வெளியிடப்பட்ட நேரம்: 20:01 (10/12/2018)

கடைசி தொடர்பு:20:01 (10/12/2018)

கருப்பைக்குள் சிசு உதைப்பதைக் கட்டாயம் கவுன்ட் செய்ய வேண்டும்.. ஏன்?

``வயிற்றுக்குள்ளேயே சிசு உயிரிழந்துவிடுவது போன்ற சம்பவங்கள் நடந்துவிடாமல் தடுப்பதற்கும், நடந்துவிட்டால் அதைக் கண்டுபிடித்து உடனே தாயைப் பாதுகாப்பதற்கும்தான், குழந்தை உதைப்பதை மருத்துவர்கள் கவுன்ட் செய்யச் சொல்கிறார்கள்.''

நாமெல்லாருமே, பிறப்பதற்கு முன்னால் அம்மாவின் வயிற்றில் எட்டி உதைத்தவர்கள்தாம். அந்த உதை, ஒரு சிசுவின் உயிர் இருப்பைத் தெரிவிக்கிற அதிர்வு என்பதால், அம்மாக்கள் அதைப் பேரானந்தமாக எடுத்துக்கொள்கிறார்கள். மற்றபடி, ஒரு சிசு ஏன் அம்மாவின் கருப்பைக்குள் உதைக்கிறது? அதன் முக்கியத்துவம் என்ன? ஒருவேளை குழந்தை உதைப்பதை நிறுத்திவிட்டால், உடனடியாக என்ன செய்ய வேண்டும்? மகப்பேறு மருத்துவர் வாணி ஷ்யாம் சுந்தரிடம் பேசினோம். 

கருப்பை'

 

``ஒரு பெண்ணின் அடிவயிறு என்பது உருளை வடிவத்தில் இருக்கும். அதில் இருக்கிற பனிக்குடத் தண்ணீருக்குள் சிசு இருக்கிறது. சிசு வளர ஆரம்பித்தவுடன் கைகள், கால்களை வேகமாக அசைக்க ஆரம்பிக்க, அது அம்மாவின் வயிற்றுக்குள் அங்குமிங்கும் பட, அதற்குத்தான் அம்மாக்கள், `ஹை என் பிள்ளை உதைக்கிறான்' என்று சந்தோசப்பட்டுக் கொள்கிறார்கள்.  

கருவுற்ற 18 முதல் 20 வாரங்கள் வரை கருப்பை பெரிதாக இருக்கும். குழந்தையோ சிறிதாக இருக்கும். அதனால், சிசுவின் கால் கருப்பையின் சுவரைத் தொடாது. ஆனால், 21 வாரங்களுக்கு மேல் சிசுவின் வளர்ச்சி பெரிதாக ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் சிசு தன்னுடைய  கை, கால்களை அசைக்கும்போது கருப்பையின் சுவரில் படும். இதன் மூலம் தாயானவள், தன் குழந்தை ஆக்ட்டிவாக இருக்கிறது, அதைவிட முக்கியமாக உயிரோடு இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம். எப்படித் திரும்பினாலும், வட்டம் போட்டாலும் டெலிவரி நேரத்தில் குழந்தையின் தலை சுகப் பிரசவத்துக்கு ஏற்றபடி தாயின் பிறப்புறுப்பை நோக்கி வந்துவிடும். இதற்குக் காரணம், சிசுவின் தலை கனமாக இருப்பதால், புவியீர்ப்பு விசையால், பிரசவமாகப் போவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னாடியே தலை கீழே வந்து ஃபிக்ஸாகி விடும். இதை செக் செய்துதான், மகப்பேறு மருத்துவர்கள் நார்மல் டெலிவரியா, இல்லையா என்பதைத் சொல்வார்கள்'' என்றவர், சிசு உதைப்பதை ஏன் கவுன்ட் செய்ய வேண்டும் என்பது பற்றி விளக்க ஆரம்பித்தார்.

டாக்டர் வாணி``எட்டாவது மாதத்திலிருந்து, சிசு ஒரு நாளைக்கு எத்தனை தடவை உதைக்கிறது என்பதை கவுன்ட் செய்யச் சொல்வோம். அந்தக் காலத்தில் மிக இள வயதில் திருமணம் செய்து வைத்ததால், அந்தப் பெண்களுக்கு இதைப்பற்றியெல்லாம் தெரியாது. இந்தக் காலத்திலோ, பத்துக்கு ஒன்பது பேர் ஒரு பிள்ளைதான் பெற்றுக்கொள்கிறார்கள். அதனால், முதல் கருத்தரிப்பின்போது முன் அனுபவம் இல்லாததால், உதைப்பதைக் கவனிக்க வேண்டும் என்பது பல பெண்களுக்குத் தெரியவில்லை. 

