உயிரைப் பறிக்கும் நிலக்கடலை ஒவ்வாமை - அலர்ட்! | Peanut allergy can cause serious problems to your body

வெளியிடப்பட்ட நேரம்: 17:27 (26/11/2018)

கடைசி தொடர்பு:17:27 (26/11/2018)

உயிரைப் பறிக்கும் நிலக்கடலை ஒவ்வாமை - அலர்ட்!

நிலக்கடலை ஒவ்வாமை நீண்ட நாள்கள் இருக்கும். அதன் தீவிரம் அதிகமாக இருப்பதாலும், சிலருக்கு உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் என்பதாலும் அதனை மீண்டும் சாப்பிடாமல் இருப்பது நல்லது.

உயிரைப் பறிக்கும் நிலக்கடலை ஒவ்வாமை - அலர்ட்!

டலை! இந்தச் சொல் சிறு வயதிலிருந்து நமக்குப் பரிச்சயம். குழந்தைப் பருவத்தில் கடற்கரைக்குச் சென்றபோது அப்பா அம்மாவிடம் அழுது அடம்பிடித்து வாங்கிச் சாப்பிட்ட நிலக்கடலை மாங்காய் சுண்டல், இளம் வயதில் `அவன் சரியான கடல பார்ட்டி!' என்று கேலி பேசியது, மழை நேரத்தில் குடை பிடித்து அன்புக்குரியவர்களின் கைப்பிடித்து நடை பயின்றபடி பொட்டலத்தில் வாங்கிச் சாப்பிட்ட வறுத்த நிலக்கடலை, வீட்டில் விசேஷம் என்றால் சாமிக்குப் படைக்கும் நிலக்கடலை சுண்டல் என நிலக்கடலைக்கு ஆயிரம் ஃபிளாஷ்பேக்குகளைச் சொல்லலாம். இவை அனைத்துமே சந்தோஷ தருணங்கள்.

நிலக்கடலை ஒவ்வாமை

ஆனால், இதே நிலக்கடலையால் உடலில் ஏற்படும் ஒவ்வாமை உயிரைப் பறிக்கும் அபாயம் உள்ளது. உலகம் முழுவதும் உணவுப் பொருள்களால் ஏற்படும் ஒவ்வாமைகளில் பொதுவானது பால் சாப்பிடுவதால் ஏற்படுவது. அடுத்ததாக முட்டை, சோயா போன்றவற்றைச் சாப்பிடுவதால் ஏற்படக்கூடியது. ஆனால், இவற்றால் தீவிரப் பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. நிலக்கடலை ஒவ்வாமை அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா போன்ற மேலை நாடுகளில் அதிகமாகக் காணப்படுகிறது. 100 பேரில் 2.5 என்ற அளவில் நிலக்கடலை ஒவ்வாமை காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. 

மேலை நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் பாதிப்பு குறைவு என்றாலும், நாளுக்கு நாள் இதன் பாதிப்பு அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக குழந்தைகள் இரைப்பைக் குடல் ஈரல் சிகிச்சை நிபுணர் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் பேசினோம்.

``நமது உடலில் நுழையும் அந்நியப் பொருள்கள் ஒத்துக்கொள்ளாமல் உடல் எதிர்வினையாற்றுவதே ஒவ்வாமை. உடல் டாக்டர் எம்.எஸ்.விஸ்வநாதன்எதிர்வினையாற்றும்போது நமது உடலில் உள்ள செல்களையும் பாதித்துவிடும். இதுதான் ஒவ்வாமை எனப்படும். மரபணு, சுற்றுச்சூழல், வயிற்றில் இருக்கும் நமது உடலில் லட்சக்கணக்கான நல்ல நுண்ணுயிரிகள் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்கள் ஒவ்வாமைக்குக் காரணமாகும். நமது உணவில் ஆரம்பத்திலிருந்தே நிலக்கடலை முக்கியப் பங்கு வகிப்பதால் நமக்குப் பாதிப்பு குறைவாக இருந்து வந்தது. சுகாதாரக் குறைபாடு காரணமாக 20,30 ஆண்டுகளுக்கு முன் தொற்றுநோய்கள் அதிகமாகக் காணப்பட்டன. ஒவ்வாமைப் பிரச்னை குறைவாக இருந்தது. ஆனால், தற்போது விழிப்புஉணர்வு அதிகரித்துவிட்டதால் சுகாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு, தொற்றுநோய்கள் குறைந்துள்ளன. ஒவ்வாமைப் பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன. 

நிலக்கடலை மட்டுமன்றி கடலை எண்ணெய், நிலக்கடலையால் தயாரிக்கப்படும் சாக்லேட், கடலை மிட்டாய், நிலக்கடலை வெண்ணெய் என நிலக்கடலை சார்ந்த அனைத்துப் பொருள்களும் ஒவ்வாமையை ஏற்படுத்தும். அதிக அளவில் நிலக்கடலை சாப்பிட்டால்தான் ஒவ்வாமை ஏற்படும் என்றில்லை. ஒன்றிரண்டு கடலையைச் சாப்பிட்டாலும், நிலக்கடலை உடலில் பட்டாலும், அதன் வாசனையை நுகர்ந்தாலும்கூட ஒவ்வாமை ஏற்பட்டுவிடும்.

