வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (07/12/2018)

கடைசி தொடர்பு:18:20 (07/12/2018)

`குழந்தைகளைக் கிள்ளத் தோன்றுவது ஏன்?’ - ஆச்சர்யப்படுத்திய ஆய்வு முடிவு

றவினர்கள் அல்லது நண்பர்களின் அழகான குட்டிக் குழந்தையைப் பார்த்ததும் `ச்சோ ஸ்வீட்’ என்று கொஞ்சிக்கொண்டே சட்டெனக் குழந்தையின் கன்னத்தில் கிள்ளிவிடுவோம். சில நேரங்களில் நாம் கிள்ளிய வலி தாளாமல் குழந்தைகள் வீறிட்டு அழும். நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளிடமும் அதேபோன்றுதான் நடந்துகொள்வோம். அவற்றின் காதுகளைப் பிடித்துத் திருகுவது, மிருதுவான தோலை நசுக்குவது எனப் பாடாய்ப்படுத்துவோம். அவை `வீல்' என்று கத்தும்போதுதான் பிடியை விடுவோம். இதையெல்லாம் ஏன் செய்கிறோம். சிறிய குழந்தை, சிறிய பிராணிகள் என்று தெரிந்தும் ஏன் அத்தனை வன்முறையைக் கையாள்கிறோம்.

மூளை

மூளையின் செயல்பாடு தொடர்பான பல்வேறு ஆய்வுகள் உலகம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மூளையில் இருந்து கிடைக்கும் சிக்னல்களே நம் உணர்வுகளைத் தீர்மானிக்கின்றன. நாம் சோகமாக இருப்பதை மூளை உணர்த்தினால்தான் கண்களில் கண்ணீர் வரும். நாம் புரிந்துகொள்ள முடியாத ஆச்சர்யங்களில் மூளையும் ஒன்று. 

அண்மையில் அமெரிக்காவின் கலிபோர்னியா ரிவர்சைட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆய்வில் குழந்தைகளிடமோ, செல்லப்பிராணிகளிடமோ மகிழ்ச்சியான தருணத்தில்கூட ஏன் ஆக்ரோஷமாக நடந்துகொள்கிறோம் என்பதைக் கண்டறிய ஆய்வு நடத்தப்பட்டது. 18 முதல் 40 வயதுக்குட்பட்ட 54 பேரிடம் மூளை நரம்பியல் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவில் நாம் அளவுக்கு அதிகமாக மகிழ்ச்சியாக இருக்கும்போதோ, நெகிழ்ச்சியாக இருக்கும்போதோ, மூளையில் நமது உணர்வுகளைப் பிரதிபலிக்கும் அமைப்பு சற்று ஆக்ரோஷமான உணர்வை வெளிப்படுத்துகிறதாம். அதனால்தான் சட்டென்று அழகான வன்முறைகளைக் கையாள்கிறோம் என்கிறது ஆய்வு முடிவு. செல்லப்பிராணிகளைப் பொறுத்தவரை, பெரிய விலங்குகளைக் காட்டிலும் அழகான குட்டிகளிடம்தான் அவ்வாறு நடந்து கொள்கிறோம் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.