உடல் எடை அதிகரிக்க புரோட்டின் பவுடர்கள் பயன்படுத்தலாமா? | ill effects of protein powder

வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (10/12/2018)

கடைசி தொடர்பு:16:30 (10/12/2018)

உடல் எடை அதிகரிக்க புரோட்டின் பவுடர்கள் பயன்படுத்தலாமா?

புரோட்டின் பவுடர் எடுத்துக்கொள்வோர் தண்ணீர் குடிப்பதைக் குறைத்துக் கொள்கின்றனர். உடலில் நீர்ச்சத்து குறைந்து கொண்டே வருவதால் சிறுநீரகப் பிரச்னைகள் ஏற்படும்

உடல் எடை அதிகரிக்க புரோட்டின் பவுடர்கள் பயன்படுத்தலாமா?

ந்த அவசர உலகத்தில் எந்தச் செயலையும் நேர்வழியாகச் செய்யாமல், குறுக்கு வழியில் சீக்கிரம் முடிப்பதையே பலரும் விரும்புகிறோம். குறுக்குவழியில் முயல்வது எந்தவித பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்பதைப் பற்றி சிந்திப்பதே இல்லை. இதற்கு மிகச்சிறந்த உதாரணம், உடற்பயிற்சிக் கூடம். உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சிக் கூடத்தில் தவம் கிடக்கும் பல இளைஞர்கள், தங்கள் உடல் எடையைக் குறுகிய காலத்தில் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் ஊட்டச்சத்து பானமாக, புரோட்டின் பவுடரை பாலுடன் கலந்து குடிக்கின்றனர்.

புரோட்டின் பவுடர்

உடற்பயிற்சிக் கூடத்தில் 6 மாதம், ஒரு வருடம் என்று கடினமாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை அதிகரிப்பதற்குப் பதில், குறைந்த அளவு உடற்பயிற்சியுடன் இந்த புரோட்டின் பவுடர் கலந்த பானத்தைப் பருகி உடல் எடையை அதிகரித்துக் கொள்கின்றனர். பெண்களைக் காட்டிலும் ஆண்களே இதை அதிக அளவில் எடுத்துக் கொள்கின்றனர். 

புரோட்டின் பவுடர் என்பது என்ன, அதைப் பயன்படுத்துவதால் என்ன மாதிரி விளைவுகள் ஏற்படும்? 
உடற்பயிற்சி நிபுணர் சபரியிடம் கேட்டோம்:
"பாலிலிருந்து பாலாடைக் கட்டியை (சீஸ்) எடுத்தபிறகு, மீதம் இருக்கும் தண்ணீரில் சில பொருள்கள் கலக்கப்பட்டு பவுடராக மாற்றப்படுகிறது. இதைத்தான் `புரோட்டின் பவுடர்' என்று கூறுகிறோம். ஒருவர் 70 கிலோ எடை இருந்தால் அதற்கு இரண்டு மடங்காக, சபரிஅதாவது 140 கிராம் பவுடர் சாப்பிடவேண்டும் என்று பரிந்துரைப்போம். இதை ஒருமுறை சாப்பிடும்போது,  40 முட்டை, 1 கோழி மற்றும் மீன்கள் ஆகியவற்றை ஒரேநேரத்தில் சாப்பிடுவதால் என்னென்ன சத்துகள் கிடைக்குமோ அதெல்லாம் கிடைக்கும். 

இந்த உணவுகளை எல்லாம் சாப்பிட்டால் கூட புரோட்டின் பவுடரில் கிடைக்கும் புரதத்தைவிட குறைவாகவே கிடைக்கும். மேலும் பொருளாதார ரீதியாக இவற்றை வாங்கித் தினமும் சாப்பிடுவதும் சாத்தியமில்லை. அதனால்தான் புரோட்டின் பவுடரைப் பரிந்துரைக்கிறோம். இந்தப் பவுடர்கள் வெளிநாடுகளில் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் பவுடர்களில் கலப்படம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதன் காரணமாக, நேரடியாக வெளிநாடுகளில் சென்று இதை வாங்கி வருகிறோம் அல்லது அங்கிருப்பவர்களை நேரடியாக அனுப்பித் தரச் சொல்கிறோம். அதன் காரணமாகவே அதன் விலையும் அதிகமாக இருக்கிறது" என்றார்.

உடற்பயிற்சிக் கூடத்துக்குச் செல்வதும், புரோட்டின் பவுடர் சாப்பிடுவதையும் ஒருவரால் தொடர்ந்து பின்பற்ற முடியாது. ஆர்வத்தின் காரணமாக அதை எடுத்துக்கொள்ளும் பலர் குறுகிய காலத்திலேயே அதைக் கைவிட்டுவிடுகின்றனர். இதன் காரணமாக உடல்பருமன் உள்ளிட்டப் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

புரோட்டின்

புரோட்டின் பவுடர் எடுத்துக்கொள்வது சரியா என்பது குறித்து தெரிந்துகொள்ள உணவியல் நிபுணர் நிஷாவிடம் பேசினோம்:
``பொதுவாக புரோட்டின் பவுடர் எடுத்துக்கொள்வோர் தண்ணீர் குடிப்பதைக் குறைத்துக் கொள்கின்றனர். உடலில் நீர்ச்சத்து குறைந்து கொண்டே வருவதால் சிறுநீரகப் பிரச்னைகள் ஏற்படும். சில தரமில்லாத புரோட்டின் பவுடரில் 95 சதவிகிதம் வரை மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோயாவிலிருந்து எடுக்கப்பட்ட புரதம் சேர்க்கப்படுகிறது. மரபணு மாற்றப்பட்ட சோயாவில் இருக்கும் கிளைபோசேட் (Glyphosate)என்ற ரசாயனம் ஹார்மோன் சமநிலையின்மை, கருச்சிதைவு போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். மேலும் இதைச் உணவியல் நிபுணர் நிஷாசாப்பிட்டவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் ஹார்மோன் பிரச்னையோடு பிறக்க வாய்ப்புள்ளது. இதுதவிர, அஜீரணம், உடல் பருமன், உயர் ரத்தஅழுத்தம், சிறுநீரக மற்றும் கல்லீரல் செயலிழப்பு, எலும்பு தொடர்பான பிரச்னைகள் ஏற்படும். குறிப்பாக, இதைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் ஆண்களுக்கு மலட்டுத்தன்மையும் பெண்களுக்கு ரத்தப்புற்றுநோயும் வருவதற்கு வாய்ப்புள்ளது. 

இதுபோன்ற உணவுகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ளும்போது உடல்நலம் பாதிக்கப்படுவதற்கான சில அறிகுறிகள் தென்படும். அதுபோன்ற அறிகுறிகளையும் அலட்சியம் செய்துவிட்டு தொடர்ந்து புரோட்டின் பவுடரை எடுத்துக் கொள்ளக் கூடாது. உடனடியாக மருத்துவரை அணுகி அதற்குத் தீர்வு காண வேண்டும்.

இயற்கைக்கு ஒவ்வாத உணவுகளை எடுத்துத்தான் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற மனநிலையிலிருந்து இளைஞர்கள் மாற வேண்டும். நம்முடைய பாரம்பர்ய உணவுகளைச் சாப்பிட்டு, முறையாக உடற்பயிற்சி செய்தாலே நல்ல ஆரோக்கியத்துடனும் கட்டுக்கோப்புடனும் இருக்க முடியும். நமது பாரம்பர்ய உணவுகளில் கிடைக்கும் சத்துகளே உடலுக்குப் போதுமானது" என்றார் அவர். 


டிரெண்டிங் @ விகடன்