நிலக்கடலை ஒவ்வாமை

நிலக்கடலை ஒவ்வாமை ஏற்பட்டால் அது தோல், வயிற்றுப் பகுதி மற்றும் சுவாசமண்டலைத்தையும்கூட பாதிக்கும். கடலை சாப்பிட்டதும் வாய்ப்பகுதியில் நமைச்சல், கை, கால்களில் தடிப்பு ஏற்படும். மூச்சுக்குழாய் வீக்கமடைந்து மூச்சுவிட சிரமம் ஏற்படும். மூச்சுவிடமுடியாமல் திணறும்போது உயிரிழப்பு ஏற்படும். சிலருக்கு வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற பிரச்னைகள் ஏற்படும். சிலருக்கு உடலில் ரத்த அழுத்தம் குறைந்து இதயம், மூளை, சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகளுக்குச் செல்லும் ரத்தம் தடைப்பட்டு, உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கும். அதன் காரணமாக உயிரிழப்புகூட ஏற்படும்.

அப்பா அல்லது அம்மா ஒருவருக்கு ஒவ்வாமை இருந்தால் குழந்தைகளைப் பாதிக்க 20 சதவிகிதம் வாய்ப்பு உள்ளது. பெற்றோர் இருவருக்கும் இருந்தால் குழந்தைக்கு வர 40 சதவிகிதம் வாய்ப்புள்ளது. பெற்றோர் மற்றும் ஒரு குழந்தைக்கு ஒவ்வாமை பிரச்னை இருந்தால் வீட்டில் உள்ள மற்றொரு குழந்தைக்கு அது பாதிக்க 60 சதவிகிதம் வாய்ப்புள்ளது. மரபணுவுக்கு இதற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

நிலக்கடலை ஒவ்வாமை இருப்பவர்களுக்கு, மரங்களில் மரப்பயிர்களான பாதாம், பிஸ்தா, முந்திரி போன்றவற்றைச் சாப்பிடுவதன்மூலம் ஒவ்வாமை வர 20 முதல் 30 சதவிகிதம் வரை வாய்ப்புள்ளது. இது குழந்தைகள், பெரியவர்கள் என யாரை வேண்டுமானாலும் பாதிக்கலாம். அதிக அளவில் 2,3 வயதுக் குழந்தைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். 

பொதுவாகப் பால் ஒவ்வாமையிலிருந்து சில ஆண்டுகளிலிருந்து விடுபட்டுவிடலாம். ஆனால் நிலக்கடலை ஒவ்வாமை நீண்டநாள் இருக்கும். அதன் தீவிரம் அதிகமாக இருப்பதாலும், சிலருக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் என்பதால் அதை மீண்டும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. இந்தப் பாதிப்புள்ள குழந்தைகளில் 15 முதல் 20 சதவிகிதம் பேர் பெரியவர்களான பிறகு ஒவ்வாமையிலிருந்து விடுபடுகிறார்கள் என்கிறது அமெரிக்க ஆய்வுகள். 

கடலை

நமது உடலை யாரேனும் தாக்க வருவது தெரிந்தால், அதிலிருந்து தப்பிக்கும் உணர்வை அளிக்கும் வகையில் அட்ரினலின் என்ற ஹார்மோன் சுரக்கும். இந்த ஹார்மோன்தான் நிலக்கடலை ஒவ்வாமைக்கு முதல் உதவி. இந்த ஹார்மோனை ஊசி மூலம் உடலில் ஏற்றுவதால், ரத்த அழுத்தம் சீராகி, ஒவ்வாமையால் ஏற்படும் எதிர்வினைகள் தடுத்து நிறுத்தப்படும். முதலுதவிக்குப் பிறகு மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்பு, சிகிச்சையில் இருந்தால் உயிரைக் காப்பாற்ற முடியும்.

இதுபோன்ற ஒவ்வாமை இருப்பவர்கள் நிலக்கடலையை எந்த வடிவத்திலும் சாப்பிடக் கூடாது. குழந்தைகள் என்றால் பள்ளியில் மற்ற குழந்தைகளோடு உணவைப் பகிர்ந்து உண்பதைத் தவிர்க்க வேண்டும். தாய்லாந்து, மெக்ஸிகோ, சீனா, வியட்நாம் போன்ற நாடுகளின் உணவுகளில் நிலக்கடலை தொடர்பான பொருள்கள் அதிகம் சேர்க்கப்படும் என்பதால் அவற்றைத் தவிர்க்க வேண்டும். ஒவ்வாமைப் பிரச்னை உள்ளவர்கள் ஹோட்டல்களில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நிலக்கடலை சார்ந்த பொருள்கள் எதுவும் இல்லாமல் சமைத்த உணவுகளையே சாப்பிட வேண்டும். பள்ளிகளில் ஆசிரியர், தலைமை ஆசிரியர்களிடம் முன்பாகவே தகவல் தெரிவித்துவிட வேண்டும். குழந்தைகளின் பள்ளி டைரி, அடையாள அட்டை போன்றவற்றிலும் இதைக் குறிப்பிட வேண்டும்" என்றார் அவர்.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close