வெளியிடப்பட்ட நேரம்: 12:45 (06/12/2018)

கடைசி தொடர்பு:12:45 (06/12/2018)

உயிரிழந்த பெண்ணிடம் தானம் பெற்ற கர்ப்பப்பையின் மூலம் பிறந்த முதல் குழந்தை!

யிரிழந்த பெண்ணிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட கர்ப்பப்பையின்மூலம் அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார், பிரேஸிலைச் சேர்ந்த பெண் ஒருவர். உயிரிழந்தவரிடமிருந்து தானம் பெற்ற கர்ப்பப்பையைப் பொருத்தி, குழந்தை பிறந்துள்ளது உலகிலேயே இதுதான் முதல்முறை. குழந்தை இல்லாத தம்பதிக்கு செயற்கைக் கருத்தரிப்பும் கைகொடுக்காத நிலையில், வாடகைத் தாய் அல்லது குழந்தையைத் தத்தெடுத்தல் ஆகிய இரண்டு மட்டுமே தேர்வாக இருந்தது. அதன்பிறகு, ரத்த சொந்தங்களில் உயிருடன் இருப்பவர்களிடமிருந்து கர்ப்பப்பை தானம் பெறப்பட்டு பொருத்தி, குழந்தை பெறும் தொழில்நுட்பம் கண்டறியப்பட்டது. 

மருத்துவர் குழு

உயிருடன் இருப்பவர்களிடமிருந்து தானம் பெற்றுப் பொருத்திய கர்ப்பப்பையின் மூலம், 2013-ம் ஆண்டு ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பெண்ணுக்கு முதன்முதலில் குழந்தை பிறந்தது. உலகம் முழுவதும் இதுவரை 39 பேருக்கு அதுபோன்று கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதில் 11 பேருக்கு குழந்தை பிறந்துள்ளது. அவர்களில்  சமீபத்தில் குழந்தை பெற்ற மீனாட்சி வாலன்ட் என்ற இந்தியப் பெண்ணும் ஒருவர்.

தொழில்நுட்பத்தின் அடுத்த நகர்வாக, உயிரிழந்தவர்களிடமிருந்து கர்ப்பப்பையைத் தானம் பெற்றுப் பொருத்தி, குழந்தை பெறுவதை சாத்தியமாக்கும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டனர். அமெரிக்கா, செக் குடியரசு, துருக்கி போன்ற நாடுகளில்... உயிரிழந்தவர்களிடமிருந்து கர்ப்பப்பை தானம் பெற்று பொருத்தப்பட்டன. ஆனால், அவ்வாறு பொருத்தியவர்களுக்கு குழந்தை பிறப்பு இதுவரை சாத்தியப்படவில்லை. 

கர்ப்பப்பை

தொடர் முயற்சிகளுக்குப் பிறகு, முதன்முதலில் அதில் வெற்றி கண்டுள்ளனர் பிரேஸிலைச் சேர்ந்த மருத்துவர்கள். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 45 வயது பெண்ணிடம் இருந்து தானம் பெறப்பட்ட கர்ப்பப்பை, கர்ப்பப்பையே இல்லாமல் பிறந்த ஒரு பெண்ணுக்கு பொருத்தப்பட்டது. கர்ப்பப்பை பொருத்திய 5 மாதங்களுக்குப் பின்னரும் புதிய உறுப்பை அந்தப் பெண்ணின் உடல் நிராகரிக்கவில்லை. மாதவிடாய் சுழற்சியும் சரியாக ஏற்பட்டது. இதையடுத்து, ஏற்கெனவே சேமித்துவைத்திருந்த கருமுட்டை பெண்ணின் கர்ப்பப்பைக்குள் செலுத்தப்பட்டது. 

தாய்ப்பால்

புதிய கர்ப்பப்பையை பொருத்திய ஏழாவது மாதத்தில், அந்தப் பெண் கர்ப்பம் தரித்தது உறுதிசெய்யப்பட்டது. கர்ப்ப காலத்திலும் கருவில் இருந்த குழந்தையும் தாயும் ஆரோக்கியமாக இருந்தனர். கருத்தரித்து 35 வாரங்கள் 3 நாள்கள் கழித்து சிசேரியன் அறுவைசிகிச்சை மூலம் 2.550 கிராம் எடையில் ஆரோக்கியமான பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார் அந்தப் பெண். குழந்தைக்கு தற்போது 7 மாதம் ஆகிறது. அதன் எடை 7.2 கிலோ எடையாக அதிகரித்துள்ளது. குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டுவதாகவும், அந்தத் தாய் தெரிவித்துள்ளார்.