வெளியிடப்பட்ட நேரம்: 08:57 (22/11/2018)

கடைசி தொடர்பு:12:14 (22/11/2018)

புயல் பாதித்த பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கான மருத்துவ ஆலோசனைகள்!

``அடிப்படை வாழ்வாதாரத்தையே புரட்டிப்போடுகிற ஒரு பேரிடர் என்றால், மனதளவில் மிகவும் உடைந்து போகும் சூழல் இருக்கும். இதற்கிடையில் உடல்சார்ந்த பிரச்னைகளோ, தொற்றுப் பாதிப்புகளோ ஏற்பட்டால் அவற்றை உதாசீனப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம்"

புயல் பாதித்த பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கான மருத்துவ ஆலோசனைகள்!

டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் பீதியில் தமிழகம் தவித்துக்கொண்டிருக்கும் சூழலில்  புயல், மழை பாதிப்பும் சேர்ந்துகொண்டிருக்கிறது. குறிப்பாக, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் அடிப்படை வாழ்வாதாரத்தையே தொலைத்துவிட்டு, தவித்து நிற்கிறார்கள் மக்கள்.

புயல்

பேரிடரை எதிர்கொள்ளும் மக்களின் மிகப்பெரிய பாதிப்புகள் யாவும், உடல் மற்றும் மனநலம் சார்ந்தவையாகவே இருக்கின்றன. மனநலம் சார்ந்த பிரச்னைகளிலிருந்து வெளிவர முறையான கவுன்சலிங் அவசியம். உயிர்ச் சேதங்கள் மற்றும் பொருள் சேதங்களிலிருந்து முறையாக அவர்களை வெளிக்கொணர்ந்து, மீண்டு வாழ்வதற்கான புதியதொரு நம்பிக்கையை உடனடியாகத்  தரவேண்டும். இதற்கிடையில் உடல்சார்ந்த பிரச்னைகளையும் கவனிக்கத் தவறக்கூடாது. 

``புயல், மழை போன்ற நேரங்களில் ஏற்படும் பிரச்னைகளுக்கு அடிப்படைக் காரணம் அசுத்தமான தண்ணீர். அதிலிருந்து வேகமாகப் பரவும் வைரஸ் கிருமிகள் யாவும் வயிற்றுப்போக்கு, காய்ச்சல், சளி, இருமல், டைபாய்டு, காலரா, ஹெபடைட்டஸ் போன்ற பல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். தண்ணீரில் கலக்கும் அசுத்தத்தைப் பொறுத்து அதன் பாதிப்புகள் இருக்கும். உதாரணமாக, மிருகங்கள் அல்லது மனிதர்களின் கழிவுகள் கலந்த நீரை உபயோகப்படுத்தினால் காலரா, ஹெபடைட்டஸ், டைபாய்டு போன்ற காய்ச்சல் வகைகள் ஏற்படலாம். பாத்திரங்களைத்  துலக்க அசுத்தமான நீரை உபயோகிப்பவர்கள் வெகுநேரம் அதிலேயே வேலைபார்த்தால், கைகளில் அரிப்பு ஏற்படக்கூடும். சரியாகக் கழுவாமல் உபயோகப்படுத்தும் சமையல் பொருள்கள் மூலம் பரவும் தொற்றுகள், பூச்சி மற்றும் விலங்குகள் மருத்துவர் சிவராமக்கண்ணன்மூலம் பரவும் தொற்றுகள் என வைரஸ் பரவும் விதத்திற்கேற்ப பாதிப்புகள் ஏற்படும். 

முன்னெச்சரிக்கையாக இருக்க சில ஆலோசனைகள்!

* வீட்டருகே தண்ணீரைத்  தேங்கவிடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். 

* தண்ணீரை நன்கு காய்ச்சி, வடிகட்டிக் குடிக்க வேண்டும். 

* காய்கறிகள், பழங்களை நன்கு கழுவியபிறகே பயன்படுத்த வேண்டும். 

