கருவிலிருக்கும்போதே குழந்தைக்கு மரபணு மாற்றம்... சீன மருத்துவருக்கு வலுக்கும் எதிர்ப்பு! | Gene Editing done for fetal - Done by China Researcher He Jiankui

வெளியிடப்பட்ட நேரம்: 06:22 (29/11/2018)

கடைசி தொடர்பு:08:53 (29/11/2018)

கருவிலிருக்கும்போதே குழந்தைக்கு மரபணு மாற்றம்... சீன மருத்துவருக்கு வலுக்கும் எதிர்ப்பு!

``ஹெச்.ஐ.வி நோயைத் தடுப்பதற்காக, கருவிலிருந்த இரட்டைக் குழந்தைகளுக்கு அவர்களின் டி.என்.ஏ-வில் சில மாற்றங்களைச் செய்துள்ளேன்" - மரபணு ஆய்வாளர் ஜியான்குயூ.

கருவிலிருக்கும்போதே குழந்தைக்கு மரபணு மாற்றம்... சீன மருத்துவருக்கு வலுக்கும் எதிர்ப்பு!

ஹி ஜியான்குய் (He Jiankui) என்ற சீனப் பேராசிரியர், சமீபத்தில் தனது யூடியூபில் மரபணு மாற்றம் (Gene Editing) குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.  `ஹெச்.ஐ.வி நோயைத் தடுப்பதற்காக, கருவிலிருந்த இரட்டைப் பெண்குழந்தைகளின் டி.என்.ஏ-வில் சில மாற்றங்களைச் செய்துள்ளேன்' என்று அந்த வீடியோவில் குறிப்பிட்டிருந்தார். மருத்துவ உலகில் மிகமுக்கியமான இந்தச் சிகிச்சை, உலக மருத்துவ ஆய்வாளர்கள் மற்றும் அறிவியலாளர்கள் மத்தியில் மிகப்பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

மரபணு

இதுதொடர்பாக ஜியான்குய் பேசும்போது, ``அறிவியலாளர்கள்  மரபணுவை மாற்றி அமைக்க 'CRISPR' (Clustered regularly interspaced short palindromic repeats) என்ற முறையைப் பயன்படுத்துவர். மிக நுட்பமாகவும், துல்லியமாகவும் செய்யப்படவேண்டிய சிகிச்சை இது. இந்த இரட்டையர்கள் மரபணு மாற்றத்தில் அதைத்தான் செய்திருக்கிறேன். இரண்டு குழந்தைகளும் ஆரோக்கியமாக இருக்கின்றனர். எனவே, இதில் யாரும் பயப்படவேண்டிய அவசியமில்லை" என்று கூறியுள்ளார்.

மரபணு மாற்றம், சம்பந்தப்பட்ட நபரின் அடுத்தடுத்த தலைமுறையைப் பாதிக்க வாய்ப்புள்ளது என்பதால்தான் பல்வேறு நாடுகளில் மரபணு மாற்றம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 'CRISPR' வகை சிகிச்சையை, மனிதர்களுக்கு மேற்கொள்ள ஆய்வாளர்கள் மத்தியில் தயக்கமும், தடையும் இருக்கிறது. ஆனால், சீனா மட்டும் அதில் விதிவிலக்கு. அதாவது, 2016-ம் ஆண்டு மரபு ரீதியாக மாற்றம் செய்யப்பட்ட செல்களை நுரையீரல் புற்றுநோய் பாதித்தவரின் உடலில் செலுத்தி ஆய்வு செய்தனர். அதன்படி சீனா, 'மரபணு' தொடர்பான மிகப்பெரிய தரவுத்தளமாக தன்னை வளர்த்துக்கொள்வதில், மிகக் கவனமாக இருக்கிறது.

மரபணு தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவரும்  சீன ஆராய்ச்சியாளர்களுக்குக்கூட இந்த மரபணு மாற்றச் சிகிச்சை பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இதையடுத்து, ஏறத்தாழ 120 சீன ஆராய்ச்சியாளர்கள், இந்தச் சிகிச்சைமுறை மீதான தங்கள் விமர்சனத்தை முன்வைத்துள்ளனர். 'அறிவியலை எல்லா நேரத்திலும், அப்படியே பயன்படுத்திவிடக்கூடாது. ஓர் ஆராய்ச்சியாளர், அறிவியலின் வரைமுறைகளை மதித்து, அதற்கு உட்பட்டே ஆராய்ச்சிகளைச் செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளனர்.

