வெளியிடப்பட்ட நேரம்: 13:24 (08/12/2018)

கடைசி தொடர்பு:14:18 (08/12/2018)

`திருவண்ணாமலையில் அதிக கருக்கலைப்பு நடப்பது ஏன்?’ - ஓர் அலசல்!

 ``கணவனுக்கு, மனைவியின் மீதான நம்பிக்கையின்மையும் கருக்கலைப்புக்கு ஒரு காரணமாக இருக்கிறது" என்கிறார் மருத்துவர் அனுரத்னா.

`திருவண்ணாமலையில் அதிக கருக்கலைப்பு நடப்பது ஏன்?’ - ஓர் அலசல்!

ண் - பெண் இணைவால், பெண்ணின் கருப்பையில் லட்சக்கணக்கான உயிர்கள் உருவானாலும், ஒற்றை உயிரணுதான் கருவாகத் துளிர்க்கிறது. இவ்வுலகில் வாழ, மற்ற உயிரணுக்களைவிட அந்த ஓர் அணுவில் ஏதோவொரு வல்லமை  கூடுதலாக இருக்கவே அந்த அதிசயம் நிகழ்கிறது. அறிவியலிலும் சரி, மனித வாழ்வியலிலும் சரி குழந்தைப்பேறு நெகிழ்வான, கொண்டாட்டமான விஷயமாகத்தான் இன்றளவும் பார்க்கப்படுகிறது. அதேசமயம் `கருக்கலைப்பு’ என்கிற பெயரில் உயிர்களைக் கருவிலேயே அழித்துவிடும் அவலமும் இங்கே அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது. கருக்கலைப்புக்குப் பல நியாயமான காரணங்கள் இருந்தாலும், உடலளவிலும் மனதளவிலும் பெண்களுக்கு ஆராத ரணங்களை உண்டாக்கிச் சென்றுவிடுகிறது. 

கருக்கலைப்பு

இந்தியாவில் ஆண்டுக்கு 68 லட்சம் கருக்கலைப்புக்கள் நடைபெறுகின்றன என்கிறது உலக சுகாதார நிறுவனம். பொருளாதாரமும் பெண் குழந்தை என்ற காரணமும்தான் கருக்கலைப்புக்குப் பிரதான காரணங்களாக இருக்கின்றன. அண்மையில், 'திருவண்ணாமலையைச் சேர்ந்த ஆனந்தி என்ற பெண், சட்டவிரோதமாகக் கருக்கலைப்பு மையம் நடத்தி 15 ஆண்டுகளில் 19,000 கருக்கலைப்புகளைச் செய்திருக்கிறார்' என்று அந்த மாவட்ட ஆட்சியரே பேசியிருக்கிறார். இதற்கு முன்பாக அந்தப் பெண் இதே காரணத்துக்காக இரண்டு முறைமருத்துவர் புகழேந்தி கைதாகி சிறை சென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தமிழகம் முழுவதும் கருக்கலைப்புகள் நடைபெற்றாலும், திருவண்ணாமலை, திருப்பத்தூர் போன்ற வட மாவட்டங்களில்தான் அதன் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

``விவசாயத்தை மட்டுமே பிரதானமாகக் கொண்ட மாவட்டங்களில், முறையாக விளைச்சல் இல்லாததால் ஏற்படும் வறுமைதான், கருக்கலைப்புகள் செய்யப்படுவதற்கான காரணம்" என்கிறார் மருத்துவர் புகழேந்தி.

``திருவண்ணாமலை, திருப்பத்தூர், தர்மபுரி போன்ற மாவட்டங்களில், ஆண் - பெண் விகிதத்தில் பெண்களின்  எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்துகொண்டே வருவதைச் சமீபத்தில் வெளியான சில புள்ளிவிவரங்களில் பார்க்கிறோம். கருக்கலைப்பால் பெண்கள் உயிரிழக்கும் சம்பவங்களும் அதிகமாகி வருகின்றன. கருக்கலைப்பு இயற்கையாகவோ, நோயின் காரணமாகவோ நிகழும்போது மரணங்கள் ஏற்படுவதில்லை. செயற்கையாகக் கலைக்க முற்படும்போதுதான் மரணங்கள் நிகழ்கின்றன. கருவில் எந்தக் குழந்தை இருக்கிறது என்பதைச் சோதனை செய்து, பெண் குழந்தை என்றால் அதைக் கலைத்துவிடுகிறார்கள். 

