வெளியிடப்பட்ட நேரம்: 13:14 (04/12/2018)

கடைசி தொடர்பு:13:14 (04/12/2018)

கல்லீரல், மூளை, கண், நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் `வில்சன்' நோய்கள்- அலர்ட்!

ஊட்டச்சத்துக் குறைபாடு... வளரும் நாடுகளுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாகி வரும் ஓர் அபாயம். இன்றைய சூழலில் போதிய ஊட்டச்சத்து கிடைக்காமல் நாடு முழுவதும் ஏராளமான குழந்தைகளும், பெண்களும் பாதிக்கப்படுகிறார்கள்.

கல்லீரல், மூளை, கண், நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் `வில்சன்' நோய்கள்- அலர்ட்!

ட்டச்சத்துக் குறைபாடு... வளரும் நாடுகளுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாகி வரும் ஓர் அபாயம். இன்றைய சூழலில் போதிய ஊட்டச்சத்து கிடைக்காமல் நாடு முழுவதும் ஏராளமான குழந்தைகளும், பெண்களும் பாதிக்கப்படுகிறார்கள். அதன்காரணமாக, புதுப்புது நோய்கள் தாக்குகின்றன. உலகம் முழுவதும் ஊட்டச்சத்து குறித்த ஏராளமான விழிப்புஉணர்வுப் பிரசாரங்கள் உலகச் சுகாதார நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஊட்டச்சத்துக் குறைபாடு

இதையடுத்து ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்கான மருத்துவ உதவிகளையும், மானியங்களையும் ஆளும் அரசுகள் வழங்கி வருகின்றன. மனிதனின் ஆரோக்கியத்துக்கு ஊட்டச்சத்து மிகவும் அவசியம். ஆனால், அதீத ஊட்டம் ஆபத்து ஏற்படுத்தும் என்கிறார்கள் மருத்துவர்கள்.  வைட்டமின்களோ, உலோகங்களோ எதுவாக இருந்தாலும் தேவையான அளவே உடலில் இருக்க வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதான்.

வைட்டமின்கள் நம் உடலின் தேவைக்கு அதிகமாகும்போது `ஹைப்பர்விட்டமினோசிஸ்' (Hypervitaminosis) என்ற பாதிப்பு ஏற்படுகிறது. ஒவ்வோர் உலோகங்கள் அதிகரிக்கும்போதும் ஒவ்வொருவிதமான பாதிப்பு உண்டாகும். அந்தவரிசையில், நம் உடலில் தாமிரம் (Copper) தேவைக்கு அதிகமாகும்போது ஏற்படும் ஒரு பாதிப்புதான் `வில்சன் நோய்கள்'. முதன்முதலில் இந்த பாதிப்பைக் கண்டறிந்தவர் இங்கிலாந்தைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் சாமுவேல் அலெக்ஸாண்டர் கின்னியெர் வில்சன்  (Samuel Alexander Kinnier Wilson). எனவே, அவரது பெயரிலேயே இந்த பாதிப்பும் அழைக்கப்படுகிறது.

வில்சன் நோய்

`வில்சன் நோய்கள்', மூளை மற்றும் கல்லீரலைப் பாதிக்கக்கூடியவை. 

`வில்சன் நோய்கள்' எனும் இந்தப் பாதிப்பு எதனால் உண்டாகிறது என்று விரிவாக விளக்குகிறார் கல்லீரல் சிறப்பு நிபுணர் விவேக்.

`` நம் உடலில் செல்கள், நரம்பு மண்டலம் ஆகியவற்றின் வளர்ச்சிக்குத் தாமிரம் மிகவும் அவசியம். நாம் சாப்பிடும் காய்கறிகள், பழங்கள், தானியங்கள் மற்றும் அவற்றை விளைவிக்கப் பயன்படுத்தப்படும் உரங்கள் மூலமாகவே நம் உடலுக்குத் தேவையான தாமிரம் கிடைத்துவிடும். அது நம் ரத்தத்தில் கலந்து உடலின் அனைத்து உறுப்புகளையும் சென்றடையும். கல்லீரலில் உற்பத்தியாகும் `செருலோபிளாஸ்மின்' (Ceruloplasmin) எனும் புரதம் உடலுக்குத் தேவையான அளவு தாமிரத்தை எடுத்துக்கொண்டு, மீதியைப் பித்தம் வழியாக வெளியேற்றிவிடும். `செருலோபிளாஸ்மின்' புரதம் சரியான அளவு சுரக்காமல் போனால், அதிகமாக உள்ள தாமிரம்...  கல்லீரல், மூளை, கண், நரம்பு மண்டலம் ஆகிய இடங்களில் ஆங்காங்கே தங்கிவிடும். இப்படித் தாமிரம் தங்குவதால் கல்லீரல் மற்றும் மூளை பாதிக்கப்படும். கல்லீரல் பாதிக்கப்படுவதால் மஞ்சள் காமாலை, வாந்தி, அடிவயிற்றில் நீர்க்கோத்தல், கால்வலி, தோல் மஞ்சள் நிறமாக மாறுதல், அரிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும். அதிகபட்சமாகக் கல்லீரல் புற்றுநோய் வரை உண்டாகும் வாய்ப்புகளும் உண்டு. மூளை பாதிக்கப்படுவதால் தசை விறைப்பு போன்ற பாதிப்புகள், வாய் குளறுதல், நரம்புத் தளர்ச்சி, வலிப்பு நோய், ஆளுமை மாறுபாடு,  மாயத்தோற்றம் (Hallucination), பதற்றம் போன்ற பாதிப்புகள் உண்டாகும்.

