வெளியிடப்பட்ட நேரம்: 18:14 (03/12/2018)

கடைசி தொடர்பு:18:15 (03/12/2018)

புயல் கடந்துவிட்டது... அடுத்து வெப்ப அலை... எதிர்கொள்வது எப்படி?! #HeatWaves

காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதால், கோடைக்காலம் இல்லாத நாள்களிலும் கூட வெப்பத்தின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது.

புயல் கடந்துவிட்டது... அடுத்து வெப்ப அலை... எதிர்கொள்வது எப்படி?! #HeatWaves

யற்கை நமக்களித்த கொடைகள் அனைத்தையும் அழித்துக்கொண்டே வருகிறோம். அதன் காரணமாக சுற்றுச்சூழல், காலநிலை மாறுபாடுகள் ஏற்பட்டுப் பல்வேறு புதிய புதிய நோய்கள் உருவாகி வருகின்றன. 

ஐக்கிய நாடுகள் சபை, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 27 முன்னணி கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வில், இந்தியாவில் 2012-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரையான ஐந்து ஆண்டுகளில் 4 கோடி இந்தியர்கள் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தின் தாக்கம் தொடங்கிய உடனேயே இந்தியாவிலும் அதன் பாதிப்பு ஏற்படத் தொடங்கிவிட்டது. 1901 முதல் 2007-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் சராசரி வெப்பநிலை 0.5 டிகிரி செல்சியஸ் அதிகரித்தது. 21-ம் நூற்றாண்டின் இறுதியில் வடக்கு, மத்திய மற்றும் மேற்குப் பகுதி இந்தியாவில் வெப்பத்தின் அளவு 2.2 முதல் 5.5 டிகிரி வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விவசாய நாடான இந்தியாவில் 2017-ம் ஆண்டில் மட்டும் இதன் பாதிப்பால், 7500 கோடி மணி நேரம் உழைப்பு வீணாகியுள்ளது என்று கணக்கிடப்பட்டுள்ளது. 

வெப்பம்

வெப்ப அலையின் பாதிப்பு இதோடு நின்றுவிடவில்லை. அதன் தீவிர பாதிப்பு உயிரிழப்புக்கே வழிவகுக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். வெப்ப அலை என்றால் என்ன, வெப்பம் கடல் அலைபோன்று அடிக்குமா என்ற சந்தேகம் நம்மில் பலருக்கு ஏற்படலாம். வழக்கமான அளவைக் காட்டிலும் வெப்பம் அளவுக்கு அதிகமாக அதிகரிப்பதே வெப்ப அலை (Heat waves). தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் வரையறையின்படி, இந்தியாவில் சமவெளிப் பகுதியில் 40 டிகிரி, மலைப்பகுதியில் 30 டிகிரி செல்சியஸைத் தாண்டுவது வெப்ப அலை என்ற நிலை ஏற்படுகிறது. சாதாரண வெப்பநிலையிலிருந்து 7 டிகிரி வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்தியாவில் மார்ச் மாதம் முதல் ஜூலை மாதம் வரை வெப்பத்தின் தாக்கம் அதிகமாகக் காணப்படும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.

வெப்ப அலையின் பாதிப்புகள், அதன் தீவிரம் குறித்து அவசரக்கால சிகிச்சை நிபுணர் ஏ.தனகீர்த்தி நம்மிடம் விரிவாகப் பேசினார்:

``நீண்ட நேரம் அல்லது தொடர்ச்சியாகப் பல நாள்கள் அதிக வெப்பத்தில் நமது உடல் வெளிப்படும்போது வெப்ப அலையால் டாக்டர் தனகீர்த்தி பாதிக்கப்படுகிறது. பெரும்பாலும் கோடைக்காலத்தின்தான் வெப்ப அலையின் தாக்கம் ஏற்படும்.  கோடைக்காலத்தைக் காட்டிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்போதுதான் பிரச்னைகள் ஏற்படத் தொடங்கும். வெப்ப மண்டலங்களில்தான் வெப்ப அலை பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது. குளிர்பிரதேசங்களில் இயல்பான வெப்பநிலை அதிகரிக்கும்போது பாதிப்புகள் ஏற்படக்கூடும். 

வெப்ப அலை பாதிப்பில் நான்கு நிலைகள் உள்ளன. முதல் நிலையில் நீர்ச்சத்து இழப்பு மட்டுமே ஏற்படும். தண்ணீர், நீர்ச்சத்துள்ள பானங்கள், உப்பு சர்க்கரைக் கரைசல் (ஓஆர்எஸ்) போன்றவற்றை அதிக அளவில் எடுத்துக் கொள்வதே இதற்குத் தீர்வு.

இரண்டாம் நிலையில் கை,கால், மூட்டுகளில் வீக்கம், தசைகள் இறுக்கம், தோலில் சிவப்பு நிற அரிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படும். இந்த நிலையில் சில நேரங்களில் சிலர் மயக்கமடைவதும் உண்டு. மூன்றாவது நிலை தீவிர சோர்வு. அதிக வியர்வை வெளியேறுதல், உடல் பலவீனம், தலைச்சுற்றல், குமட்டல், வாந்தி, கை, கால், மூட்டுகளில் வீக்கம், மயக்கமடைதல் போன்றவை இதன் அறிகுறிகள். 