மரபணு

சீனாவின் 'தேசிய சுகாதார ஆணையம்', இதுகுறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட ஆய்வாளர்களை விசாரிக்க உத்தரவிட்டது. இந்த நிலையில், பேராசிரியர் ஜியான்குய் பணிபுரிந்த ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் தெற்கு சீன ஆய்வகம், தனிப்பட்ட முறையில் பொது மருத்துவர் அர்ஷத் அகில்ஜியான்குய் இந்த ஆய்வை நிகழ்த்தியுள்ளதாகக் கூறியுள்ளது. அத்துடன், 'எங்கள் நிறுவனத்துக்கும் இந்த ஆராய்ச்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, மருத்துவ நெறிமுறைகளை மீறிய சிகிச்சை முறை இது' என்று கூறியுள்ளது. ஜியான்குய், சீனாவின் சென்ஷேனி பகுதியைச் சேர்ந்த மருத்துவமனை ஒன்றில்தான் ஒப்புதல் பெற்றுவிட்டதாகக் கூறுகிறார். 

`ஹெச்.ஐ.வி-யைத் தடுப்பதற்காகவே இப்படியான மரபணு மாற்று சிகிச்சையைச் செய்தேன்' என்பதுதான் ஹி ஜியான்குய் வாதம். ஆனால், சீனாவைச் சேர்ந்த 140 ஹெச்.ஐ.வி ஆராய்ச்சியாளர்கள், இத்தகைய மரபணு மாற்றுமுறை சிகிச்சை தேவையில்லாதது என்று கண்டனம் தெரிவித்துள்ளனர். 

இந்தச் சிகிச்சையில், அனைவர் மத்தியிலும் எழுந்துள்ள முக்கியக் கேள்வி என்னவென்றால்,`இந்தக் குழந்தைகளுக்கு இப்போது எதற்காக மரபணு மாற்று சிகிச்சை?' என்பதே. ஆனால், ஜியான்குய், ``இந்தக் குழந்தையின் தந்தைக்கு, ஹெச்.ஐ.வி. பாசிட்டிவ். தந்தை பாதிக்கப்பட்ட ஒரே காரணத்துக்காக, இவர்களும் பாதிக்கப்பட வேண்டுமா? இந்த உலகத்தில் நம் அனைவரையும் போல இயல்பாக வாழ அவர்களுக்கும் முழு உரிமை இருக்கிறது. அதை மனதில்கொண்டே நான் இந்த ஆய்வை முன்னெடுத்தேன். எனது முயற்சிக்கு வெற்றியும் கிடைத்துள்ளது" எனக் கூறியுள்ளார். 

மரபணு மாற்றம் செய்த சீன ஆராய்ச்சியாளர்\

உலக நாடுகள் இந்த ஆய்வை எதிர்க்கும்போது, சம்பந்தப்பட்ட குழந்தைகளின் எதிர்காலம் குறித்து நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. இதுகுறித்து பொது மருத்துவர் அர்ஷத் அகில் கூறும்போது, ``இதுபோன்ற ஆராய்ச்சிகளும் சிகிச்சைகளும் வருங்காலத்தில் எந்தளவுக்கு இருக்கும் என்று நம்மால் கணிக்க முடியாது. ஆனால், நம் நாட்டில் இதுவும் சாத்தியமாகலாம். வளர்ந்துவரும் மருத்துவத்துறை, முழு உடல் மாற்று அறுவை சிகிச்சையை செய்து வருகின்றனர். ஆனால், இந்த மரபணு மாற்றங்களை முழுமையாக நம்மால் ஏற்க முடியாது. காரணம், ஒருவரின் மரபணுக்கள் தலைமுறை தாண்டியும் ஒருவரது உடலில் இருக்கும். ஒருவேளை, இந்தக் குழந்தையின் உடலில், மரபணுவில் மாற்றம் ஏதேனும் ஏற்பட்டால் (Gene Mutation), வருங்காலத்தில் அது அவர்களின் சந்ததியைப் பாதிக்கலாம். ஆனால் அது கண்டிப்பாக பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்லமுடியாது. காலம்தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்" என்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close