மீன் எண்ணெய் சாப்பிடுவது நல்லதா? | An article on the benefits of Fish Oil

வெளியிடப்பட்ட நேரம்: 18:55 (12/12/2018)

கடைசி தொடர்பு:18:55 (12/12/2018)

மீன் எண்ணெய் சாப்பிடுவது நல்லதா?

சரியான அளவில் மீன் எண்ணெய் உட்கொள்வதால் ரத்த அழுத்தப் பிரச்னையை சரிசெய்ய உதவும். மாரடைப்பிலிருந்து காக்கும். மூளையின் செயல்பாட்டுத்திறனை அதிகரிக்கும்.

மீன் எண்ணெய் சாப்பிடுவது நல்லதா?

றுவைசிகிச்சையின்போது ஒவ்வொருவரது உடல் சார்ந்த பிரச்னைகளைப் பொறுத்து, சில சிக்கல்கள் ஏற்படும். இந்தச் சிக்கல்கள் வயது, நோய்கள், ஏற்கெனவே உள்ள உடல் சார்ந்த பிரச்னைகள், குறிப்பிட்ட மருந்துக்கு உடல் ஒத்துழைப்பது போன்றவற்றைப் பொறுத்தே அமையும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். 

மீன் எண்ணெய் மாத்திரைகள்

அறுவைசிகிச்சையின்போது ரத்தப்போக்கு ஏற்படுவது வாடிக்கை. அதிகமாக ரத்தம் வெளியேறினால் அதைச் சரிசெய்வதற்கு நோயாளிக்கு ரத்தம் ஏற்றுவார்கள். பொதுவாக அறுவைசிகிச்சையின்போது ஏற்படும் சிக்கல்களைச் (Complication While doing Surgery) சரிசெய்ய மருத்துவர்கள் முன்னெச்சரிக்கையாக சில நடவடிக்கைகளை எடுப்பது வழக்கம். அந்த வகையில் அறுவைசிகிச்சைக்கு முன், ரத்தம் சார்ந்த பிரச்னைகள் ஏதேனும் இருக்கிறதா அல்லது மருந்து ஒவ்வாமை எதுவும் இருக்கிறதா என்று பரிசோதிக்கப்படும். அப்படி எதுவும் கண்டறியப்பட்டால், முதலில் அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்படும். 

இதுபோன்று அறுவைசிகிச்சையில் ஏற்படும் சிக்கல்கள், பிரச்னைகளை முன்கூட்டியே சரிசெய்வது எப்படி என்பதைக் கண்டறிய பல ஆய்வுகள் நடந்துவருகின்றன. அந்த வகையில் அண்மையில் நடைபெற்ற ஆய்வு ஒன்று ஜர்னல் சர்க்குலேஷன் (Journal Circulation) என்ற இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஸான்ஃபோர்டு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வை மேற்கொண்டனர். 

இதயம் - மீன் எண்ணெய்

ஆய்வில் இதய அறுவைசிகிச்சைக்காகக் காத்திருந்த 1,516 நோயாளிகளுக்கு மீன் எண்ணெய் வழங்கப்பட்டது. அறுவைசிகிச்சைக்கு இரண்டு முதல் ஐந்து நாள்களுக்கு முன்பு 6.5 - 8 கிராம் என்ற அளவிலும், அறுவைசிகிச்சை செய்யப்படும் நாள் முதல் சிகிச்சை நிறைவடைந்து டிஸ்சார்ஜ் ஆகும்வரை தினமும் 1.7 கிராம் என்ற அளவிலும் மீன் எண்ணெய் எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். ஆய்வின் முடிவில் மீன் எண்ணெயை எடுத்துக்கொண்ட பெரும்பாலானவர்களுக்கு அறுவைசிகிச்சையின்போது ரத்தப்போக்கு குறைவாகவும், சிலருக்கு ரத்தப்போக்கு தடுக்கப்பட்டதும் கண்டறியப்பட்டன. மீன் எண்ணெயிலுள்ள ஒமேகா 3, இ.பி.ஏ மற்றும் டி.ஹெச்.ஏ போன்ற அமிலங்கள்தான் ரத்தப்போக்கு குறைவதற்கான காரணம் என்று தெரியவந்துள்ளது.

