வெளியிடப்பட்ட நேரம்: 14:39 (02/12/2018)

கடைசி தொடர்பு:14:39 (02/12/2018)

"மன அழுத்தத்திலிருந்து தப்பிக்க ஒரே வழி அதை எதிர்கொள்வதுதான்" - எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா

படிப்பது, பாடல் கேட்பது, சுற்றுப்பயணம் செல்வது என இவை எல்லாமே கோயிலுக்குப் போனால் மனம் சாந்தமாகிவிடும் என்று சொல்வதுபோன்ற, மூட நம்பிக்கைதான்.

ழுத்தில் மட்டுமல்ல, களத்திலும் சமூக அவலங்களுக்கு எதிராகத் துணிச்சலாக நின்று போராடி வருபவர், ஆதவன் தீட்சண்யா. `பூஜ்ஜியத்திலிருந்து துவங்கும் ஆட்டம்’, `தந்துகி, `மிச்சமிருக்கும் ஒன்பது விரல்கள்’ உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகள், `எழுதவேண்டிய நாட்குறிப்பின் கடைசிப் பக்கங்கள்’, `இரவாகிவிடுவதாலேயே சூரியன் இல்லாமல் போய்விடுவதில்லை’, `லிபரல்பாளையத்துக் கதைகள்’, `நீங்கள் சுங்கச்சாவடியில் நின்றுகொண்டிருக்கிறீர்கள்’ ஆகிய சிறுகதைத் தொகுதிகள், `மீசை என்பது வெறும் மயிர்’ என்ற நாவலை எழுதியிருக்கும் இவருக்கு நவீன இலக்கிய உலகில் தனி இடம் உண்டு. இவைதவிர, ஏராளமான அரசியல், சமூகம் சார்ந்த கட்டுரைகளை எழுதி வருகிறார்.

எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச் செயலாளர்களில் ஒருவர். அவர் தனது வாழ்க்கையில் மனஅழுத்தத்தை எதிர்கொண்ட விதம் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டார். 

 ``மனஅழுத்தம் என்றால் அது இதுதான் என்று பகுத்துப் பார்த்து, அதற்கொரு தீர்வை நோக்கிப் போவதற்கான வாய்ப்பு எதுவும் எனக்குக் கிடைத்ததில்லை. எனக்கு மட்டுமல்ல... பெரும்பாலானோருக்கும் அது கிடைப்பதில்லை. பிரச்னைகள் எவ்வளவு மனஅழுத்தத்தைத் தந்தாலும் அவற்றையெல்லாம் கடந்துபோக வேண்டிய நெருக்கடிதான் எனக்கு வந்திருக்கிறது.

என்னுடையது பெரிய குடும்பம். அதிலிருந்து முதல் தலைமுறை அரசு ஊழியராகிவிட்ட நான் ஒவ்வொரு சம்பள தினத்திலும் கடும் மன உளைச்சலுக்கும் தப்பிக்க முடியாத திணறலுக்கும் ஆட்பட்டிருக்கிறேன்.  உருட்டிப்புரட்டி வாழ்வது என்கிற அவஸ்தைநிறைந்த பற்றாக்குறை வாழ்வை எதிர்கொள்ளக்கூடாத அவ்வளவு சிறுவயதில் எதிர்கொண்டிருக்கிறேன். ஆனால் அதற்கெல்லாம் என்றாவது ஒருநாள் தீர்வு கிடைக்கும் என்று கற்பனை செய்து பார்க்கக்கூட அப்போதைய சூழல் இடம் தரவில்லை. அப்போது நான் அடைந்த வேதனைகளைத்தான் நீங்கள் மன அழுத்தம் என்று பகுப்பீர்களானால், அதற்கு எந்தவொரு நிவாரணத்தையும் தேடாமல் உள்ளுக்குள்ளேயே மருகியபடி அந்தக் கட்டத்தை நான் கடந்து வந்திருக்கிறேன். அது வெறும் பொருளாதாரரீதியான பிரச்னை மட்டுமே அல்ல. அது எனது தெரிவுகளையும் விருப்பங்களையும் மட்டுப்படுத்தி அதற்குரிய குணவியல்புகளைக் கொண்டவனாக என்னை மாற்றியிருக்கிறது. இன்றளவும் என்னை வழிநடத்துகிறது. அந்த நாட்களைப் பின்னோக்கிப் பார்ப்பதற்குக்கூட எனக்கு இன்னும் தைரியம் வரவில்லை.

