வெளியிடப்பட்ட நேரம்: 11:25 (23/11/2018)

கடைசி தொடர்பு:17:03 (23/11/2018)

இந்தியன் ஸ்டென்ட் கருவியே பெஸ்ட்... அமெரிக்கன் ஹார்ட் அசோஷியேசன் அறிவிப்பு!

``ஸ்டென்ட் தயாரிக்கும் இந்திய நிறுவனங்கள், இனிப் பெருமையுடன் தங்களின் தரம் குறித்துப் பேசலாம். தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படும் ஸ்டென்ட்களை உபயோகிப்பவர்களுக்கு, அதிகபட்சம் 3 சதவிகிதம் மட்டுமே மீண்டும் `அட்டாக்' வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பது தெரியவந்துள்ளது. இதையும் குறைப்பதற்கான முயற்சியில் நாங்கள் இப்போது இறங்கியுள்ளோம்"

இந்தியன் ஸ்டென்ட் கருவியே பெஸ்ட்... அமெரிக்கன் ஹார்ட் அசோஷியேசன் அறிவிப்பு!

ழக்கமாக வெளிநாடுகளில் அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைகள், மருந்துகள், உபகரணங்கள்தான் சிறந்தவை என்று ஓர் எண்ணம் பரவலாக இருந்துவருகிறது. அதைப் பொய்யாக்கும் வகையில் இருக்கிறது, இதயம் தொடர்பாக சமீபத்தில் வெளியான ஓர் ஆய்வு முடிவு. அது நம்மைப் பெருமையடைய வைத்துள்ளது. இதயத்தமனிகளில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டால், அதைச் சரிசெய்வதற்காக அந்த உறுப்பில் பொருத்தப்படும் ஒருபொருள்தான் ஸ்டென்ட் (Stent). பொதுவாக, இதய அடைப்புகளைச்  சரிசெய்ய  ஓபன் ஹார்ட் சர்ஜரி, ஸ்டென்ட் வைப்பது போன்றவை பரிந்துரைக்கப்படும். அடைப்பின் அளவு மிகக் குறைவாக இருந்தால், மருந்து அல்லது மாத்திரைகள் பரிந்துரைக்கப்படும். இவற்றில் மற்ற சிகிச்சைகளைக் காட்டிலும், பொருத்தமான சிகிச்சை ஸ்டென்ட் பொருத்துவதுதான்.  

இதயம் Stent \

Image Courtesy : ETTon

 

ஆனாலும், மருத்துவ உலகில் உள்ளவர்களுக்கு இந்தியாவில் தயாரிக்கப்படும் ஸ்டென்ட் வகைகள் நிஜமாகவே தரமானதுதானா என்ற சந்தேகம் இருக்கிறது. கடந்த ஆண்டு நிகழ்ந்த ஒரு நிகழ்வுக்குப் பிறகு இப்படியான சந்தேகங்கள் வலுபெறத்தொடங்கின. அரசு சார்பில் திடீரென ஸ்டென்ட் விற்பனையின் விலை 75 சதவிகிதம் குறைக்கப்பட்டது. அதை ஏற்கமுடியாத சில தனியார் வெளிநாட்டு அமைப்புகள், தனியார் தயாரிப்பு நிறுவனங்கள் `இந்தியச் சந்தைக்கு எங்கள் தயாரிப்பில் வெளியாகும் ஸ்டென்ட்களை விற்பனைக்குக் கொண்டுவர மாட்டோம்' என்று கடுமையாகச் சாடின. அதுமட்டுமன்றி, `இந்தியாவில் தயாரிக்கப்படும் ஸ்டென்ட்களைவிடவும், தங்களுடையதே தரத்தில் உயர்ந்தது' என்றும் குறிப்பிட்டன. மிகக் குறைவான மருத்துவர்களே இதை எதிர்த்து குரல் கொடுத்தனர் என்றொரு குற்றச்சாட்டும் அந்தச் சமயத்தில் எழுந்தது. உண்மையில், இப்படிப்பட்ட ஆதாரமற்ற விமர்சனங்களை முழுவதுமாக ஏற்றுக்கொள்ளவும் முடியாமல், எதிர்க்கவும் முடியாமல் இதயநோய் நிபுணர்களும் தடுமாறினர். 

இந்தநிலையில், அமெரிக்காவில் சிகாகோ நகரில் உள்ள அமெரிக்கன் ஹார்ட் அசோஷியேசன் (American Heart Association) சார்பில் நடத்தப்பட்ட ஸ்டென்ட் குறித்த ஆய்வு ஒன்றின் முடிவு கடந்த வாரத்தில் வெளியாகியுள்ளது. அதில், `மற்ற நாடுகளில் தயாரிக்கப்படும் ஸ்டென்ட் வகைகளைவிட, இந்தியாவில் தயாரிக்கப்படும் ஸ்டென்ட் வகைகள் எந்த விதத்திலும் குறைந்ததல்ல' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஸ்டென்ட் வகைகளின் தரத்தைப் பரிசோதிப்பதற்காக கடந்த பத்து ஆண்டுகளாக இந்த ஆய்வு நடத்தப்பட்டு முடிவு வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஸ்டென்ட்

