வெளியிடப்பட்ட நேரம்: 12:05 (04/12/2018)

கடைசி தொடர்பு:12:05 (04/12/2018)

போலி மருத்துவரைக் கண்டுபிடிப்பது எப்படி?- எளிய வழிமுறைகள்!

 இன்றைய சூழலில் தமிழ்நாட்டில் மட்டும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி மருத்துவர்கள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

போலி மருத்துவரைக் கண்டுபிடிப்பது எப்படி?- எளிய வழிமுறைகள்!

வ்வப்போது `போலி டாக்டர் கைது' என்ற செய்திகளைக் கடந்து செல்வோம். மருத்துவமே படிக்காமல் `டாக்டர்' எனக் கூறிக்கொண்டு சிகிச்சை அளிக்கும்போது பாதிப்பு ஏற்படும் நிலையில், அவர்கள் வெளிச்சத்துக்கு வருகிறார்கள். கைது செய்யப்படுகிறார்கள். ஆனால், கைது செய்யப்படும் போலி மருத்துவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் சொற்பம்தான். இன்றைய சூழலில் தமிழ்நாட்டில் மட்டும் முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட போலி மருத்துவர்கள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

போலி மருத்துவர்கள்

மருத்துவமே படிக்காமல் கிளினிக் அல்லது மருத்துவமனை நடத்துபவர்களே போலி டாக்டர்கள். ஏதாவது ஒரு மருத்துவரிடம் உதவியாளராகப் பணிபுரிந்து, அனுபவ அடிப்படையில் மருத்துவம் பார்ப்பவர்கள். `பாராமெடிக்கல்' என்னும் மருத்துவம் சார்ந்த பணிகளைச் செய்யும் நர்ஸ்கள், ஆயாக்கள், மருந்தாளுநர்கள் போன்றோரும் சிகிச்சையளிக்கின்றனர். 

மருத்துவர் என்று சொல்லப்படுபவர், நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதற்கு முன், நோயின் தன்மையைக் கண்டறிந்து பலவழிகளில் ஆய்வு செய்வார். அத்துடன் அந்த நோயைக் கண்டறிந்து (Diagnose) உறுதிப்படுத்தியபிறகே மருந்துகளைப் பரிந்துரைப்பார். குறிப்பாக, மருந்து மாத்திரைகளைப் பரிந்துரைப்பதற்குமுன், அவை உடலில் எப்படிச் செயல்படும், மருந்து உடலுக்குள் சென்றதும் எப்படி வினை புரியும், பக்கவிளைவுகள் இல்லாமல் எப்படி மருந்து கொடுப்பது என்றெல்லாம் ஆராய்வார். இதுபோன்று மருந்து அறிவியல் சார்ந்த விஷயங்களை நன்றாக அறிந்தபிறகே ஒரு மருத்துவரால் நோயாளிக்கு மருந்துகளைப் பரிந்துரைக்க இயலும். இவையெல்லாம் அனுபவத்தில் வர வாய்ப்பில்லை. மருத்துவக் கல்லூரிகளில் படித்து ஹவுஸ் சர்ஜன் பயிற்சி முடித்தபிறகே, இந்த மருத்துவ அறிவைப் பெறமுடியும்.

இதேபோல் மாற்று மருத்துவமான சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி போன்ற துறைகளில் படித்துப் பட்டம் படித்தவர்கள், அலோபதி சிகிச்சை அளிப்பதும்கூட ஒருவகையில் போலி மருத்துவத்தின் கீழ்தான் சேரும். ஆம், இவர்களுக்கு அலோபதி முறை மருத்துவம் பற்றித் தெரியாது. அதுபோல, அலோபதி மருத்துவர்கள் மாற்றுமுறை சிகிச்சை அளிப்பதும்கூட குற்றமே. காரணம், அலோபதி மருத்துவர்களுக்கு மாற்றுமுறை மருத்துவம், அதுபற்றிய மருந்து அறிவியல் தெரியாது. இவைதவிர அலோபதி மற்றும் மாற்று மருத்துவமுறை எதுவும் பயிலாமல், அனுமதி பெறாத நிறுவனங்களில் சில மாதங்களோ அல்லது சில வருடங்களோ படித்துச் சான்றிதழ் (சர்டிஃபிகேட் கோர்ஸ்) பெற்றுவிட்டு, தானும் ஒரு மருத்துவர் என்று சிகிச்சை அளிப்பதும் போலி மருத்துவமே. இன்றையசூழலில் இதுபோன்ற போலி மருத்துவர்கள் அதிகம் உள்ளனர்.