ஆதவன் தீட்சண்யா

 என் வாழ்க்கையின் பிரிக்கமுடியாத மற்றோர் அங்கம் அலுவலகம். நான் உள்பட ஊழியர்களும் அதிகாரிகளும் எங்களது பொருளாதார நிலைகளை ஓரளவு உயர்த்திக் கொண்டோம். ஆனால் எங்களை இந்த நிலைக்கு உயர்த்திய துறை தொடர்ந்து நசிந்துவருவதாக கணக்கு காட்டப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் தகவல் தொடர்புச் சேவையை வழங்கும் ஒரு மிகப்பெரிய துறையை திட்டமிட்டே  நசிவடையச் செய்கிறது அரசு. மக்களின் தேவையை ஈடு செய்யும் வகையில் ஆளெடுப்பு இல்லாமல் அலுவலக இருக்கைகள் காலியாகக் கிடக்கின்றன. குடியிருப்புகள் காலியாகக் கிடக்கின்றன. மூழ்கிக்கொண்டிருக்கும் ஒரு கப்பலில் இருப்பதுபோன்ற நிச்சயமற்றத் தன்மைக்குள் தூக்கி வீசப்பட்டவர்களாக இருக்கிறோம். ஒரு மாதச் சம்பளக்காரனாக காலந்தள்ளப் பழகிவிட்ட நிலையில் அதில் ஒரு இடையறுப்பு நடந்தால் என்ன செய்வது என்ற யோசனையும் கவலையும் மற்றெல்லா ஊழியர்களையும்போலவே எனக்கும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதற்கு பரிகாரமோ நிவாரணமோ ஏதும் இல்லை என்பதே உண்மை.

 இவற்றைவிட அதிக மனஅழுத்தம் தரக்கூடியது சமூக நிகழ்வுகள்தான். எப்போதாவது நடக்கும் ஏதோவொரு நிகழ்வால் நீங்கள் பாதிக்கப்பட்டால் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் அதிலிருந்து நீங்கள் வெளியே வந்து, சற்று ஆசுவாசப்படுத்திக்கொள்ளலாம்,  இயல்புக்குத் திரும்பலாம். ஆனால், இப்போது நடக்கக்கூடிய எந்தவொரு விஷயமுமே, நீங்கள் ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்கான நேரத்தைக் கொடுப்பதில்லை. அன்றாடம் ஒரு இழவு வீட்டில் இருப்பதுபோன்ற மனநிலையைத்தான் சூழல் உருவாக்கிவருகிறது.

ஆதவன் தீட்சண்யா

அதிலிருந்து வெளியேறும் ஒரு வழியாக, இதைவிட கொடூரமான, மிகுதியான வாதையைத் தரும் வேறொரு பிரச்னைக்குள் போய் தலையிடுவதாகத்தான் இருக்கிறது. தலையீடு என்றால், நேரடியாக களத்துக்குப்போவதுதான் என்றில்லை. அந்தப் பிரச்னையில் மனம் மூழ்கி விடுகிறது. வேறு எது குறித்தும் யோசிக்க முடியாமல் மூளை மரத்துப்போகிறது. உதாரணத்துக்கு, தர்மபுரியில் மூன்று ஊர்கள் எரிக்கப்பட்டது பற்றிய கவலை தீரும் முன்னே இளவரசன் மர்மமாக இறந்து போகிறான். பிறகு கோகுல் ராஜ். இதோ இப்போது ராஜலட்சுமி, செளம்யா, நந்தீஷ் –சுவாதி…இசக்கி சங்கர்…

இருபத்தோராம் நூற்றாண்டின் ஆகச்சிறந்த வளர்ச்சிகளை அனுபவிப்பதாக, மேலும்மேலும் மனிதத்தன்மையுள்ள ஒரு வாழ்க்கையை நோக்கி சமூகத்தின் ஒரு பகுதியினர் தொடர்ச்சியாக முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கையில் கொண்டாடத்தக்க எத்தனையோ தருணங்கள் இருக்கும்போது, `எங்களை அடிச்சிட்டாங்க.. எங்க வீட்டை எரிச்சுட்டாங்க.. எங்களைப் பாலியல் துன்புறுத்தல் செஞ்சிட்டாங்க’ என்று, தொடர்ச்சியாக கதறிக் கொண்டும் புகார் சொன்னால் கேட்பதற்கான ஆட்களை தேடிக் கொண்டும் அலைபவர்களாகவும் உங்களை இந்தச்சமூகம்  நிறுத்தியிருக்கும்போது, எப்படி நீங்கள் ஆசுவாசப்படுத்திக்கொள்ள முடியும்?

 15 நிமிடங்களுக்கு ஒரு சாதிய, பாலியல் வன்கொடுமை நடந்து கொண்டிருக்கும் ஒரு சமூகத்தில், நான் ஆசுவாசம் அடைந்து கொள்வதற்கான ஒரு இடத்தை வழியை நானே தேடினாலும் கிடைக்காது. சுற்றிலும் எதுவும் நடந்துவிட்டுப் போகட்டும் என்று கண்டும் காணாமலும் இருந்தால் மட்டுமே ஆசுவாசப்படுத்திக்கொள்ள முடியும். சமூக நடப்புகளை ஓரளவு கவனித்துக்கொண்டிருக்கும் ஒருவரால் மனஅழுத்தத்திலிருந்து தப்பவே முடியாது.

