின்றனர். 'ஹை ரிஸ்க்' பட்டியலில் உள்ளவர்கள் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்திலேயே தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது நல்லது" என்கிறார் டாக்டர் எழிலன்.