வெளியிடப்பட்ட நேரம்: 09:45 (02/12/2018)

கடைசி தொடர்பு:19:46 (02/12/2018)

இன்ஹேலர், மாத்திரை... குழந்தைகளைப் பாதிக்கும் ஆஸ்துமாவுக்கு எது சிறந்த தீர்வு?

"ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் வீசிங், ஆஸ்துமாவாக மாறாமல் இருக்கவும் நிறைய வாய்ப்புள்ளது"

இன்ஹேலர், மாத்திரை... குழந்தைகளைப் பாதிக்கும் ஆஸ்துமாவுக்கு எது சிறந்த தீர்வு?

ழைக்காலம், பனிக்காலம்  வந்தாலே அதிகம் பாதிக்கப்படுவது ஆஸ்துமா நோயாளிகள்தான்.  இரைப்பு, மூச்சுத்திணறல் போன்றவற்றால் மிகவும் பாதிக்கப்படும் அவர்களால் எந்த வேலையையும் செய்யமுடியாது. எனவே, அவர்கள் எப்போதும் மாத்திரை, மருந்துகளைத் தயாராக வைத்துக்கொள்ளவேண்டிய சூழல் ஏற்படும்.  ஆஸ்துமா, பெரியவர்களைத்தான் பாதிக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், குழந்தைகளுக்கும் ஆஸ்துமா வரும் என்கிறார்கள் மருத்துவர்கள்.   

குழந்தைகள் ஆஸ்துமா 

மழைக்காலம் வந்ததும் நம் எல்லோரையும்விட குழந்தைகள்தான் கூடுதல் புத்துணர்ச்சியுடன் இருப்பார்கள். அப்போது, அவர்களைச் சுற்றி ஏதோ ஒரு `பாசிட்டிவ் எனர்ஜி' இருந்துகொண்டே இருக்கும். `ஹை... ஜாலி... மழை வந்துடுச்சு. இனிமே நிறைய லீவு கிடைக்கும். ஜாலியா விளையாடலாம்' எனத் துள்ளிக்குதித்து ஆடிப் பாடுவார்கள். பெரும்பாலான குழந்தைகளுக்கு, மழைக்காலத்தின் வாசனை மிகவும் பிடிக்கும். மழையின் ஈரத்தையும், மண்ணின் மணத்தையும் ரசித்துக் கொண்டாடுவார்கள். ஆனால், அவர்களுக்கு அப்படியே எதிர்மறையான குழந்தைகள் கூட்டமும் இருக்கிறது. மழை, வெயில் என எந்தப் பருவநிலை மாற்றங்களையும் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களுக்கு அடிக்கடி ஒவ்வாமை பிரச்னைகள் ஏற்படும். 

ஒவ்வாமை எனும்போது,  உணவு சார்ந்த ஒவ்வாமை, தூசு மூலமாக ஏற்படும் ஒவ்வாமை, மகரந்தங்களால் ஏற்படும் ஒவ்வாமை எனப் பல வகைகள் இருக்கின்றன. இவை அனைத்துமே, ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தே பாதிப்பை ஏற்படுத்தும். சில குழந்தைகளுக்கு இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். சிலருக்கு, மிகவும் குறைவாக  இருக்கும். அதேவேளை, ஒவ்வாமை அதிகரிக்கும் சூழலில், மெல்லிய சத்தத்துடன் `வீசிங்' (மூச்சுத்திணறல்), நெஞ்சு இறுக்கம் போன்றவை ஏற்பட்டால், அதை `ஆஸ்துமா' என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனாலும், ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் எவ்வளவு தீவிரமாக இருந்தாலும், அதை `ஆஸ்துமா' எனக் குறிப்பிடுவதில்லை. அதை, `ஒவ்வாமைப் பிரச்னை' என்றும் அது தானாகவே சரியாகிவிடும் என்றும் சொல்கிறார்கள். 

இன்ஹேலர் குழந்தைகள்

 மழை, பனிக்காலங்களில் ஆஸ்துமாவிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி என்று குழந்தைகள் ஆஸ்துமா சிறப்பு நிபுணர் சரத் பாலாஜியிடம் கேட்டோம். 

"உடலில் ஒவ்வாமை ஏற்பட்டால், நோய் எதிர்ப்பு சக்தி ஒன்றுசேர்ந்து அவற்றை எதிர்க்கத் தொடங்கும். அதேநேரத்தில், ஒவ்வாமையை சரத் பாலாஜி அதிகப்படுத்தும் விதமாக, `இம்யூனோகுளோபலின் ஈ' (IGE) மற்றும் `மேஸ்ட் செல்ஸ்' (Mast cells) எனப்படும் செல்கள் அதிகமாக உற்பத்தியாகி, அவை உடலில் சில மாற்றங்களை வேகமாக ஏற்படுத்தும். இப்படி `இம்யூனோகுளோபலின் ஈ' அல்லது `மேஸ்ட் செல்கள்' அதீதமாக வெளியாகும்போது, குறிப்பிட்ட இடத்தில் அவை சேரத் தொடங்கும். குறிப்பாக, அந்த செல்கள் மூக்கில் அதிகமாகத் தங்கினால், வேகமாகத் தும்மல் வரும். தோலில் சேர்ந்தால் நமைச்சல் ஏற்படும். நுரையீரலில் சேர்ந்தால் மூச்சுத்திணறல் ஏற்படும். 