போலி மருத்துவர்

அதேநேரத்தில் எத்தகைய படிப்பு படித்தாலும், ஒரு மருத்துவர் என்பவர் மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்தால் மட்டுமே அவரால் சிகிச்சை அளிக்கமுடியும். அலோபதி மருத்துவர்கூட படித்து விட்டு, மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யாமல், பதிவு எண் பெறாமல் மருத்துவச் சிகிச்சை செய்வது குற்றமே. உதாரணமாக ரஷ்யா, உக்ரைன், ஜார்ஜியா, சீனா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் மருத்துவம் படித்துவிட்டு இந்தியாவில் மருத்துவத் தொழில் செய்வார்கள். அவர்கள், இந்தியாவில் எப்.எம்.ஜி.ஈ (Foreign Medical Graduate Screening Exam-  FMGE) என்னும் ஸ்கிரீனிங் தேர்வு எழுதி அதில் தேர்ச்சிபெற்று, அதன்பிறகு ஒரு வருடம் அரசு அங்கீகாரம்பெற்ற மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி எடுக்கவேண்டும். அத்துடன் மருத்துவ கவுன்சிலின் பதிவு எண் பெற்றபிறகே இந்தியாவில் மருத்துவம் செய்யமுடியும்.

ரஷ்யா போன்ற சில நாடுகளில் எம்.டி (MD) பட்டம் பெற்றாலும் அவர்கள் இங்கே எம்.பி.பி.எஸ் மருத்துவராகவே கருதப்படுவார்கள் என்ற நிபந்தனையுடன்தான் மருத்துவ கவுன்சில் அவர்களைப் பதிவு செய்கிறது. காரணம், அவர்கள் எம்.பி.பி.எஸ் முடிக்காமலே எம்.டி படிக்கும் வசதி சில நாடுகளில் உள்ளது. அலோபதி மருத்துவப் பட்டமான எம்.பி.பி.எஸ் பெற்ற மருத்துவர்கள்கூட தன் பெயருக்குப் பின், தேர்ச்சி பெறாத அல்லது மருத்துவ கவுன்சிலில் அங்கீகாரம் இல்லாத டிகிரிகளைப் போட்டுக்கொண்டு சிகிச்சை அளிக்கிறார்கள். இதுவும் ஒருவகையில் போலி மருத்துவமே, இதுவும் குற்றமே.

போலி மருத்துவர்

போலி மருத்துவர்களை எப்படி அடையாளம் காண்பது?

போலி மருத்துவர்களில் பெரும்பாலானோர் தங்களது லெட்டர்பேடிலோ அல்லது கிளினிக் போர்டிலோ தங்கள் பெயரைப் பயன்படுத்தாமல் கிளினிக் பெயரை மட்டுமே பயன்படுத்துவார்கள். ஒருவேளை அதில் தங்கள் பெயரைப் போட்டால், பெயருக்குப் பின்னால் மருத்துவக் கவுன்சில் பதிவு எண் மற்றும் படித்த டிகிரியைப் போட மாட்டார்கள். ஒரு சிலர் இறந்துபோன மருத்துவர்கள் அல்லது இந்தியாவில் பல  ஆண்டுகளாக இல்லாத மருத்துவர்களின் பெயர் மற்றும் பதிவு எண்ணைப் பயன்படுத்தி போலி மருத்துவம் செய்கிறார்கள். இன்னும் சிலர், தங்களுக்குத் தெரிந்த,வேறு இடத்தில் பணிபுரியும் மருத்துவர்களின் பெயர்களையும், மருத்துவ கவுன்சில் பதிவு எண்ணையும் பயன்படுத்தி, மருத்துவத் தொழில் செய்கின்றனர். இது தண்டனைக்குரிய ஆள்மாறாட்ட கிரிமினல் குற்றமாகும்.

கண்டுபிடிக்க எளிய வழிகள்!

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில், போலி மருத்துவர்களை அடையாளம் காண எளிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. உங்கள் பகுதியில் இருக்கும் மருத்துவரின் லெட்டர்பேடிலோ அல்லது பெயர்ப்பலகையிலோ உள்ள மருத்துவ எண், பதிவு எண், மருத்துவர் பெயர், படித்த பட்டங்கள் ஆகியவற்றைக் குறித்துக்கொண்டு கீழ்க்கண்டவாறு உங்கள் மொபைல்போனிலிருந்து குறுஞ்செய்தி அனுப்புங்கள். மெசேஜ் அனுப்பும் பகுதிக்குச் சென்று `TNMC (Space) REGNO (Space) பதிவு எண்' டைப் செய்து `56767' என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். உடனடியாக மருத்துவ கவுன்சிலிலிருந்து அந்தப் பதிவெண்ணைக் கொண்ட மருத்துவர் மருத்துவ கவுன்சிலால் அங்கீகாரம் பெற்ற பட்டங்கள் உள்ளிட்ட விவரங்களுடன் ஒரு பதில் வரும்.