நான்காவது நிலையில், வெப்பத்தின் நிலை 104 டிகிரிக்கு மேல் சென்று, அதிக நேரம் வெப்பம் தாக்கும்போது, `டெலிரியம்' (Delirium) எனும் தீவிரக் குழப்ப நிலை ஏற்படும். மேலும் வெப்பப் பக்கவாதம் (heat strokes) ஏற்பட்டுப் பல்வேறு உறுப்புகள் பாதிக்கப்படும். அடுத்த கட்டமாக பாதிக்கப்பட்டவர்கள் மயக்கமடைந்து கோமா நிலைக்குச் சென்றுவிடுவார்கள். அதைத் தொடர்ந்து உயிரிழப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. வெப்ப அலையால் பாதிக்கப்படும் பத்து சதவிகிதம் பேருக்கு நான்காம் நிலை பாதிப்பு ஏற்படலாம்.

veyil

வெயில் நேராக உடலில் பட வேண்டும் என்றல்ல, சரியான காற்றோட்டமில்லாத, ஈரப்பதம் காணப்படும், வெப்பம் அதிகமாக இருக்கும் அறைகள், வீடுகளில் இருந்தால் கூட வெப்ப அலையின் பாதிப்புகள் ஏற்படலாம். ஆனால் இவை பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது. முதல் இரண்டு நிலை பாதிப்புகள் மட்டுமே ஏற்படும். வெப்ப பக்கவாதம் எனப்படும் நிலை நேரடியாக சூரியவெப்பத்தின் தாக்கத்தினால் மட்டுமே வரும்.

தற்போது காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதால், கோடைக்காலம் இல்லாத நாள்களிலும் கூட வெப்பத்தின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. அதுபோன்ற நேரங்களில் தீவிரப் பாதிப்பு ஏற்படாவிட்டாலும் முதல் இரண்டு நிலையின் தாக்கங்கள் ஏற்படலாம். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் மூலம் வெப்பஅலை பாதிக்காமல் பாதுகாத்துக் கொள்ள முடியும். வெப்பஅலையானது வயதானவர்கள், குழந்தைகளை எளிதில் தாக்கும் என்பதால், அவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்.

வெயில் அதிகமாக இருக்கும் நேரங்களில் மெல்லிய ஆடைகள் அணிய வேண்டும். வெப்பம் அதிகமான இடங்களில் நின்று கொண்டிருந்தால் நிழல் உள்ள இடங்களில் ஒதுங்க வேண்டும். சன்ஸ்கிரீம் களிம்புகள் பூசிக் கொள்வதன் மூலம் அதிக வெப்பம் தோலை பாதிக்காமல் தடுக்க முடியும். வெப்பம் அதிகமாக உள்ள நேரங்களில் உடல் உழைப்பைக் குறைத்துவிட்டு, அமைதியாக இருக்க வேண்டும். 

வெப்ப அலை

ஒருநாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். குளிர்பானங்கள், மது போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டுமுறை குளிக்க வேண்டும். குளிக்க வாய்ப்பில்லை என்றால் கூட,  ஈரத்துணியைக் கொண்டு உடலைத் துடைக்கலாம். மாலை நேரங்களில் வீடுகளில் உள்ள ஜன்னல் கதவுகளைத் திறந்து வைத்து காற்றோட்டத்தை ஏற்படுத்த வேண்டும். 

விவசாயிகள், போக்குவரத்து போலீஸார், கட்டட வேலைகளில் ஈடுபவோர் போன்றவர்கள் தொடர்ந்து வெயிலில் பல மணி நேரம் நின்று பணியாற்றும் சூழலில் இருப்பவர்கள், அதிக அளவில் தண்ணீர் மற்றும் நீர்ச்சத்துள்ள ஆகாரங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். காரமான, பொறித்த, அதிகம் எண்ணெய் சேர்ந்துள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும். எளிதில் செரிமானம் ஆகக் கூடிய உணவுகளைச் சாப்பிட வேண்டும். வேலையின்போது சிறிய இடைவெளி எடுத்துக்கொண்டு நிழலில் இளைப்பாற வேண்டும்.

அதிக வெப்பத்தினால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு உடனடியாகச் செல்ல வேண்டும். மருத்துவமனையில் தாதுஉப்புகள் நிறைந்த நீர் குளிர்வித்து (cold saline) ஏற்றுவதன் முதலுதவி அளித்து, பாதிப்பின் தீவிரத்தைக் குறைக்க முடியும்" என்றார் அவர். 

வெப்ப அலையால் ஏற்படும் பாதிப்புக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துத் தீர்வு கொடுத்துவிடுவார். ஆனால், வெப்ப அலையே ஏற்படாமல் தவிர்க்க வேண்டுமானால் சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, காலநிலை மாற்றத்துக்குத் தீர்வு காண வேண்டும். அதற்கு நாம் அனைவரும் மனது வைக்க வேண்டும்.


டிரெண்டிங் @ விகடன்