இப்படி ஒவ்வொரு பகுதியிலும் சேரக்கூடிய `மேஸ்ட் செல்கள்' அனைத்தும், ஒருகட்டத்தில் மூச்சுக்குழாயைச்  சுருக்குவதுடன் நுரையீரலைத்  தடிமனாக்கும். அத்தகைய சூழலில், சுவாசிக்கும்போது உள்ளிழுக்கப்படும் காற்று முழுமையாக வெளியே வரமுடியாமல் மூச்சுத்திணறலை ஏற்படுத்தும். இப்படியான சூழலில் சற்று தாமதமாக மெல்லிய ஒலியுடன்  காற்று வெளிவரும். அதுதான் `வீசிங்' எனப்படுகிறது. ஒவ்வாமை அதிகரிக்கும்போது, சரியாக  மூச்சுவிடமுடியாத சூழல் உருவாகி மூச்சுத்திணறலை அதிகரிக்கும். அப்போது, 'சால்புட்டமால்' (Salbutamol) போன்ற மாத்திரைகள் மூலம், தடிமனான நுரையீரலை இயல்பு நிலைக்குக் கொண்டுவர வேண்டும். மீண்டும் அத்தகைய சூழல் ஏற்பட்டால், மறுபடியும்  மருந்து எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். 

ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு உண்டாகும் `மூச்சுத்திணறல்':

குழந்தைகள், பிறந்த ஆறு மாதத்திலிருந்து `மூச்சுத்திணறல்' ஏற்படுவது இயல்புதான். இது, சாதாரண ஒவ்வாமையாக இருந்தால் அதை ஆறு மாதத்துக்குள் சரியாக்கிவிடலாம். இந்த பாதிப்பை ஆறு வயது வரை 'இது ஆஸ்துமா பாதிப்பு'தான் என்று உறுதிசெய்ய மாட்டார்கள். இந்தப் பருவத்தில் குழந்தைகளுக்கு வரும் மூச்சுத்திணறலில் இரண்டு வகை இருக்கின்றன. 

ஆஸ்துமா

1)  Episodic Ether: சளி, இருமல் பாதிப்பு காரணமாகக் குழந்தைகளுக்கு `மூச்சுத்திணறல்' வரும். இந்தப் பிரச்னை, ஆறுவயதுக்குப் பிறகு ஆஸ்துமாவாக மாறுவதற்கான வாய்ப்பு குறைவு.

2) Multi trigger wheezer: எல்லா நேரத்திலும் சில குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்படலாம். அதாவது சிரிப்பது, விளையாடுவது, மகரந்தங்களை மோந்துபார்ப்பது, அழுவது போன்ற நேரங்களில்கூட அளவுக்கதிகமாக இருமல் வந்தால், அது ஆறு வயதுக்குப் பிறகு ஆஸ்துமாவாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.  

இதை சில பரிசோதனைகள் மூலம் உறுதிசெய்து தேவையான சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். 

ஒவ்வாமை அதிகரிக்காமலிருக்க தடுப்பு முறைகள்...

* மரபு காரணமாக ஆஸ்துமா ஏற்பட்டுள்ள குழந்தைகளுக்கு, குறிப்பிட்ட ஏதோ ஒன்று பிரச்னையைத்  தீவிரப்படுத்தும். அந்தச் சூழலிலிருந்து குழந்தையை ஒதுக்கிவைக்க வேண்டும். உதாரணமாக, உணவு ஒவ்வாமை என்றால், அந்த உணவை கொடுக்காமலிருக்க வேண்டும். தோல் ஒவ்வாமை ஏற்பட்டால், குறிப்பிட்ட பொருளை அவர்கள் பயன்படுத்தாமலிருக்க வேண்டும். இப்படி, ஆஸ்துமாவை தூண்டக்கூடிய பொருள்களைப் பயன்படுத்தாமல் இருப்பது அல்லது குறைப்பதன்மூலம் பாதிப்பின் தீவிரத்தைத் தடுக்கலாம்

* உணவைப் பொறுத்தவரை, ஒருவரது இருப்பிடத்தைச் சுற்றிய பகுதிகளில் விளையும் பொருள்கள் எப்போதும் ஒவ்வாமையை ஏற்படுத்தாது. எனவே, உணவில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