கல்லீரல்

இது கண்ணில் படிவதால் கருவிழிப்படலத்தின் விளிம்பைச் சுற்றி ஒரு வளையம் ஏற்படும். அது `கைசர் பிளைச்சர் ரிங்க்' (Kayser Fleischer ring) எனப்படும். இதனால் பெரிய பாதிப்பு எதுவுமில்லை என்றாலும், வில்சன் நோயால் பாதிக்கப்பட்டதற்கான அறிகுறியாக அதை எடுத்துக்கொள்ளலாம். சிலருக்கு இதயச் செயலிழப்பு, `அரித்மியாஸ்' (Arrhythmias) எனப்படும் இதயப் படபடப்பு போன்ற பாதிப்புகள் வர வாய்ப்பிருக்கிறது. சிறுநீரகத்தில் தாமிரம் தங்குவதால் சிறுநீரகப் பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஐந்து முதல் முப்பத்தைந்து வயது உடையவர்களுக்கு இந்தப் பாதிப்பு ஏற்படும். வளர்ச்சிக்குறைபாடு, அடிக்கடி தலைவலி, நடுக்கம், வலிப்பு போன்ற பாதிப்புகள் இருந்தால் அது வில்சன் நோய்களின் பாதிப்பாக இருக்கலாம். இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். 10, 15 வயதிலேயே கல்லீரல் செயலிழப்பு இருந்தால் கண்டிப்பாக அது வில்சன் நோய்களின் பாதிப்பாகத்தான் இருக்கும்'' என்கிறார் மருத்துவர் விவேக்.

கண்


வில்சன் நோய்களை எத்தகைய பரிசோதனைகள் மூலம் கண்டறியலாம், அதைச் சரிசெய்யும் வழிமுறைகள் என்னென்ன என்பதையும் மருத்துவர் விவேக் விளக்கினார் விவேக்

``கல்லீரல் செயல்பாட்டுச் சோதனை (Liver Functioning test) செய்வதன்மூலம் இந்தப் பாதிப்பைக் கண்டறியலாம். அடுத்ததாக சி.டி ஸ்கேன் செய்து பார்த்தால் கல்லீரல் சுருங்கியிருப்பது தெரியும். ரத்தப் பரிசோதனையில் `செருலோபிளாஸ்மின்' குறைவாக இருப்பது தெரியும். அதேநேரம் தாமிரத்தின் அளவு அதிகரித்திருப்பது தெரியாது. சிறுநீரைப் பரிசோதித்துப் பார்த்தால்தான் தாமிரத்தின் அளவு தெரியவரும். சராசரியாக 40 மைக்ரோமோலுக்கும் (Micrimole/24hrs) குறைவாகத் தாமிரம் இருக்க வேண்டும். அதற்கு அதிகமாக இருந்தால், உடலில் தாமிரம் அதிகமாக உள்ளது என்று பொருள். கல்லீரலில் ஊசியைச் செலுத்தி அதிலிருந்து சிறு சதையைத் தனியாக எடுத்து பரிசோதனை செய்து பார்க்கலாம். அடுத்ததாக மூளைப்பகுதியில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்து பார்ப்பதன்மூலம் மூளையில் தாமிரம் படிந்திருக்கிறதா என்பதைக் கண்டறியலாம்.

வில்சன்

கண் பரிசோதனை செய்தும் தாமிரம் படிந்திருப்பதைக் கண்டறிய முடியும். இது ஒரு மரபணு நோய். பெற்றோர், மூதாதையர் மூலம் குழந்தைகளுக்கு வரலாம்.  `ATP7B' என்கிற ஜீன் பாதிப்பே இந்த நோய்க்குக் காரணம். இந்தப் பாதிப்பை வருமுன் தடுப்பதற்கான வழிகள் இல்லை. வந்தபிறகு சரிசெய்வதற்கான வாய்ப்புகள் மட்டுமே இருக்கின்றன. எனவே, உடலில் தாமிரத்தின் அளவு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டால், தாமிரப் பாத்திரத்தில் சமைத்த உணவுகளைச் சாப்பிடுவது, சாக்லேட், நட்ஸ், மீன், இறால் ஆகிய உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

மரபணூ

கல்லீரல் சுருக்கம் உருவாகும் முன்பே இந்தப் பாதிப்பைக் கண்டறிந்துவிட்டால், குறிப்பிட்ட சில மாத்திரைகளின் மூலம் சரிசெய்துவிடலாம். கல்லீரல் அறுவை சிகிச்சை செய்தால், இந்தப் பாதிப்பை முழுமையாகச் சரிசெய்யமுடியும். புதிய கல்லீரலில் `செருலோபிளாஸ்மின்' சரியாகச் சுரந்து தாமிரம் படிவது தடுத்து நிறுத்தப்படும். அதன் காரணமாக கல்லீரல் செயலிழப்பைத் தவிர்க்கலாம். குடும்பத்தில் ஒருவருக்கு இந்தப் பாதிப்பு இருந்தாலும், ஒட்டுமொத்தக் குடும்பமும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்`` என்கிறார் மருத்துவர் விவேக். 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்