`நிதான உணவுத் திருவிழாவில் பங்கேற்கலாமா?!- ஏன், எங்கே, எப்படி? #TerraMadreDay | An article about the Slow Food International Festival

வெளியிடப்பட்ட நேரம்: 18:33 (06/12/2018)

கடைசி தொடர்பு:18:33 (06/12/2018)

`நிதான உணவுத் திருவிழாவில் பங்கேற்கலாமா?!- ஏன், எங்கே, எப்படி? #TerraMadreDay

பாரம்பர்ய உணவுகளைத் தயாரிக்கும் உலகின் கடைக்கோடியில் வாழும் உணவுக் கலைஞர்களை உலக அரங்கில் அறிமுகப்படுத்தவும் இந்த விழா முன்னெடுக்கப்படுகிறது.

`நிதான உணவுத் திருவிழாவில் பங்கேற்கலாமா?!- ஏன், எங்கே, எப்படி? #TerraMadreDay

பாஸ்ட் புட் எனப்படும் துரித உணவுக் கலாசாரம், மக்களின் அன்றாட உணவு முறைகளை முற்றிலும் மாற்றிவிட்டது. அதன் ஆபத்துகளை உணராமல் மக்கள் அவசரகதியில் அதை நோக்கியே பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். உடலுக்கு உகந்த, தரமான பாரம்பர்ய உணவுகளின் மகத்துவத்தை இன்றைய இளைய தலைமுறை முழுமையாக உணராததே இதற்குக் காரணம். அதேவேளை, நமது பாரம்பர்ய உணவுகளின் மகத்துவத்தைப் பிரபலப்படுத்தவும், அவற்றின் அளவற்ற பலன்கள் குறித்து நுகர்வோரிடையே விழிப்புஉணர்வு ஏற்படுத்தவும் பல முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன.

பாரம்பர்ய உணவு

அதன் ஒருபகுதியாக, உலகம் முழுவதும் `டெர்ரா மாத்ரே டே' (Terra Madre Day) எனப்படும் `நிதான உணவுத் திருவிழா' ஆண்டுதோறும் டிசம்பர் 10-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தத் திருவிழாவின் முக்கியக் குறிக்கோள், உள்ளூர் மற்றும் பாரம்பர்ய உணவுகளைக் கொண்டாடுவதும், மக்கள் மத்தியில் விழிப்புஉணர்வு ஏற்படுத்துவதும். துரித உணவுக் கலாசாரத்தை எதிர்ப்பது; சத்தான உணவு உண்ணும் ஆர்வத்தை வளர்ப்பது;  உள்ளூர் உணவுகளுக்கு உலகளவில் அங்கீகாரம் கிடைக்கச் செய்வது; அவற்றை அழியாமல் பாதுகாப்பது எனப் பல்வேறு செயல்திட்டங்களோடு ஒவ்வோர் ஆண்டும் பல்வேறு நாடுகளில் இந்த விழா கொண்டாடப்படுகிறது.  

இத்தாலி மொழியில் `டெர்ரா மாத்ரே’ என்றால் `பூமித்தாய்' என்று பொருள். உணவு உற்பத்திக்கு அடிப்படையான பூமித்தாயைப் போற்றும்விதமாக, இத்தாலியர்கள் இந்தப் பெயரை தங்கள் தாய்மொழியில் வைத்துள்ளனர். மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும், இந்த மண்ணுக்கும், உற்பத்தியாளர்களுக்கும், நுகர்வோருக்கும் உகந்த உணவு உற்பத்தி தேவை. உணவைப் பாதுகாப்பது, அவற்றை விநியோகிப்பது குறித்த விழிப்புஉணர்வை ஏற்படுத்துவது போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் இந்நாளில் நடத்தப்படும். மேலும் அப்போது, உலகெங்கும் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள், நல்ல, தரமான, சுத்தமான, சுவையான, உடலுக்கு உகந்த, பாரம்பர்ய உணவுகளைத் தயாரித்து மக்களுக்கு வழங்குவார்கள்.

உணவுத் திருவிழா

``கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் உணவு உற்பத்தியை ஊக்குவிப்பதோடு, சுற்றுச்சூழல், பல்லுயிர், பாரம்பர்ய உணவுப் பொருள்கள் ஆகியவற்றை பாதுகாக்கப் பாடுபடும் ஆர்வலர்களை ஒருங்கிணைப்பதும் இந்த நாளின் நோக்கம்" என்கின்றனர், `ஸ்லோ ஃபுட் இன்டர்நேஷனல்' (Slow Food International) எனப்படும் பன்னாட்டு நிதான உணவு இயக்கத்தினர்.