வயிற்றுக்குள்ளேயே சிசு உயிரிழந்துவிடுவது போன்ற சம்பவங்கள் நடந்துவிடாமல் தடுப்பதற்கும், நடந்துவிட்டால் அதைக் கண்டுபிடித்து உடனே தாயைப் பாதுகாப்பதற்கும்தான், குழந்தை உதைப்பதை மருத்துவர்கள் கவுன்ட் செய்யச் சொல்கிறார்கள். முக்கியமாக டயாபடீஸ், ரத்த அழுத்தம், தைராய்டு, 35 வயதுக்குப் பிறகு கருத்தரிப்பது, இதயம் மற்றும் நுரையீரலில் பிரச்னை என இருக்கும் பெண்களை நாங்கள் `ஹை ரிஸ்க் கர்ப்பிணி'களாகக் கருத்தில்கொண்டு, அவர்களுக்கு முன்கூட்டியே `குழந்தை உதைப்பதை கவுன்ட் செய்ய வேண்டியதின் அவசியத்தை' சொல்லிவிடுவோம். அந்தக் காலத்தில் ஒரு மெல்லியக் கயிற்றை வைத்துக்கொண்டு குழந்தையின் ஒவ்வோர் உதைக்கும் ஒரு முடிச்சுப் போட்டுக்கொள்வார்கள் கர்ப்பிணிகள். இந்தக் காலத்து டெக்கிப் பெண்கள், செல்போனில் நோட் பண்ணிக் கொள்கிறார்கள்'' என்று சிரிக்கிற டாக்டர் வாணி, ஒரு குழந்தை எந்தெந்தச் சூழ்நிலைகளில் அம்மாவின் வயிற்றில் உதைக்காமல் அமைதியாக இருக்கும் என்பதையும் சொன்னார்.  

சிசு

``24 - 26 வாரங்களில் குழந்தை ரொம்ப உதைக்கிற மாதிரி இருக்கும். அந்த வாரங்களில் சிசுவின் உருவமும் சிறியது, எடையும் குறைவு. அதனால் துள்ளிக்குதித்து அம்மாவின் கருப்பையில் உதைத்துக்கொண்டே இருக்கும் பொடிசுகள். டெலிவரிக்கு ஒன்று முதல் ஒன்றரை மாதம் இருக்கிற நேரத்தில் ஒரு நாளைக்கு 10 முதல் 12 கிக் மட்டுமே கொடுக்கும். ஏனென்றால், அந்த நேரத்தில் குழந்தை கிட்டத்தட்ட 3 கிலோ வரைக்கும் வந்துவிடும். தவிர, கருப்பையாலும் அதற்கு மேல் விரிய முடியாது என்பதால், குழந்தைக்குத் துள்ளிக்குதிக்க இடம் போதாமல் அமைதியாகி விடும். 

குழந்தை

அடுத்த பாயின்ட், வயிற்றில் இருக்கிற சிசுவுக்கு 6 மணி நேரத்துக்கு ஒரு முறை சத்துகள் தேவைப்படும்.  இரவு முழுக்கச் சாப்பிடாமல் இருந்து காலையிலும் ரொம்ப நேரம் அம்மா சாப்பிடாமல் இருந்தால், சத்துகள் கிடைக்காமல் சிசுவானது அமைதியாகிவிடும். சில கர்ப்பிணிகள், லன்ச் சாப்பிட்டதுக்குப் பின்னாடி `பாப்பா துள்ளித் துள்ளிக் குதிக்குது' என்பார்கள். அதற்கும் இதுதான் காரணம். என்னிடம் வருகிற கர்ப்பிணிகளிடம் இரவில் சிறுநீர் கழிக்க எழுந்திருக்கும்போது, அரை கப் பால், ஒரு வாழைப்பழம், ஒரு ரஸ்க் அல்லது பிஸ்கெட் என்று எதையாவது சாப்பிடச் சொல்வேன். இந்த 2 காரணங்களுக்காக சிசு அமைதியாக இருந்தால் ஒரு பிரச்னையும் இல்லை.  

அம்மா

தொடர்ந்து 3 மணி நேரத்துக்குக் குழந்தை வயிற்றுக்குள் உதைக்கவில்லை என்றால், தொப்புள் கொடி கழுத்தைச் சுற்றிக்கொண்டிருக்கலாம். அம்மாவின் வயிற்றுக்குள் உதைப்பதற்காகக் குதித்தால், தொப்புள் கொடி இன்னும் இறுகும் என்பதால் உடனே சிசு தன்னுடைய மூவ்மென்ட்டைக் குறைத்துவிடும். பனிக்குடத் தண்ணீரைக் குடித்து மூச்சுத் திணறல் ஏற்பட்டாலும் குழந்தை அசைவுகளை நிறுத்திக்கொள்ளும். இவற்றையெல்லாம், அம்மாக்களால் மட்டுமே உணர முடியும். அதனால்தான், தொடர்ந்து 3 மணி நேரத்துக்குக் குழந்தையிடம் அசைவில்லையென்றால் உடனே மருத்துவமனைக்கு வரச் சொல்லிவிடுவோம். மற்றபடி ட்வின்ஸ், டயாபடீஸ், ரத்த அழுத்தம் என்று எந்தப் பிரச்னைகள் இருந்தாலும் தாயையும் சேயையும் காப்பாற்றி விடுகிற அளவுக்கு இன்றைக்கு மருத்துவம் முன்னேறிவிட்டது. ஆனால், அதே நேரம் வயிற்றில் இருக்கிற சிசுவின் அசைவைக் கவனிக்க வேண்டியது எவ்வளவு முக்கியம் என்பதை அம்மாக்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்'' என்றார் டாக்டர் வாணி! 


டிரெண்டிங் @ விகடன்