`மரபணு மாற்றம்' பற்றி ஆய்வு செய்ய புதிய குழு! - களமிறங்கிய உலக சுகாதார அமைப்பு | WHO starts a new Gene Editing panel and it starts work on gene editing ethics

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (07/12/2018)

கடைசி தொடர்பு:17:00 (07/12/2018)

`மரபணு மாற்றம்' பற்றி ஆய்வு செய்ய புதிய குழு! - களமிறங்கிய உலக சுகாதார அமைப்பு

சீன மருத்துவர் ஹீ ஜியான்குய் கடந்த மாதம் 'ஜீன் எடிட்டிங்' எனப்படும் மரபணு மாற்றுமுறை மூலம் கருவிலிருந்த இரட்டைக் குழந்தைகளின் மரபணுவை மாற்றியமைத்தார். பொதுவாக, மரபணுவின் வடிவத்தில் இதுபோன்று செயற்கையாக மாற்றம் ஏற்படுத்தினால், வருங்காலத்தில் அவை ஏதேனும் சிக்கலை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாகவும், அடுத்தடுத்த சந்ததிகளுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் கூறி பல்வேறு நாடுகள் இந்த முறையைத் தடைசெய்துள்ளது. தடைசெய்யப்பட்ட ஒரு மருத்துவமுறையைப் பின்பற்றியதற்காக, ஹீ ஜியான்குய்-க்கு எதிராக விஞ்ஞானிகள் பலர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

மரபணு மாற்றம்

சீன மருத்துவரின் ஆய்வில், அவரின் மிகமுக்கிய வாதமாக இருந்தது ஒன்றுதான். அதாவது, `மரபணு மாற்றம் செய்யப்பட்ட அந்தக் குழந்தைகளின் தந்தைக்கு ஹெச்.ஐ.வி இருந்தது. காரணமே இல்லாமல், அந்த அப்பாவிக் குழந்தைகளும் ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்படவேண்டுமா என்ன, அதனால்தான் மரபணுவில் மாற்றம் செய்தேன்' என்பதே அவரது வாதம்.

இந்த நிலையில், தற்போது உலக சுகாதார நிறுவனம், `ஜீன் எடிட்டிங்' குறித்து முறையாக ஆய்வு செய்ய தனிக்குழு அமைக்கப்படும் என்று கூறியுள்ளது. ஐக்கிய நாடுகளுக்கான மருத்துவ அமைப்பின் (UN health agency) தலைவர் டெட்ராஸ் இதுகுறித்து கூறும்போது, `முறையான வழிகாட்டுதல்கள், நெறிமுறைகளுக்குப் பின்னரே இந்தக் குழுவின் ஆராய்ச்சிகள் தொடங்கும்' என்று கூறியுள்ளார். டெட்ராஸ், இதற்கு முன்பு எத்தியோப்பியாவின் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்துள்ளார். 

மரபணு

மரபணுக் குழு அமைத்தலில், `ஜீன் எடிட்டிங்' செய்வதற்குத் தேவையான நெறிமுறைகள் குறித்து விவாதிக்கவும், அவற்றை முறையாக வழிவகுக்கவும் `மரபணு ஆராய்ச்சிகள்' சார்ந்து இயங்கும் பலதரப்பட்ட அறிவியலாளர்களை ஒன்றிணைத்து வருகின்றனர் உலக சுகாதார அமைப்பினர். அதேநேரம், சீன மருத்துவரின் சமீபத்திய `ஜீன் எடிட்டிங்' சிகிச்சைதான் இந்தப் புதியக் குழுவின் தொடக்கத்துக்குக் காரணம் என்பதை முழுமையாக மறுத்துவருகின்றனர் அவர்கள்.

உலக சுகாதார நிறுவனம்

டெட்ராஸ் இதுகுறித்து கூறும்போது, `வருங்காலத்தில் மக்களுக்குப் பயன்படும்வகையில், எந்த உயிர்களுக்கும் சேதம் விளைவிக்காத வகையில் `ஜீன் எடிட்டிங்' மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது என்பது உண்மைதான். அதைச் சாத்தியப்படுத்த முழுமையான நெறிமுறையும், திட்டமிடுதலும் தேவை. திட்டமிடுதல் சரியாக இல்லாமல், முயற்சியாக மட்டுமே ஒரு சிகிச்சையை செய்வதென்பது மருத்துவ நெறிமுறைகளுக்கு எதிரானது. அதுமட்டுமன்றி, `ஜீன் எடிட்டிங்' சம்பந்தப்பட்ட ஒரு நபரை மட்டும் சார்ந்ததல்ல; அவர்களின் தலைமுறையையும் சார்ந்தது. எனவே, உலக சுகாதார நிறுவனம், `ஜீன் எடிட்டிங்' தொடர்பான அனைத்து முதல்நிலை ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, நெறிப்படுத்திவிட்டுப் பாதுகாப்பான ஆய்வுகளைத் தொடங்கும்' என்று கூறியுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close