`பிளீடிங் அகாடமிக் ரிசர்ச் கன்சோர்டியம்' (Bleeding Academic Research Consortium - BARC) என்ற அமைப்பு செய்த ஆய்விலும், மீன் எண்ணெயில் உள்ள இ.பி.ஏ மற்றும் டி.ஹெச்.ஏ அமிலங்களை அறுவைசிகிச்சை நடைபெறும் நாளன்று, காலையில் எடுத்துக்கொண்டால் சிகிச்சையின்போது ஏற்படும் ரத்தப்போக்கு கட்டுப்படுத்தப்படும் என்று கண்டறியப்பட்டது. 

மீன் எண்ணெயிலுள்ள சத்துகள் குறித்துத் தெரிந்துகொள்ள ஊட்டச்சத்து நிபுணர் கோவர்த்தினியிடம் கேட்டோம். 

``மீன் எண்ணெயில் `ஒமேகா 3' கொழுப்பு அமிலம் அதிகம் இருக்கும். இந்த வகை கொழுப்பு அமிலம் உடலுக்கு நன்மை அளிப்பது என்பதால் இதயப் பிரச்னை உள்ளவர்களுக்குப் பரிந்துரைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் `ஒமேகா 3' அதிகமுள்ள மீன் எண்ணெயை உட்கொள்வது, உடலுக்கு அவசியமானது. மீன் எண்ணெயை நேரடியாக எடுத்துக்கொள்ள முடியாதவர்கள் மீன்களைச் சாப்பிடலாம். கொழுப்புச்சத்து அதிகமுள்ள மீன் வகைகளில் `ஒமேகா 3' அதிகம் காணப்படும். இதய நோய்களுக்கான அமெரிக்க அமைப்பு (American Heart Association) வாரத்தில் இரண்டு முறையாவது மீன் வகைகளை உட்கொள்ள அறிவுறுத்துகிறது. 

ஒமேகா 3

சரியான அளவில் மீன் எண்ணெய் உட்கொள்வதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். அப்படியான சில நன்மைகள் இதோ... ஊட்டச்சத்து நிபுணர் கோவர்த்தினி

* ரத்தத்திலுள்ள டிரைகிளிசரைடு எனும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் கொழுப்பு அளவு அதிகரிப்பதைத் தடுக்கும். 

* ரத்தஅழுத்தப் பிரச்னையைச் சரிசெய்ய உதவும். 

* மாரடைப்பிலிருந்து காக்கும். 

* மூளையின் செயல்பாட்டுத்திறன் அதிகரிக்கும்.

* வயது முதிர்வால் ஏற்படும் மூட்டு வலி, எலும்பு தேய்மானப் பிரச்னையைச் சரியாக்கும். 

* கண்கள், சருமம், முடி ஆகியவற்றின் ஆரோக்கியத்துக்கு நல்லது.

* நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். 

* உடலிலுள்ள நச்சுகளை வெளியேற்றும்.

* உடல் உள்ளுறுப்புகளைப் பொறுத்தவரை, குடல் பகுதி ஆரோக்கியமாக இருக்க உதவும். 

* தீவிர உடற்பயிற்சி செய்பவர்கள், பயிற்சி செய்து முடித்ததும் மீன் எண்ணெய் மாத்திரைகளை உட்கொண்டால், உடல் வலி நீங்கும்.

உடல் இயக்கம் ஆரோக்கியம்

எந்த உணவையுமே அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் ஆபத்துதான். மீன் எண்ணெயிலும் எண்ணற்ற நன்மைகள் உள்ளன. ஆனால், அளவுக்கு மீறி எடுத்துக்கொண்டால், வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படும். அறுவைசிகிச்சை செய்ய வேண்டியவர்கள் தொடர்ந்து அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் அறுவைசிகிச்சை நடைபெற்ற இடத்தில் ரத்தக்கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது. 

அதனால் எந்தவித நோயும் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பவர்கள் ஒருநாளில் மூன்று கிராம் (ஒன்றரை டீஸ்பூன்) என்ற அளவு மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். வாழ்க்கை முறை மாற்றத்தால் ஏற்படும் சர்க்கரை நோய், இதய நோய் போன்ற தொற்றா நோய்கள் மற்றும் ஒவ்வாமை பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்