* காற்றின் மூலம் பரவும் நோயின் பாதிப்புகள், உணவு மூலமாக ஏற்படும் நோய்கள், தொற்றுப் பாதிப்புகள், வாழ்வியல் நோய்கள் எனப் பாதிப்பில் பல வகைகள் இருக்கின்றன. சர்க்கரை போன்ற வாழ்வியல் நோய் பாதிப்பு இருப்பவர்கள் தங்களுக்கான மருந்துகளை முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொள்ளலாம். குறிப்பாக ஆஸ்துமா, சர்க்கரை நோய், காசநோய், எளிதில் தொற்று பாதிப்பு ஏற்படும் உடலமைப்பு இருப்பவர்கள் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும்.

* மழைக்காலம் வரும்போது அதற்கான தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்வது பல பிரச்னைகளைத் தடுக்கும்.

சுத்தம்

மழை நேரத்தில், காய்ச்சல்களைக் காட்டிலும் அதிகம் பாதிப்பு ஏற்படுத்துவது வயிறு தொடர்பான பிரச்னைகளும், தொண்டைப் பிரச்னைகளும்தான். பருவ மாற்றம், சுகாதாரமில்லாத சூழலில் இருப்பது போன்றவை செரிமானமின்மை, ஒவ்வாமைப் பிரச்னைகள், வாயுத் தொந்தரவு, நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். சிலருக்கு வாயுத்தொந்தரவு அல்லது செரிமானப் பிரச்னை அதிகம் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் முன்னெச்சரிக்கையோடு செயல்பட வேண்டும்.

இப்படியான பேரிடர் காலங்களில், உடல்சார்ந்த பாதிப்புகளைக் காட்டிலும் எக்கச்சக்கமான உளவியல் சிக்கல்கள் ஏற்படும். அடிப்படை வாழ்வாதாரத்தையே புரட்டிப்போடுகிற ஒரு பேரிடர் என்றால், மனதளவில் மிகவும் உடைந்து போகும் சூழல் இருக்கும். இதற்கிடையில் உடல்சார்ந்த பிரச்னைகளோ, தொற்றுப் பாதிப்புகளோ ஏற்பட்டால் அவற்றை உதாசீனப்படுத்துவதற்கான வாய்ப்புகள்  அதிகம். இது பிரச்னையின் தீவிரத்தன்மையை அதிகரிக்குமே தவிர, எந்த விதத்திலும் குறைக்காது. அது மட்டுமன்றி எந்தவொரு பாதிப்பையும், முதல்நிலையிலேயே சரிசெய்வதுதான் நல்லது. 

இருமல், தொண்டையில் வலி உணர்வு இருப்பது, தீவிரமான தலைவலி அல்லது கண்வலி, மூச்சுக்குழாயில் தொந்தரவுகள், மூட்டுவலி, வறட்டு இருமல் போன்றவை இருந்தால் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சையைத்  தொடங்குங்கள். 

மாஸ்க்

உடல்சார்ந்த பாதிப்புக்கான அறிகுறிகள் தெரியவரும்பட்சத்தில், கூட்டம் நிறைந்த இடங்களுக்குச்  செல்வதைத்  தவிர்ப்பது நல்லது. குறைந்தபட்சம் குழந்தைகள், கர்ப்பிணிகளிடமிருந்து தள்ளி இருப்பது நல்லது. எந்த நேரத்திலும் கைகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். இருமும்போதும், தும்மும்போதும் வாயை மூடிக்கொள்ள வேண்டும் " என்கிறார். 

போதுமான விழிப்புஉணர்வு இல்லாததால், மழைக்காலத்தில் வெளியாகும் அசுத்த நீரை உபயோகப்படுத்தி உலகளவில் ஓர் ஆண்டுக்கு 34 கோடி பேர் இறக்கின்றனர் என்கிறது ஓர் ஆய்வு. எனவே, இப்போது தேவைப்படுவதெல்லாம் சரியான விழிப்புஉணர்வுதான். முன்னெச்சரிக்கையோடு இந்தப் பேரிடர் காலத்தை எதிர்கொண்டு கடந்து வருவோம்..!

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்