நாய் வளர்க்கிறீர்களா? இதயநோயிலிருந்து தப்பிக்கலாம்! - ஆய்வில் தகவல் | dogs can prevent heart diseases

வெளியிடப்பட்ட நேரம்: 10:42 (11/12/2018)

கடைசி தொடர்பு:10:42 (11/12/2018)

நாய் வளர்க்கிறீர்களா? இதயநோயிலிருந்து தப்பிக்கலாம்! - ஆய்வில் தகவல்

நாய் மனிதனின் உற்றத் தோழன் என்பது நாமறிந்ததே. பல ஆபத்தான தருணங்களில் நாய்கள் தங்கள் எஜமானர்களைக் காப்பாற்றிய கதைகளையும் கேட்டிருக்கிறோம். ஆனால், நாய்கள் மனிதர்களுக்கு வரும் இதய நோய்களையும் தடுக்கிறது என்கிறது புதிய ஆய்வு.

நாய் வளர்த்தால் இதயநோய்கள் வராது

ஸ்வீடன் நாட்டில் 40 வயது முதல் 80 வயதினர் வரை 34 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், நாய்களை வளர்ப்போருக்கு இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு 23 சதவிகிதம் குறைவாக உள்ளது என்றும், எந்த நோய் பாதித்தும் உயிரிழப்பதற்கான வாய்ப்புகள் 20 சதவிகிதம் குறைவாக உள்ளது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

வீட்டில் நாய் வளர்ப்போர் அதை அழைத்துக்கொண்டு நடைப்பயிற்சி செல்வது, அதனுடன் விளையாடுவது என்று சுறுசுறுப்பாக இருப்பதால், உடல் உழைப்பு அதிகரித்து, உடலில் கெட்டகொழுப்பு சேர்வது குறைகிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதற்கு முன்பு நடைபெற்ற ஆய்வுகளில் இதயநோய்கள் மற்றும் குறிப்பிட்ட வயதுக்கு முன்பே உயிரிழப்பு ஆகியவற்றுக்கு முக்கியக் காரணமான தனிமையையும் மனஅழுத்தத்தையும் நாய்கள் போக்குகின்றன என்று கண்டறியப்பட்டது.

தனிமையில் இருப்பவர்களின் வாழ்க்கையை நாய்கள் மேலும் அர்த்தமுள்ளதாக்குகின்றன. நாய் வைத்திருப்பவர்கள் பிற மனிதர்களிடம் அதிகம் பழகுவார்கள்.  தனிமையில் இருப்பவர்கள் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும், வீட்டில் வளர்க்கும் நாயைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு, அதனால் அளிக்கப்படும் சிகிச்சை விரைவாக உடலில் வேலை செய்யும் எனப் பல ஆச்சர்ய முடிவுகளை இந்த ஆய்வு அளித்துள்ளது.

அதே சமயம், நாயை வாங்கி சங்கிலியால் கட்டிப்போட்டுவிட்டு, வீட்டு சோபாவில் படுத்து துரித உணவுகளைச் சுவைத்துக்கொண்டே டிவி பார்ப்பவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு குறையும் என்று கனவு காண வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.