வறட்சி

பெண் குழந்தை என்றால் அதைப் படிக்கவைக்க, திருமணம் செய்ய அதிகமாகச் செலவு செய்ய வேண்டியதிருக்கும். பொய்த்துப்போன விவசாயத்தால் ஏற்கெனவே வறுமையில் வாடும் அந்த மக்களுக்கு, பெண் குழந்தைகள் கூடுதல் சுமையென அவர்கள் நினைக்கிறார்கள். அதனால்தான் கலைக்கிறார்கள். ஆண்- பெண் சமத்துவமின்மையே இதற்கு அடிப்படைக் காரணம். அது மாற வேண்டும். அடுத்ததாகப் பாதுகாப்பற்ற முறையில் கருக்கலைப்பு செய்வதால்தான் அதிகமான மரணங்களும் நிகழ்கின்றன. இந்த நிலை மாற கிராம்தோறும் அதற்கான வசதிகளை அரசு உண்டாக்கித் தர வேண்டும். 

முறையற்ற உறவின் மூலமாகக் கரு உருவாவதாலும், ஒரு சில இடங்களில் கருக்கலைப்புகள் நடைபெறுகின்றன. அரசு மருத்துவமனைக்குச் சென்றால் அவர்களைப் பற்றிய தகவல்கள் வெளியில் தெரிந்துவிடும் என்பதால், போலியான கருக்கலைப்பு மையங்களுக்குச் செல்கிறார்கள். இந்த நிலை மாற அவர்களின் ரகசியம் காக்கப்பட வேண்டும். அதற்கான  உத்தரவாதத்தை அரசு தர வேண்டும்" என்கிறார் மருத்துவர் புகழேந்தி.

கர்ப்பிணி

பொதுவாகப் பெண்களின் பிரசவ காலத்தை முதல் மூன்று மாதம், இரண்டாவது மூன்று மாதம், மூன்றாவது மூன்று மாதம் என மூன்று பிரிவாகப் பிரிக்கிறார்கள். இதில் முதல் மூன்று மாதத்தில் நடக்கும் கருக்கலைப்பைவிட, இரண்டாவது மூன்று மாதத்தில்தான் அதிகளவில் கருக்கலைப்புகள் நடைபெறுகின்றன. 

அதற்கான காரணம் என்ன? 

மகப்பேறு மருத்துவர் அனுரத்னாவிடம் பேசினோம் 

``கருவில் இருப்பது ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என்பதை முதல் மூன்று மாதத்தில் கண்டறிய முடியாது. 12 வாரங்களுக்குப் பிறகுதான் அதுதெரியவரும். கருவில் இருப்பது பெண் குழந்தை எனத் தெரிய வந்தவுடன் அதைக் கலைக்க முடிவு செய்துவிடுகிறார்கள். பொதுவாக, கருக்கலைப்புகள் குறித்த ஆய்வே எந்தப் பருவத்தில் அது நடந்தது என்ற வகையில்தான் இருக்கும். 

மூன்று மாதத்துக்கு மேல் நடக்கும் ஒவ்வொரு கருக்கலைப்புகளைப் பற்றிய தகவல்களையும் அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவருக்கு நேரடியாக அனுப்ப வேண்டும். ஏதாவது ஒரு பகுதியில் தொடர்ச்சியாக இரண்டாவது, மூன்றாவது மாதங்களில் கருக்கலைப்பு நடந்தது தெரிய வந்தால் 'அந்தப் பகுதியில் ஏதோ தவறு நடக்கிறது' என்று அர்த்தம். அந்தப் பகுதியில் விசாரணை நடத்தப்படும். பல ஸ்கேன் மையங்களில் கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதைத் தெரிவித்து விடுகிறார்கள். இது சட்டப்படி தவறு. அதுபோன்று செயல்படும் ஸ்கேன் மையங்களின் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 

கருக்கலைப்பு குறித்த போதிய விழிப்புஉணர்வு நம் சமூகத்தில் இல்லை. பாதுகாப்பற்ற முறையில், நியாயமான காரணங்கள் இல்லாமல் கருக்கலைப்பு செய்துகொள்வதுதான் தவறு. அதேசமயம் ஒரு பெண்ணுக்குத் தன்னுடைய கருவைக் கலைத்துக்கொள்ளும் உரிமை இருக்கிறது. கணவனின் அனுமதியில்லாமல்கூட கருக்கலைப்பு செய்துகொள்ள முடியும். முறையான கருக்கலைப்புக்குத் தேவையான வசதிகளையும் அரசாங்கமே செய்துகொடுக்கிறது. அவர்களின் ரகசியமும் காக்கப்படும்’’ எனும் மருத்துவர் அனுரத்னா, ``கணவனுக்கு, மனைவியின் மீதான நம்பிக்கையின்மையும் கருக்கலைப்புக்கு ஒரு காரணமாக இருக்கிறது’’ என்கிறார்.

