நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கூடுதல் கால அவகாசம்! - மத்திய அரசுக்கு சுகாதாரத் துறை செயலாளர் கடிதம் | health secretary wrote letter to central government for extension of submission of NEET application

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (29/11/2018)

கடைசி தொடர்பு:17:00 (29/11/2018)

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கூடுதல் கால அவகாசம்! - மத்திய அரசுக்கு சுகாதாரத் துறை செயலாளர் கடிதம்

ம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்வதற்கான அகில இந்திய நீட் நுழைவுத் தேர்வு, 2019-ம் ஆண்டு மே 5-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு நாளை (வெள்ளிக்கிழமை) கடைசி நாள்.

கஜா - சுகாதாரத் துறை செயலர் கடிதம்  


தமிழகத்தில் கஜா புயல் தாக்கியதில் 7 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதிகளில் இதுவரை அடிப்படை வசதிகள் மீட்டெடுக்கப்படவில்லை. மின்சார விநியோகமும் முழுவதுமாகச் சீரடையவில்லை. அதனால், அந்த மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு, நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், தேசிய தேர்வுகள் ஏஜென்சியின் தலைவர் வினீத் ஜோஷிக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், 'தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அப்பகுதிகளைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். பல மாணவர்கள் தங்கள் மதிப்பெண் பட்டியல் உள்ளிட்ட சான்றிதழ்களையும் இழந்துள்ளனர். புயல் பாதித்த பகுதியில், இதுவரை இயல்பு நிலை திரும்பவில்லை.
சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன்

பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள், புயலால் தவறிய மதிப்பெண் பட்டியலின் நகல் வேண்டும் என்றும், நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்றும் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதை ஒரு சிறப்பு நேர்வாகக் கருதி, தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கோரிக்கை தொடர்பாகத் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டுவருவதாகவும், விரைவில் இறுதி முடிவு தெரிவிக்கப்படும் என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில் பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.