தண்ணீர் மூலம் ஹெச்.ஐ.வி கிருமி பரவுமா?- கர்நாடக கிராமத்தில் நடந்தது என்ன? | Villagers drain entire lake after HIV-infected woman commits suicide in it

வெளியிடப்பட்ட நேரம்: 11:27 (07/12/2018)

கடைசி தொடர்பு:16:04 (07/12/2018)

தண்ணீர் மூலம் ஹெச்.ஐ.வி கிருமி பரவுமா?- கர்நாடக கிராமத்தில் நடந்தது என்ன?

வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜ் பித்ரல்லி எடுத்துச் சொல்லியும், அந்தப் பகுதி மக்கள் கேட்பதாக இல்லை. ஏரியில் இருக்கும் மொத்த நீரையும் வெளியேற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். 

தண்ணீர் மூலம் ஹெச்.ஐ.வி கிருமி பரவுமா?- கர்நாடக கிராமத்தில் நடந்தது என்ன?

ரியில்  குதித்து ஹெச்.ஐ.வி பாதித்த பெண் தற்கொலை செய்து கொண்டதால் ஒட்டுமொத்த ஏரி நீரையும் வெளியேற்றியிருக்கிறார்கள் ஒரு கிராமத்து மக்கள்.  

ஏரி தண்ணீர்

கர்நாடகா மாநிலம், ஹூப்லி மாவட்டம், நாவல் குண்டம் தாலுகாவில் இருக்கிறது மோரப் எனும் சிறிய கிராமம். இந்த ஊருக்குப் பிரதான நீராதாரமாக இருப்பது 36 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஜாகீர்தார் ஏரி. இந்த நிலையில் கடந்த வாரம் இந்த ஏரியில் ஒரு இளம்பெண்ணின் சடலம் மிதந்துள்ளது. இறந்துபோன பெண்ணின்  உடலில் பெரும்பகுதியை மீன்கள் தின்றுவிட்டன. சிதைந்த நிலையில் உடல் மீட்கப்பட்டது. அந்தப் பெண் ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர் எனவும் அந்தப் பகுதி மக்களால் சொல்லப்படுகிறது. இந்தச் சம்பவம் செய்தியாக ஊர் முழுவதும் பரவியது. 

இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதுமுதல் அந்தப் பகுதி மக்கள் வழக்கமாக நீர் எடுக்கும் ஜாகீர்தார் ஏரியைப் புறக்கணிக்க ஆரம்பித்துவிட்டனர். 3 கி.மீ தொலைவில் உள்ள ஒரு பகுதியிலிருந்து நீர் எடுத்துவந்து பயன்படுத்தியிருக்கிறார்கள். 

``ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட நபர் உயிரிழந்ததும், நோய்க் கிருமிகளும் இறந்துவிடும். அப்படியே அது வெளியேறினாலும் சில நொடிகள் கூட வெளியில் தங்காது... உடனடியாக அழிந்துவிடும்'' என அந்தப் பகுதியின் வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜ் பித்ரல்லி எடுத்துச் சொல்லியும், அந்தப் பகுதி மக்கள் கேட்பதாக இல்லை. ஏரியில் இருக்கும் மொத்த நீரையும் வெளியேற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். 

தண்ணீர்

அதைக் கண்ட அதிகாரிகள், ``நீரைப் பரிசோதனை செய்து பார்க்கலாம். ஹெச்.ஐ.வி கிருமிகள் இருந்தால் பயன்படுத்த வேண்டாம். நல்ல நிலையில் இருந்தால் மட்டும் பயன்படுத்துங்கள் '' எனப் பேசிப் பார்த்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் பேச்சை கேட்க மறுத்த அந்த மக்கள், 8 லாரிகளில் நீரை எடுத்து வெளியேற்றும் முயற்சியில் இறங்கி விட்டார்கள். அதிகாரிகள் எவ்வளவு தடுத்தும் கேட்காததால், அவர்களும் சேர்ந்து நீரை வெளியேற்றும் நிலைக்கு வந்திருக்கிறார்கள். 4 மோட்டார் மூலம், 20 ட்யூப்களின் உதவியோடு ஒட்டு மொத்த ஏரி நீரையும் வெளியேற்றி விட்டார்கள். அதன்பிறகு மலபிரபா என்கிற கால்வாயிலிருந்து ஏரிக்குப் புதிதாக நீர் நிரப்பப்பட்டிருக்கிறது.சேகர்

கடந்த வருடம் இதே ஏரியில் ஒரு மாணவன் இறந்து போயிருக்கிறான். ஆனால், அப்போது இது போன்ற கூக்குரல்கள் எதுவும் எழவில்லை. இதே ஏரி நீரைத்தான் ஊர் மக்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். தற்போது இறந்த பெண் ஹெச்.ஐ.வி பாதிப்புக்குள்ளானவர், தங்களுக்கும் அது பரவிவிடும் என்கிற அச்சம்தான் ஏரி நீர் வெளியேற்றப்பட்டதற்கான காரணம் .

