வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (22/11/2018)

கடைசி தொடர்பு:20:00 (22/11/2018)

``2030-ல், 9.8 கோடி இந்தியர்கள் சர்க்கரை நோயாளிகளாக இருப்பார்கள்!" - லேன்செட் ஆய்வு முடிவு!

சர்க்கரை நோய் - இன்சுலின்

சர்க்கரைநோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஆண்டொன்றுக்கு இந்நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை எந்த அளவு அதிகரிக்கிறது என்பதைக் கணக்கிட சமீபத்தில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. லேன்செட் பத்திரிகையின்  சர்க்கரைநோய் மற்றும் உட்சுரப்பியலில் பிரிவினர் நடத்திய அந்த ஆய்வின் முடிவில், வருங்காலத்தில் எத்தனைபேர் சர்க்கரை நோயாளிகளாக இருப்பார்கள் என்பது கணக்கிடப்பட்டது. அதில், 2030-ம் ஆண்டுக்குள் உலகளவில் தற்போதைய அளவைக்காட்டிலும் ஐந்து மடங்கு அதிகமானோர் சர்க்கரை நோயால் அவதிப்படுவார்கள் என்பது தெரியவந்துள்ளது.

அதன்படி 2030-ம் ஆண்டு சீனாவில் 13 கோடி பேரும், இந்தியாவில் 9.8 கோடி பேரும், அமெரிக்காவில் 3.2 கோடி பேரும் `டைப் 2' சர்க்கரைநோயால் பாதிக்கப்படுவார்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த நிலை உருவானால், சர்க்கரை நோய்க்கான உடனடி தீர்வான இன்சுலினின் தேவை, அடுத்த பன்னிரண்டு வருடத்தில் 20 சதவிகிதம் அதிகரிக்கும் என்று கூறியுள்ளனர். இன்சுலின் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும்கூட, 38 மில்லியனிலிருந்து இரண்டு மடங்காக அதிகரித்து 79 மில்லியனாக அதிகரிக்கக்கூடும். 

அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியரும், ஆராய்ச்சியாளருமான சஞ்சய் பாஸூ இதுகுறித்து பேசும்போது, ``நகரமயமாவது, உடல் உழைப்பு குறைந்துவருவது, உணவு முறை மாற்றங்கள், வயது முதிர்வு போன்றவைதான் `டைப் 2' சர்க்கரைநோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணமாகும். இத்தகைய பிரச்னைக்கான தீர்வை, அரசாங்கம் இப்போதிருந்தே கவனத்தில் கொள்ள வேண்டும். முக்கியமாக, இப்போதிருந்தே இன்சுலின் உற்பத்தியையும், அதன் விநியோகத்தையும் அதிகரிக்க வேண்டும். எளிய மக்களுக்கும் கிடைக்கும் நவீன சிகிச்சையாக இன்சுலின் இருந்தால்தான், பிற்காலத்தில் பிரச்னையைச் சமாளிக்கமுடியும்" என்று கூறியுள்ளார்.

வாழ்வியல் மாற்றங்கள்

இதுவரை, பெரும்பாலும் `டைப் 1' சர்க்கரை நோயாளிகளுக்குத்தான் இன்சுலின் கண்டிப்பாக பரிந்துரைக்கப்பட்டது. `டைப் 2' சர்க்கரை நோயாளிகளுக்குப் பார்வை மங்குதல் அல்லது பக்கவாதம் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படுபவர்களுக்கு, அதிலிருந்து அவர்களைத் தற்காத்துக்கொள்ளும் சூழலில்தான் இன்சுலின் பரிந்துரைக்கப்படுகிறது. மற்றவர்களுக்கு, பெரும்பாலும் இன்சுலின் பரிந்துரைப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க