வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (03/12/2018)

கடைசி தொடர்பு:19:32 (03/12/2018)

`போன் மட்டுமல்ல டி.வியை அதிக நேரம் உற்றுப் பார்த்தாலும் பிரச்னைதான்!’ - குழந்தைகளுக்கு டாக்டரின் அட்வைஸ்

` ஸ்மார்ட்போனை அதிகமாகப் பார்த்த 4 வயதுக் குழந்தைக்கு கண் ஆபரேஷன்' என்கிற செய்தி பரவலாகப் பெற்றோர்களின் மொபைல் போன்களுக்கும் வந்துகொண்டிருக்கிறது. அந்த லிங்கை ஓப்பன் செய்தால், தாய்லாந்தைச் சேர்ந்த 4 வயது பெண் குழந்தையொன்று, கடந்த  2 வருடங்களாக எந்நேரமும் ஸ்மார்ட்போனே கதி என்று கிடந்ததால், 'சோம்பேறிக் கண்' பிரச்னையால் பாதிக்கப்பட்டு ஆபரேஷன்  வரைக்கும் சென்றிருக்கிறாள் எனச் செய்தி விரிகிறது.

தாய்லாந்து குழந்தை

நம் நாட்டிலும் கிட்டத்தட்ட எல்லோருடைய வீட்டுப் பிள்ளைகளுமே 'ஸ்மார்ட்போனும் கண்களுமாகவே' இருப்பதால், இந்தச் செய்தி  மனதுக்குள் ஒரு திடுக்கிடலை ஏற்படுத்திவிட்டது. இதில் எந்தளவுக்கு மருத்துவ உண்மை இருக்கிறது எனத் தெரிந்துகொள்ள, உடனே குழந்தைகள் நல மருத்துவர் தனசேகர் கேசவலுவைத் தொடர்புகொண்டோம். 

குழந்தை நல மருத்துவர் தனசேகர்`` `சோம்பேறி கண்' என்கிற பிரச்னை ஒரு குழந்தைக்கு பிறப்பில் இருந்தே இருக்கிற பிரச்னை. இந்தப் பிரச்னையில், குழந்தையின் ஒரு கண்ணில் பார்வைக் குறைவாக இருக்கும். இன்னொரு கண்ணில் பார்வை நார்மலாக இருக்கும். சோம்பேறிக் கண் பிரச்னையுள்ள குழந்தையானது, நார்மலாக உள்ள ஒரு கண்ணை மட்டும் அதிகமாகப் பயன்படுத்தும். இதனால், பிரச்னையுள்ள கண் இன்னும் இன்னும் அதிகமாகப் பாதிக்கப்படும். நீங்கள் சொன்ன செய்தியில் இருக்கிற சிறுமிக்கு, பிறவியில் இருந்தே 'சோம்பேறிக் கண்' பிரச்னை இருந்திருக்கும். சிறுமி, ஸ்மார்ட்போனை எந்நேரமும் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்ததால் அது இன்னமும் அதிகமாகியிருக்கிறது. போனுக்குப் பதில் டி.வி.யை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தால்கூட இந்தப் பிரச்னை அதிகமாகித்தான் இருக்கும்.

பாதிக்கப்பட்ட சிறுமி

PC: www.elitereaders.net

அதனால், `போன் பார்த்ததால் சோம்பேறிக் கண் பிரச்னை வரும்; அது அறுவை சிகிச்சை வரை கொண்டுசெல்லும்' என்று பயந்துவிடாதீர்கள். அதே நேரம், 'மொபைல் போன்' இருக்கிற பிரச்னையை அதிகப்படுத்தி விடும் என்பதால், இந்தச் செய்தியை ஒரு எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொண்டு, உங்கள் பிள்ளைகளின் கேட்ஜெட் நேரத்தைக் குறையுங்கள்'' என்றார் மருத்துவர் தனசேகர்!