ஆதவன் தீட்சண்யா

 நான் ஒரு வேலையில் இருக்கிறேன். என்னுடைய குடும்பமும், உறவினர்களும், நண்பர்களும் தோழர்களும் என்னிடம் பிரியமாக இருக்கிறார்கள். என்னுடைய அமைப்பு எனக்குப் பெரிய பலமாக இருக்கிறது. இவை எல்லாமே என்னுடைய புறத்தோற்றத்தை காப்பாற்றிக் கொள்வதற்கான பாதுகாப்பைத்தான் வழங்க முடியும். ஆனால், என்னுடைய உளவியலுக்குள் நிகழும் விஷயங்களை அவர்கள் தீர்மானிப்பதில்லை. அதை, வேறு யாரோ அதிகாரத்தின் மூலம் தீர்மானிக்கிறவர்களாக இருக்கிறார்கள். அவர்களே தொடர்ச்சியான மன நெருக்கடிகளை உருவாக்குகிறார்கள். வாழ்வின் கொண்டாடத்தக்க தருணங்களை துன்பத்தில் உழலக்கூடிய தருணங்களாக அவர்கள் மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். இந்த மாதிரியான தொடர் மனஅழுத்தம் ஒரு மனிதனை என்னவாக மாற்றும்?

 வெளித் தோற்றத்தில் நாம் சிரிக்கிறோம். நண்பர்களோடு மகிழ்ச்சியாக இருக்கிறோம். விழாக்களுக்கு செல்கிறோம். நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கிறோம். இவையெல்லாமே அகவயமான நெருக்கடிகளிலிருந்து தப்பிக்க ஒரு கற்பிதமான முயற்சியோ என்கிற சந்தேகம் எனக்கு எப்போதும் உண்டு. ஏனென்றால் கலந்துகொள்வது எல்லாமே இது தொடர்பானதாகவே இருக்கிறது. தீர்வுக்கான வழியே இல்லாததுபோன்று தொடர் அழுத்தங்கள்தான் இருக்கின்றன. தொடர்ந்து கடிகாரத்தைப் போல ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். நின்றுவிட்டால், நீங்கள் செத்துப்போய்விட்டதாக ஆகிவிடும்.

இந்தப் புறவயமான நெருக்கடிகளே அகவயமான நெருக்கடிகளை உருவாக்குகிறது. இதிலிருந்து தப்பித்து ஓட முடியாது.. தற்காலிகமாகவும் தப்பிக்க முடியாது. அதை எதிர்கொள்வது மட்டுமே ஒரே வழி. அதை எதிர்கொள்ளும் போராட்டத்தில் அல்லது முடிவில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல்கூட இருக்கலாம்.. எதிர்பார்த்த மாற்றம் நிகழாமல் போகலாம். ஆனால், அந்த அழுத்தத்திலிருந்து தப்பிக்க ஒரே வழி அதை எதிர்கொள்வது மட்டும்தான்.

ஆதவன் தீட்சண்யா

அதற்குப் பதிலாக, படிப்பது, பாடல் கேட்பது, சுற்றுப்பயணம் செல்வது என இவை எல்லாமே கோயிலுக்குப் போனால் மனம் சாந்தமாகிவிடும் என்று சொல்வதுபோன்ற, மூட நம்பிக்கைதான். இடைவிடாத சமூக நெருக்கடிகள் இருக்கும் ஒரு காலகட்டத்தில் எதை நான் உண்ண வேண்டும், எதைப் பேச வேண்டும், எப்படி இயங்க வேண்டும், என்னுடைய அன்றாடத்தை எப்படிக் கழிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வெளியே ஒரு சக்தி இருக்கிறது. எல்லாம் கண்காணிப்புக்கு உள்ளான ஒரு காலத்தில், நான் கண்காணிக்கப்படுகிறேன் என்று தெரியும்போது... நான்  எப்படி ஆசுவாசமாக இருக்கமுடியும்? ஆசுவாசம் என்பதே இட்டுக்கட்டப்பட்ட, ஒரு மாயையான வஸ்துதான்!’’ என்கிறார் ஆதவன் தீட்சண்யா.

அலையும் பெண்டுலத்திற்கு 

 அமைதி தேவையாம்

கடியாரம் நின்றுவிடுமே!

( ஆதவன் தீட்சண்யாவின் ஒரு தொகுப்பில் உள்ள ஒரு கவிதை)


டிரெண்டிங் @ விகடன்