`கால்களைதான் இழந்தோம், தன்னம்பிக்கையை அல்ல!’- விமானத்தில் உலகம் சுற்றும் மாற்றுத்திறனாளிகள் | Differently abled people operating flights

வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (03/12/2018)

கடைசி தொடர்பு:18:40 (03/12/2018)

`கால்களைதான் இழந்தோம், தன்னம்பிக்கையை அல்ல!’- விமானத்தில் உலகம் சுற்றும் மாற்றுத்திறனாளிகள்

ஜெனிவாவில் கடந்த நவம்பர் மாதம் ஒரு விமானப் பயணம் தொடங்கியது. எடை குறைந்த ஒரு சிறிய விமானத்தில் பல்வேறு நாடுகளில் உள்ள 150 பகுதிகளுக்குச் செல்லத் திட்டமிட்டு இரு மூத்த விமானிகள் களமிறங்கினர். இதுவரை 6 கண்டங்களில் உள்ள 80 நாடுகளுக்கு அவர்கள் இருவரும் பயணித்துவிட்டனர். இதிலென்ன விசேஷம் இருக்கிறது, விமானப் பயணம் எல்லாம் சர்வசாதாரணமாகிவிட்டது என்று நாம் நினைக்கலாம். ஆனால், விமானத்தில் பயணிக்கும் இரு விமானிகளும் கால்களை இழந்தவர்கள் என்பதுதான் விசித்திரம்.

விமானம் ஓட்டிய மாற்றுத்திறனாளிகள்

இருவரும் வீல் சேரில் அமர்ந்தவாறே, இறக்கை விரித்து விமானத்தில் இயல்பாகப் பறக்கின்றனர். அவர்களில் ஒருவர் பெயர் கியூம் ஃபெரல் (58). ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மடகாஸ்கர் தீவைச் சேர்ந்தவர், விமானியான இவர் கிளைடர் விமானத்தை ஓட்டப் பழகும்போது விபத்து ஏற்பட்டது. அதில் இரு கால்களின் செயல்பாடும் பாதிக்கப்பட்டது. 

அதேபோல மற்றொருவர் பெயர் மைக் லோம்பெர்க் (60). இவரும் விமானிதான். சாலை விபத்து ஒன்றில் சிக்கி முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டு கால்கள் செயலிழந்து விட்டன. மாற்றுத்திறனாளிகள் விமானம் ஓட்டுவது ஒன்றும் புதிதல்ல. நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மாற்றுத்திறனாளிகள் விமானம் ஓட்டுவதைச் சாத்தியப்படுத்தியுள்ளது. 

பிரான்ஸ் நாட்டில் பார்வையற்றவர்கள், அமெரிக்காவில் செவித்திறன் அற்றவர்கள் குழுவாக இணைந்து விமானம் ஓட்டி வருகின்றனர். இங்கிலாந்தில் பல்வேறு மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கு விமானம் ஓட்டுவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால், எடை குறைந்த சிறிய விமானத்தை இயக்குவதில் இவர்கள் இருவர்தான்.

முன்னோடிகள். இந்த விமான சுற்றுப்பயணத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனத்துக்காக நிதி திரட்டும் நல்ல முயற்சியையும் மேற்கொண்டு வருகின்றனர்.


[X] Close

[X] Close