``பெரும்பாலான ஆண்கள், அவர்களின் மனைவி கருத்தடை சிகிச்சை செய்துகொள்வதற்கு அனுமதிப்பதில்லை. மனைவி வேறொரு நபருடன் முறையற்ற உறவில் இருந்தால் அதைக் கண்டுபிடிப்பதற்கான வழியாக இதைப் பயன்படுத்த நினைக்கிறார்கள். கணவன் -மனைவி தாம்பத்தியத்தில் ஈடுபடும்போது கரு உண்டாகிவிடுகிறது. அதைக் கலைக்க வேண்டிய அவசியமும் ஏற்படுகிறது. இது குறித்து ஏராளமான பெண்கள் என்னிடம் முறையிட்டிருக்கிறார்கள். ஆண்களுக்கு மனைவியின் மீதிருக்கும் தேவையற்ற சந்தேகங்கள் நீங்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற தேவையற்ற கருக்கலைப்புகள் நடக்காது’’ என்கிறார் மருத்துவர் அனுரத்னா.

கரு உருவாகி முதல் 12 வாரங்களுக்குள் அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பாகக் கருக்கலைப்பு செய்துகொள்ளலாம். பன்னிரண்டு வாரங்களுக்கு மேல் 20 வாரங்களுக்குள், கருவால் குழந்தைக்கும் தாய்க்கும் ஏதாவது பாதிப்பு ஏற்படும் எனத் தெரியவந்தால், இரண்டு மகப்பேறு நல மருத்துவர்களிடம் அனுமதி பெற்று, கருக்கலைப்பு செய்துகொள்ளலாம். 20 வாரங்களுக்கு மேல் சென்றுவிட்டால், நீதிமன்ற அனுமதி பெற்று மட்டுமே கருக்கலைப்பு செய்ய முடியும். 

``இதுபோன்ற நடைமுறைகள் பொதுவாகப் பின்பற்றப்படுகின்றனவா, அரசு அதை முறையாகக் கண்காணிக்கிறதா?’’ மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை இயக்குநர் மருத்துவர் ருக்மணியிடம் பேசினோம்,

``ஒரு பெண் கருவுற்றால், அந்தப் பகுதியில் உள்ள அரசு மருத்துவ நிலையங்களில் பதிவு செய்துகொள்ள வேண்டும். அந்தப் பதிவின்படி ஒவ்வொரு மூன்று மாதத்துக்கும் அவர்களைத் தொடர்ந்து கண்காணிப்போம். இரண்டாவது மூன்று மாதத்தில் யாருக்காவது அபார்ஷன் ஆகியிருந்தது தெரியவந்தால் அவர்களின் வீடுகளுக்கே சென்று, இயற்கையாக நடந்ததா, இல்லை வேறு ஏதும் காரணத்துக்காக செய்திருக்கிறார்களா என்று விசாரணை நடத்துவோம். ஸ்கேன் அறிக்கைகளைப் பரிசோதனை செய்வோம். யாராவது முறை தவறி அபார்ஷன் செய்திருந்தால், அவர்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்போம்" என்கிறார் ருக்மணி.

மகப்பேறு காலம்

``அரசு முறையாகக் கண்காணித்தும் இதுபோன்ற செயல்கள் தொடர்வது ஏன்?’’ தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத்துறை இயக்குநர் குழந்தைசாமியிடம் பேசினோம்,

``ஒரு பெண் கருவுற்றால், அந்தப் பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் பதிவு செய்துகொள்ள வேண்டும். அந்தந்த பகுதிகளில் உள்ள சுகாதார ஊழியர்களும் அதைக் கண்காணிக்க வேண்டும். குறிப்பிட்ட சிலர் பதிவு செய்யாமல் ஏமாற்றிவிடுகிறார்கள். ஏற்கெனவே ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பெண் குழந்தைகள் பிறந்த வீடுகளில்தான் இது போன்று நடந்துகொள்கிறார்கள். அவர்களின் மீது சிறப்புக் கவனம் கொண்டு கண்காணித்து வருகிறோம். ஏராளமான விழிப்பு உணர்வு முகாம்களையும் தொடர்ந்து நடத்தி வருகிறோம்" என்றார் அவர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க