வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (10/12/2018)

கடைசி தொடர்பு:21:02 (10/12/2018)

அரசு மருத்துவமனை செவிலியர்களுக்கு  புதிய சீருடை அறிமுகம்!

தமிழக அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களுக்கு புதிய சீருடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களுக்கு புதிய சீருடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ' தமிழகத்தில் இதுவரை 9533 செவிலியர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  சீருடையை  மாற்ற வேண்டும் என்ற அவர்களின்  கோரிக்கை ஏற்கப்பட்டு  சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்காக அமைக்கப்பட்ட  மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் தலைமையில் 9 நபர் அடங்கிய குழுவினர் சீருடைகளில் மாற்றம் செய்ய அரசுக்குப் பரிந்துரை செய்தனர். இந்த உத்தரவு விரைவில் நடைமுறைக்கு வர  நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புதிய சீருடை

புதிய சீருடையானது முதல்நிலை செவிலியக் கண்காணிப்பாளர்களுக்கு  பிஸ்தா பச்சை நிற புடவை, கைப்பகுதியில் தங்க நிற பட்டன்களுடன் செவிலியர்கள் இலச்சினை மற்றும் 2 பாக்கெட்டுகள் கொண்ட வெள்ளை நிற ஓவர் கோட், வெள்ளை நிற காலணி மற்றும் காலுறை கொண்டதாக இருக்கும். இரண்டாம் நிலை செவிலியக்  கண்காணிப்பாளர்களுக்கு  இளஞ்சிவப்பு நிற புடவை, 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் செவிலியர்களுக்கு வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிறத் தொப்பி, இலச்சினை பதித்த வெள்ளை நிற அரைக்கை சுடிதார்- பேண்ட் மற்றும் இரண்டு பாக்கெட்டுகள் கொண்ட ஓவர் கோட், வெள்ளை நிற தோல் காலணி, காலுறை. 

புதிய சீருடை

முதல்நிலை ஆண் செவிலியக்  கண்காணிப்பாளகளுக்கு நீல நிற (நேவி புளூ) பேண்ட், பிஸ்தா பச்சை நிற முழுக்கை சட்டை, கைகளின் அடிப்பகுதியில் தங்கநிற பட்டன்கள், 

இலச்சினையுடன் தங்கநிற பெயர்ப் பட்டை பொருத்திய 2 பாக்கெட்டுகள் கொண்ட வெள்ளை நிற ஓவர் கோட், கறுப்பு நிற காலுறை மற்றும் காலணி, இரண்டாம் நிலை செவிலியக்  கண்காணிப்பாளர்களுக்கு நீலநிற (நேவி புளூ) பேண்ட் மற்றும் இளஞ்சிவப்பு நிற முழுக்கை சட்டை, கைகளின் அடிப்பகுதியில் தங்கநிற பட்டன்கள், இலச்சினையுடன் தங்கநிற பெயர்ப் பட்டை பொருத்திய 2 பாக்கெட்டுகள் கொண்ட வெள்ளை நிற ஓவர் கோட், கறுப்பு நிற காலுறை மற்றும் காலணி. 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் செவிலியர்களுக்கு வெள்ளை நிற பேண்ட் மற்றும் அரைக்கை சட்டை, இலச்சினை, தங்கநிற காந்தத்துடன் கூடிய பெயர்ப்பட்டை பொருத்திய 2 பாக்கெட்டுகள் கொண்ட ஓவர்கோட், காலுறையுடன் கூடிய கறுப்பு நிற காலணிஅளிக்கப்பட உள்ளது. இது தவிர பிற பிரிவு செவிலியர்களுக்குத் தனியாக நிறம் அறிவிக்கப்பட்டுள்ளது.   

இதுகுறித்து செவிலியர் சங்கத் தலைவி வளர்மதி கூறுகையில்,  "செவிலியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது'' என்றார்.