Image Courtesy : BruceBlaus

இந்தியாவில் தயாரிக்கப்படும் `Yukon Choice Pic' என்ற ஸ்டென்ட், அமெரிக்காவில் தயாரிக்கப்படும் Xience வகை ஸ்டென்ட் ஆகியவை இந்த ஆய்வில் உட்படுத்தப்பட்டு ஒப்பிடப்பட்டுள்ளன. பத்து ஆண்டுகளாகக் கண்காணிக்கப்பட்ட இந்த ஆய்வில், இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் தயாரிக்கப்படும் `Supra Flex' என்ற ஸ்டென்ட் வகையும் சேர்க்கப்பட்டது. ஏறத்தாழ 2500-க்கும் மேற்பட்ட இதயஅறுவை  சிகிச்சை செய்தவர்கள் இந்த ஆய்வில் பங்கெடுத்துள்ளனர். 

கடந்த செப்டம்பர் மாதம் செய்யப்பட்ட `TALENT' என்ற ஆய்விலும், இப்படியான ஒரு முடிவுதான் வெளியானது. ஒரு வருட காலம் நடைபெற்ற இந்த ஆய்வு, முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்படும் ஸ்டென்ட் வகைகளின் தரத்தைப்  பரிசோதிப்பதற்காகத்தான் செய்யப்பட்டது. 2017-ன் போது உருவான பிரச்னையின் உண்மைத்தன்மையை அறிவதற்காகவே இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதை முன்னெடுத்துச் செய்த இதயநோய் சிகிச்சை நிபுணர் உபேந்திர கௌல்  கூறும்போது, ``இதய நோய்க்காகச் சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் மத்தியிலேயே `நம் நாட்டில் தயாரிக்கும் ஸ்டென்ட் வகைகளைக் காட்டிலும், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்டென்ட்கள்தான் சிறந்தது' என்ற எண்ணம் மிகுந்திருக்கிறது. எங்களுடைய ஆய்வு அப்படியான பொய்யான, ஆதாரமற்ற நம்பிக்கைகளை உடைத்திருக்கிறது. ஸ்டென்ட் தயாரிக்கும் இந்திய நிறுவனங்கள், இனிப் பெருமையுடன் தங்களின் தரம் குறித்துப் பேசலாம். தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படும் ஸ்டென்ட்களை உபயோகிப்பவர்களுக்கு, அதிகபட்சம் 3 சதவிகிதம் மட்டுமே மீண்டும் `அட்டாக்' வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பது தெரியவந்துள்ளது. இதையும் குறைப்பதற்கான முயற்சியில் நாங்கள் இப்போது இறங்கியுள்ளோம்" என்று கூறியுள்ளார். 

இதயம் சிகிச்சை

இதயநோய் சிகிச்சை நிபுணர் செங்கோட்டுவேலுசென்னையைச் சேர்ந்த இதயநோய் சிகிச்சை நிபுணர் செங்கோட்டுவேலுவிடம் இது குறித்துப் பேசினோம். ``தரவரிசையில் பரிசோதிக்கப்படும்போது, இந்தியாவில் தயாரிக்கப்படும் ஸ்டென்ட்கள்தான் சிறந்தவை என்று கூறியிருப்பது மகிழ்ச்சியான செய்தி. இந்த ஆய்வுகளின் முடிவுகள், மருத்துவத்தில் அடுத்தடுத்த கட்டத்துக்கு நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம், வளர்கிறோம் என்பதற்கான சிறந்த உதாரணம். இந்தியாவைப் பொறுத்தவரையில், அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் நோய்களில் இதயநோய்கள் முக்கியமானவை. அதிகம் பேருக்கு ஏற்படும் இதயப்பிரச்னை, `கரோனரி ஹார்ட் டிசீஸ்' (Coronary heart disease).

இவற்றைச்  சரிசெய்வதற்காக உபயோகப்படுத்தப்படுவதுதான் ஸ்டென்ட். அதற்காக, எல்லா அடைப்புக்கும் ஸ்டென்ட் உபயோகிப்போம் என்று அர்த்தமல்ல. இதயத்திலுள்ள அடைப்பின் அளவைப் பொறுத்துத்தான், ஸ்டென்ட் வைப்பதா, அறுவை சிகிச்சை செய்வதா, மருந்து மட்டும் தருவதா என்று முடிவெடுப்போம். இதயத்தில் ஏற்பட்டிருக்கும் குறிப்பிட்ட அந்த அடைப்பை, சிறிய அளவிலான பலூன் ஒன்றின் உதவியோடு `ஆஞ்சியோப்ளாஸ்டி' செய்தும்கூட நீக்கலாம். ஆனால் அப்படியான அடைப்பு நீக்கம் தற்காலிகமானதாக இருக்கலாம். அவர்களுக்கு மீண்டும் அடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு, 40 சதவிகிதம் உள்ளது. இதுவே, ஸ்டென்ட் வைத்தால் அதிகபட்சம் 5 சதவிகிதம்தான் மீண்டும் அடைப்பு ஏற்படக்கூடும். ஸ்டென்ட், மிகவும் பாதுகாப்பான சிகிச்சை என்பதால் பயப்படவேண்டிய அவசியமில்லை" என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்