பருவநிலை மாற்றத்துக்கும், உணவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. பருவநிலைக் கோளாறுகளால் அதிகம் பாதிக்கப்பட்டது உணவுதான். ஆனால், இந்த நெருக்கடிக்கு ஒரு சாத்தியமான தீர்வாக உள்ளூர் உணவு இருக்கப்போகிறது. வெளியுலகத்துக்கு அதிகம் பரிச்சயமில்லாத உள்ளூர் உணவின் மகத்துவத்தை உலக அரங்கில் உயர்த்திப் பிடிப்பது மட்டுமல்லாமல், அந்த உணவை உற்பத்திசெய்பவர்களை உலக அரங்கில் முன்னிறுத்த எடுக்கும் ஒரு சீரிய முயற்சி என்றும் இதைச் சொல்லலாம். இதுதவிர பாரம்பர்ய உணவு தயாரிக்கும் சமூகங்கள், அத்தகைய உணவு உற்பத்தியாகும் உன்னத இடங்கள் குறித்த தகவல்களும் இந்த நாளில் உலகளவில் பிரபலப்படுத்தப்படும்.

உணவுத் திருவிழா

இது, வெறும் உணவுத் திருவிழா மட்டுமல்ல. பல்வேறு நாடுகளில் உள்ள விவசாயிகளின் பிரச்னைகள், அவர்கள் சந்திக்கும் சவால்கள், இயற்கை இடர்பாடுகள், பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் பாதகங்கள் குறித்து பன்னாட்டு ஆராய்ச்சியாளர்கள் விவாதிப்பார்கள். அத்துடன் அவற்றைத் தீர்க்கும் சாத்தியக்கூறுகளை அரசுக்குப் பரிந்துரைப்பார்கள். 

காலங்காலமாக முன்னோரின் அனுபவத்தையும் நிபுணத்துவத்தைப் பெற்று பாரம்பர்ய உணவுகளைத் தயாரிக்கும் உலகின் கடைக்கோடியில் வாழும் உணவுக் கலைஞர்களை உலக அரங்கில் அறிமுகப்படுத்தவும் இந்த விழா முன்னெடுக்கப்படுகிறது. இதன்மூலம், அவர்களது படைப்பாற்றல், திறமைகள் வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்படும் என்கின்றனர். இவைதவிர, நமக்காகச் சுத்தமான உணவுப்பொருள்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாகவும் இந்த விழாவைக் கொண்டாடுகின்றனர்.

போராடினால்தான் தீர்வு கிடைக்கும் என்ற சிந்தனை உள்ளூர் உணவுகளைக் காக்கும் விஷயத்திலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. `மெக் டொனால்டு'க்கு எதிராக ரோம் நகரில் நடத்தப்பட்ட ஓர் ஆர்ப்பாட்டம்தான் இந்த இயக்கத்தின் வித்து. இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்திய பாரம்பர்ய உணவு ஆர்வலர் கார்லோ மெட்ரினி என்பவரால் 1986-ம் ஆண்டு தொடங்கப்பட்ட, பன்னாட்டு நிதான உணவு (Slow Food International) என்ற அமைப்பு, இன்று உலகளாவிய இயக்கமாக மாறி 120 நாடுகளில் பரவியுள்ளது.

தற்போது, இந்த இயக்கத்தில் 10 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். உலகின் பல நாடுகளில் வசிக்கும் 2 ஆயிரம் உணவு உற்பத்தி செய்யும் சமூகத்தினர் இதில் இணைந்து, தரமான பாரம்பர்ய உணவுகளைத் தயாரித்து வழங்கி வருகிறார்கள். கடந்த ஆண்டில் மட்டும் இந்த இயக்கத்தின் உதவியால், 732 புதிய உணவுகள் உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன. 

உணவுத் திருவிழா

7 நாடுகள் தங்களை இந்த இயக்கத்தில் இணைந்துக்கொண்டன. ஒன்பது உற்பத்திப் பொருள்களின் சந்தைகள் உருவாக்கப்பட்டன. பல நாடுகள் இந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாடிவருகின்றன. கடந்த ஆண்டு ஐரோப்பிய யூனியன், பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே ஈடுபடும் மீன்பிடித்தொழிலில் துணிச்சலாக ஈடுபட்ட பெண்களை ஊக்குவித்து அவர்களது மீன்பிடித் திறமையைப் பாராட்டியது. அதேபோல, ஜெர்மனி பாரம்பரியமுறையில் பாலாடைக்கட்டி உற்பத்தி செய்பவர்களை கௌரவப்படுத்தி, அவர்களின் உற்பத்திப் பொருள்களை காட்சிப்படுத்தியது.

நாமும் நம் ஊரில் இந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாடலாம். பாரம்பர்ய உணவுப் பொருள்கள் குறித்த விழிப்புஉணர்வு, அந்தப் பொருள்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளையும், உணவுத் தயாரிக்கும் கலைஞர்களையும் ஊக்குவித்துக் கௌரவப்படுத்துவது, அவர்களின் திறமைகளைக் கண்டறிந்து பிரபலப்படுத்தி பிரசாரங்கள் செய்யலாம்.

உள்ளூர் உணவுப் புரட்சியை ஏற்படுத்துவதே இதன் குறிக்கோள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close