ஒவ்வாமை அதிகரிக்கும் சூழல்கள் - Pollen

* ஆஸ்துமா பாதிக்கப்பட்ட பெரும்பாலான குழந்தைகளுக்கு பால் ஒத்துக்கொள்ளாது. ஆனாலும், அதில் அதிகம் புரதம் இருப்பதால் அதைப் பெற்றோர் கொடுப்பார்கள். இது பிரச்னையை மேலும் சிக்கலாக்கும். பால், விலங்குகளிடமிருந்து கிடைக்கக்கூடிய புரதம்; முட்டையும் அதேபோலத்தான். ஆனால், அதே அளவு புரதத்தை பழங்கள், காய்கறிகளிலிருந்தும்கூட பெறலாம். எனவே, ஆஸ்துமா பாதிப்பு உள்ள  குழந்தைகளுக்கு பால் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.

* பால், முட்டையுடன் கோதுமையைச் சேர்த்து  பிஸ்கட் வகைகள் தயாரிக்கப்படுகின்றன. இவை, ஆஸ்துமாவை பலமடங்காக அதிகரிக்கச் செய்யும். எனவே, ஆஸ்துமா உள்ள குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுக்க வேண்டாம். 

* வெளியிடங்களில் ஏற்படும் ஒவ்வாமையை நம்மால் தவிர்க்கமுடியாது என்றாலும், வீட்டில் ஒவ்வாமை ஏற்படாமல் தவிர்க்கலாம். கரப்பான் பூச்சிகள், மெத்தை விரிப்புகளில் காணப்படும் சிறு சிறு பூச்சிகள், சாம்பிராணிப் புகை, பூக்களிலிருந்து பரவும் மகரந்தங்கள் போன்றவை வீட்டில்  ஒவ்வாமையை அதிகப்படுத்தக்கூடியவை என்பதால் அவற்றைத் தவிர்க்கலாம். 

* பிறந்து ஆறு மாதம் வரை தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு ஆஸ்துமா, ஒவ்வாமை போன்ற பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்பு மிககுறைவு.

ஒவ்வொரு பருவநிலைக்கும், குறிப்பிட்ட ஏதாவதொரு ஆஸ்துமா தூண்டுதல் (Asthma triggers) இருக்கும். இது ஒவ்வொரு குழந்தைக்கும் வித்தியாசப்படும். எனவே, ஆஸ்துமாவைத் தூண்டும் காரணிகளை பெற்றோர் முன்பே அறிந்துகொண்டு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

ஆஸ்துமா அதிகரித்தால் என்ன செய்யலாம்?

 ஆஸ்துமாவுக்கான சிறந்த நிவாரணி, 'இன்ஹேலர்' தான். ஆனால், குழந்தைகள் நேரடியாக இன்ஹேலரைப் பயன்படுத்தக் கூடாது. `பஃப்' (Puff) ஒன்றின் உதவியுடன் இன்ஹேலரைப் பயன்படுத்த வேண்டும். ஆஸ்துமா அறிகுறிகள் அதிகரிக்க அதிகரிக்க, `பஃப்'  பயன்படுத்துவதையும் அதிகரிக்க வேண்டும்.

inhaler

இன்ஹேலர், மாத்திரைகள்... எது சிறந்த தீர்வு?

இன்ஹேலரைப் பயன்படுத்தும் குழந்தைகள், ஒருகட்டத்துக்கு மேல் அதற்கு அடிமையாகும் வாய்ப்பு உள்ளது எனப் பெற்றோர் நினைத்து, அவற்றைத் தவிர்க்க முற்படுவதுண்டு. மேலும், இன்ஹேலரில் பயன்படுத்தப்படும் மருந்து, `ஸ்டீராய்டு' என்பதாலும் அதை நினைத்துப் பயப்படுவார்கள். ஆனால், இன்ஹேலர் மட்டுமே டோசேஜ் அளவைக் கட்டுப்படுத்தும். மாத்திரைகளில் கொடுக்கப்படும் டோசேஜில், 100-ல் ஒரு பகுதி மட்டுமே நுரையீரலுக்குத் தேவையான அளவாகும். அது  மட்டுமின்றி, மாத்திரை உட்கொள்ளும்போது அது, உடல் முழுக்கப் பரவி கடைசியில்தான் நுரையீரலைச்  சென்றடையும். ஆனால், நுரையீரலுக்கு மட்டும் நேரடியாக மருந்து கொடுத்தால் போதுமானது. ஆகவேதான், எளிமையாக இன்ஹேலர் பரிந்துரைக்கப்படுகிறது. எனவே, பெற்றோர் இன்ஹேலரைத் தவிர்க்க நினைப்பது முற்றிலும் தவறு.

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்