உண்மையில், ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர் தற்கொலை செய்து கொண்டதால் ஏரி நீரைப் பயன்படுத்துபவர்களுக்கு அந்த நோய்த்தொற்று ஏற்படுமா?

மூத்த மருத்துவ அதிகாரி சேகரிடம் பேசினோம்.

`` இது போன்றதொரு முட்டாள்தனமான செயல் உலகத்தில் எங்கேயும் நடந்ததில்லை. நடந்ததாக நான் கேள்விப்பட்டதுமில்லை. ஒருவர் ஏரியில் விழுந்து இறந்தால் என்ன செய்வார்கள், நீரில் குளோரின் பவுடர் போட்டு நீரைச் சுத்தம் செய்வார்கள். அவ்வளவுதான், இந்தப் பெண் சடலம் மீட்கப்பட்ட பின்பும் அதைத்தான் செய்திருக்கவேண்டும். காரணம், அந்த நீரில் ஹெச்.ஐ.வி கிருமிகள் பரவியிருக்க வாய்ப்பேயில்லை. மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை இது. ஹெச்.ஐ.வி குறித்து மக்களுக்குப் போதிய விழிப்பு உணர்வு இல்லை என்பதையே இதுபோன்ற சம்பங்கள் நமக்கு உணர்த்துகின்றன. 

ரத்தம்

ஹெச்.ஐ.வி பாதித்த ஒருவருடன் ரத்தத் தொடர்பு வைத்துக்கொண்டால் மட்டுமே அது பரவும். அவர்களின் எச்சில் மூலமாகவோ, அவர்கள் பயன்படுத்திய பொருள்களைப் பயன்படுத்துவதன் மூலமாகவோ பரவாது. ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் பாதுகாப்பற்ற பாலுறவில் ஈடுபட்டால் பரவ வாய்ப்புண்டு. அல்லது, ஹெச்.ஐ.வி பாதித்த தாய் மூலமாக குழந்தைக்குப் பரவலாம். தவிர, போதை மருந்துகள் பயன்படுத்துபவர்கள் ஊசிகளை ஒருவருக்கொருவர் மாற்றிக்கொள்வார்கள். ஹெச்.ஐ.வி யால் பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய ஊசியை மற்றவர் பயன்படுத்தும்போது அது பரவ வாய்ப்பிருக்கிறது. 

ஹெச்.ஐ.வி யால் பாதிக்கப்பட்டவர்களைப் புறக்கணிப்பது என்பது கடந்த சில ஆண்டுகளாகத்தான் குறைந்திருக்கிறது. அவர்களுடன் பேசுவதால், பழகுவதால் நோய் பரவாது என்ற நம்பிக்கையை மக்களிடம் ஆழமாக விதைத்ததுதான் அதற்குக் காரணம். ஆனால், இது போன்ற சம்பங்கள் 20 ஆண்டுக்காலம் பின்னோக்கி இழுத்துச் சென்றுவிடுகிறது. 

விழிப்பு உணர்வு

அந்த கிராமத்துக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த இந்தியாவுக்கே ஹெச்.ஐ.வி குறித்த அச்சங்களைப் போக்க ஏராளமான விழிப்பு உணர்வு முகாம்களை நடத்தவேண்டும். அப்போதுதான் இதுபோன்ற அபத்தங்கள் நடக்காமல் தவிர்க்க முடியும்`` என்கிறார் அவர்.

ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான முதல் சிகிச்சையே அவர்களைப் புறக்கணிக்காமல் அரவணைப்பதுதான். உயிரோடு இருக்கும்போதுதான் அவர்களைப் புறக்கணிப்பு எனும் அரக்கனுக்கு இரையாக்குகிறோம் என்றால், இறந்த பின்னும் அது தொடர்வது வேதனையிலும் வேதனை.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்