உதாரணமாக, `TNMC REGNO 53065' என்று டைப் செய்து `56767' என்ற எண்ணுக்கு அனுப்பினால் `Doctor Name: MOHAMED KIZHAR IRSHATH DOWLATH M.B.B.S., D.C.H' என்று பதில் வரும். அதை வைத்து அவர் உண்மையான மருத்துவரா, அவர் தனது பெயருக்குப் பின்னால் பயன்படுத்தும் படிப்புகள், அவர் படித்த படிப்பு மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டப் படிப்புதானா என்பதை அறிந்து அந்த மருத்துவரின் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ளலாம். சில உண்மையான மருத்துவர்கள்கூட `MBBS' மட்டும் படித்துவிட்டு தங்களை பல்வேறு துறையின் சிறப்பு மருத்துவர் என்று போலி மருத்துவம் செய்வார்கள். அவர்களைப் பற்றிய விவரங்களை இந்தக் குறுஞ்செய்தி மூலம் கண்டுபிடித்து விடலாம். 

போலி மருத்துவர்

டாக்டர்களுக்கு ஸ்மார்ட் போர்டு (Smart Board) முறை

போலி மருத்துவர்களில் சிலர், வேறு மருத்துவரின் பெயர் மற்றும் பதிவு எண்ணைப் பயன்படுத்துவதை இந்தமுறை மூலம் கண்டுபிடிக்க முடியாது. இதற்கும் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் புதிய வழிமுறையைக் கொண்டுவரவிருக்கிறது. அதாவது டாக்டர்களுக்கு ஸ்மார்ட் போர்டு என்னும் முறையைக் கொண்டுவருகிறது.

பதிவு பெற்ற மருத்துவர்கள், குறிப்பிட்ட தொகை செலுத்தி இந்த போர்டைப் பெற்று தங்கள் கிளினிக்கில் வைக்க வேண்டும். அதில் மருத்துவரின் பெயர், பதிவு எண், அவரது டிகிரி, மருத்துவரின் புகைப்படம் போன்றவை இருக்கும். இதன்மூலம் ஆள்மாறாட்டம் செய்து போலி மருத்துவம் செய்பவர்களைக் கண்டுபிடித்துவிடலாம். இந்த போர்டில் ஒரு ஹோலோகிராம் (Hologram) இருக்கும். நமது ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்து இந்த இந்த ஹோலோகிராமுடன் ஒப்பிட்டுப் போலி மருத்துவரைக் கண்டுபிடித்துவிடலாம். இந்த ஸ்மார்ட் போர்டு திட்டம் மருத்துவ கவுன்சிலில் அங்கீகாரம்பெற்ற மருத்துவருக்கு மட்டுமே கொடுக்கப்படும். இது இன்னும் முழுஅளவில் நடைமுறைக்கு வராவிட்டாலும் இன்னும் சில மாதங்களில் வந்துவிடும். இதுபற்றி மேலும் விவரம் அறிய http://tnmedicalcouncil.org என்ற இணையதளத்துக்குச் சென்று பார்க்கலாம். அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி, பட்டப் படிப்புகள் பற்றிய விவரங்களை அறிய http://www.mciindia.org என்ற இணையதளத்துக்குச் செல்ல வேண்டும். 

போலி மருத்துவர்

போலி டாக்டர்களால் ஏற்படும் ஆபத்துகள்!

போலி மருத்துவர்களுக்கு மருத்துவத்தின் அடிப்படை அறிவியலான உடல் கூறியல் (Anatomy),  உடல் செயலியல் (physiology), உயிர் வேதியியல் (Bio Chemistry), மருந்தியல் ( (Pharmacology), நோய்க்குறியியல் (Pathology),  நுண்ணுயிரியல் (Micro Biology) போன்றவை அறவே தெரியாது. அத்துடன் மருத்துவ அறிவியல் படிப்புகளின் அடிப்படைகளும் அவர்களுக்குத் தெரியாது. இவை எதுவும் தெரியாமல் அனுபவ அடிப்படையில் மட்டுமே மருத்துவம் செய்வதால் நோயாளிகளின் உடல்நிலை பாதிக்க வாய்ப்பு உள்ளது. அவர்கள் கொடுக்கும் தவறான மருந்துகளால் நாள்பட்ட நோய்களான சிறுநீரகப் பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு போன்றவை ஏற்படலாம். சிலநேரங்களில் மரணம்கூட ஏற்பட வாய்ப்பு உள்ளது.   


டிரெண்டிங் @ விகடன்