பெருஞ்சீரகத் தேநீர், புதினாத் தேநீர்... பசியின்மையைப் போக்க 8 வழிகள்! | loss of appetite

வெளியிடப்பட்ட நேரம்: 13:59 (12/12/2018)

கடைசி தொடர்பு:13:59 (12/12/2018)

பெருஞ்சீரகத் தேநீர், புதினாத் தேநீர்... பசியின்மையைப் போக்க 8 வழிகள்!

கொத்தமல்லிக் கீரையைச் சாறெடுத்து சில நாள்கள் தொடர்ந்து குடித்து வந்தால் பசியுணர்வு அதிகரிக்கும். கொத்தமல்லி ஜீரண சக்தியை அதிகரித்து பசியைத் தூண்டுகிறது.

பெருஞ்சீரகத் தேநீர், புதினாத் தேநீர்... பசியின்மையைப் போக்க 8 வழிகள்!

ரு மனிதன் ஆரோக்கியமாக இருக்கிறான் என்பதற்கு பசியுணர்வும் ஒரு குறியீடு. நாம் ஒவ்வொரு வேளையும் சாப்பிடும் உணவு செரிமானம் ஆகி, அடுத்த வேளை உணவை வரவேற்க நமது வயிறும் மனதும் தயார்நிலையில் இருக்க வேண்டும். அஜீரணம், பாக்டீரியா, வைரஸ் பாதிப்பு, தைராய்டு, தீவிர நோய் பாதிப்புகள், மனஅழுத்தம் உள்ளிட்டக் காரணங்களால் சிலருக்குப் பசியின்மை ஏற்படுகிறது. பசியின்மை என்பது சாதாரண விஷயம் இல்லை. `அனோரெக்ஸியா' (Anorexia) எனும் ஒரு குறைபாடு. `ஒருவருக்குத் தொடர்ந்து பசியின்மை பிரச்னை நீடிக்கும்போது, தேவையான ஊட்டச்சத்துகள், சத்துகள் கிடைப்பது குறைந்து, உடல் நலிவடையும்' என்கின்றனர் மருத்துவர்கள்.

பசியின்மை போக்கும் பழங்கள்

பசியின்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரோக்கியமான வழியில், அன்றாடம் நாம் பயன்படுத்தும் எளிய உணவுப்பொருள்களின் மூலம் பசியைத் தூண்டுவதற்கான 8 வழிமுறைகளை விளக்குகிறார் சித்த மருத்துவர் மல்லிகா.

1.பெருஞ்சீரகத் தேநீர்

 பெருஞ்சீரகம் மற்றும் சீரகம் இரண்டையும் சமஅளவு எடுத்து தண்ணீரில் நன்றாகக் கொதிக்க வைக்கவேண்டும். அந்தத் தண்ணீருடன் தேன் கலந்து தேநீராகத் தினமும் இருவேளை குடித்தால் நன்றாகப் பசி எடுக்கும். பெருஞ்சீரகம் பித்தப்பை உற்பத்தியைத் தூண்டுவதால் செரிமானம் அதிகரித்துப் பசி எடுக்கிறது. இதைக் குழந்தைகளுக்குக் கொடுக்கும் முன் மருத்துவரின் ஆலோசனையைக் கேட்க வேண்டும். 

2.கொத்தமல்லிச்சாறு  

கொத்தமல்லிக் கீரையைச் சாறெடுத்து சில நாள்கள் தொடர்ந்து குடித்து வந்தால் பசியுணர்வு அதிகரிக்கும். கொத்தமல்லி ஜீரண சக்தியை அதிகரித்து பசியைத் தூண்டுகிறது. ஆனால், இதனை வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது. 

இஞ்சி

3. இஞ்சித் தேநீர் 

தோல் நீக்கிய இஞ்சி, தனியா, ஏலக்காய் ஆகிய மூன்றையும் சிறிதளவு எடுத்து அரைக்கவும். அந்த விழுதுடன் ஒன்றிரண்டு மிளகைத் தட்டிப் போட்டு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். அந்த நீருடன் நாட்டுச்சர்க்கரை சேர்த்து மிதமான சூட்டில் 30 மில்லி அளவில் தினமும் குடித்து வர வேண்டும். குழந்தைகளுக்கு என்றால் 10 மில்லி அளவு போதுமானது. இஞ்சி மற்றும் தனியா செரிமானத்தை அதிகரித்துப் பசியைத் தூண்டும். 

4. மாதுளை பழச்சாறு

மாதுளை பழச்சாற்றை தினமும் குடித்தால் பசியுணர்வு அதிகரிப்பதுடன் உடலுக்குப் புத்துணர்ச்சியும் கிடைக்கும். இதைக் குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். 

மாதுளை

5. நெல்லிக்காய்  

தேனில் ஊற வைத்த நெல்லிக்காயைச் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் சுத்தமாவதுடன், உணவு எளிதில் செரித்து, அடுத்த வேளைப் பசியைத் தூண்டும். ஒரு நாளைக்கு நெல்லிக்காயில் இருக்கும் ஓரிதழை மட்டுமே சாப்பிட வேண்டும். 

6. அத்திப்பழம் 

உணவுக் குழாயின் செயல்பாட்டை மேம்படுத்தி பசியைத் தூண்டுகிறது. அத்திப்பழத்தை உலர வைத்துச் சாப்பிடலாம். இரவில் ஒரு உலர்ந்த அத்திப்பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்னை நீங்கி, தானாகவே வயிற்றில் பசி எடுக்கத் தொடங்கும்.

7.புதினா தேநீர் 

புதினா இலைகளைத் தண்ணீரில் நன்றாகக் கொதிக்க வைத்து அத்துடன் எலுமிச்சம் பழச்சாறு மற்றும் தேன் கலந்து தினமும் இரண்டு வேளை குடித்தால் பசி எடுக்கும். புதினா பசியின்மையைப் போக்கிப் புத்துணர்வு தரும்.

புதினா

8. எலுமிச்சைப் பழச்சாறு 

அரைத் தேக்கரண்டி எலுமிச்சம் பழச்சாற்றை உணவில் பிழிந்தோ அல்லது பழத்தைப் பிழிந்து சாறாகவோ இரண்டு வேளை குடித்தால் நன்றாகப் பசி எடுக்கும். இந்தப் பழச்சாற்றுடன் தேன் கலந்தும் குடிக்கலாம். எலுமிச்சம் பழத்தில் இருக்கும் வைட்டமின் சி சத்து அஜீரணத்தைப் போக்கும் தன்மையுடையது.

 


டிரெண்டிங் @ விகடன்