`உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும்!' - பெண் விழுங்கிய செயற்கை பல்தொகுப்பை அகற்றிய அரசு டாக்டர் | Chennai doctors Artificial polyurethane removed from woman's throat

வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (20/11/2018)

கடைசி தொடர்பு:17:20 (20/11/2018)

`உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும்!' - பெண் விழுங்கிய செயற்கை பல்தொகுப்பை அகற்றிய அரசு டாக்டர்

சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு தொண்டையில் இருந்த செயற்கை பல்தொகுப்பு இருப்பது கண்டறியப்பட்டு சென்னை மருத்துவக்கல்லூரி மற்றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தக்க நேரத்தில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அகற்றப்பட்டது. 

 தொண்டை

சென்னை மருத்துவக்கல்லூரி மற்றும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் இரைப்பை குடல் மருத்துவப் பிரிவு இயக்குநர் மற்றும்  பேராசிரியர் டாக்டர்  ஏ.ஆர். வெங்கடேஸ்வரன் மற்றும் பேராசிரியர் டாக்டர் ராஜ்குமார் சாலமன் ஆகியோர் இந்த விநோதமான சிகிச்சை குறித்து கூறுகையில்,  ``சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் பட்டு (65). இந்தப் பெண்மணி  பால் வியாபாரம் செய்து வருகிறார். அப்பகுதியில் உள்ள கிணற்றில் குளித்துக்கொண்டிருந்தார். அப்போது அவர் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு பல் உடைந்து  காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு செயற்கை பல்தொகுப்பு (Partial denture) பொருத்தப்பட்டது. ஒரு மாதத்துக்கு முன் தனக்குப் பொருத்தப்பட்ட அந்தப் பல்தொகுப்பைக் காணவில்லை என்று தெரிவித்து பல் மருத்துவரிடம் காட்டியுள்ளார்.  

அவருக்கு தொண்டையில் உணவு விழுங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே காது, மூக்கு, தொண்டை மருத்துவரிடம் காட்டி  உள்நோயாளியாகச் சேர்ந்து சிகிச்சை பெற்றுள்ளார். அப்போது  எண்டோஸ்கோபி எடுக்க வேண்டும் என மருத்துவர் கூறியதால் இரைப்பை குடல் மருத்துவத் துறைக்கு வந்தார். அங்கு அவருக்கு பரிசோதனை மேற்கொண்டோம். அப்போது அப்பெண்ணின் வாயிலிருந்து 15 செ.மீ அளவுள்ள இடத்தில் 2.5  செ.மீ  அளவுள்ள செயற்கை பல் தொகுப்பை (Partial denture) ஒரு விசேஷ கருவியின் மூலம் எடுத்தோம். பிறகு முழு பரிசோதனை நடைபெற்றது. தற்போது அவரால் எச்சில் விழுங்கமுடிகிறது. அத்துடன் அவருக்கு  நோய் எதிர்ப்பு மருந்துகள் செலுத்தப்பட்டன. இந்தப் பெண்ணுக்கு தன் தொண்டையில் செயற்கை பல்தொகுப்பு ( Partial denture) இருப்பதே தெரியவில்லை. முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இந்த உபாதை எளிதில் சரிசெய்யப்பட்டுள்ளது. வழக்கமாக இந்தப் பிரச்னைக்கு தனியார் மருத்துவமனையில் ரூ.50,000-க்கு மேல் செலவு ஆகும். இந்த கூரான செயற்கை பல்தொகுப்பு சற்று கீழே சென்றிருந்தால்கூட உணவுக் குழாயில் ஓட்டை ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டிருக்கும்" என்றனர்.  


[X] Close

[X] Close