`பன்றிக்காய்ச்சல்னு சொல்லாதீங்க; H1N1 காய்ச்சல்னு சொல்லுங்க!' கோரிக்கை வைக்கும் சங்கம் | Pig breeder association requests to call H1N1 fever not pandri kaichal

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (13/12/2018)

கடைசி தொடர்பு:18:00 (13/12/2018)

`பன்றிக்காய்ச்சல்னு சொல்லாதீங்க; H1N1 காய்ச்சல்னு சொல்லுங்க!' கோரிக்கை வைக்கும் சங்கம்

பன்றிக் காய்ச்சல் என்பதை H1N1 எனக் கூற வேண்டும் எனப் பன்றி வளர்ப்போர் மற்றும் இறைச்சிக்கடை வியாபாரிகள் நலச் சங்கங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அப்படி அழைப்பதால் தங்கள் தொழில் பாதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியரிடம் மனுவும் அளித்துள்ளனர்.

அந்த மனுவில், ``தமிழகத்தில் 2,000 பன்றி வளர்ப்புப் பண்ணைகள் உள்ளன. இத்தொழிலை நம்பி 3 லட்சம் பேர் இருக்கிறோம். கோவை மாவட்டத்தில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட பண்ணைகள் உள்ளன. 500 குடும்பங்கள் இந்தத் தொழிலை நம்பி வாழ்ந்து வருகிறோம். அனைத்து பண்ணைகளிலும் முறையாகப் பராமரிக்கப்பட்டு கால்நடை மருத்துவரின் வழிகாட்டுதலின்படிதான் பன்றிகள் வளர்க்கப்படுகின்றன. 

கால்நடை மருத்துவமனையிலிருந்து மருத்துவர் எங்கள் பண்ணையை மாதம் ஒருமுறை பார்வையிடுகிறார். வெண்பன்றிக்கு நோய் ஏற்பட்டால் மருந்துகளையும் தருகிறார். கோவை வடவள்ளியில் அரசாங்க கால்நடை பராமரிப்புத்துறையிலும் பெண்கள் இத்தொழில் செய்து வருகிறார்கள். கடை அமைப்பதற்கும், பண்ணை அமைப்பதற்கும் அரசு சார்பில் மானியங்கள் வழங்கப்படுகின்றன. அது மட்டுமல்லாமல் தனியார் வங்கிகளில் கடன் வாங்கித்தான் இந்தத் தொழிலை நடத்துகிறோம்.

மனு

வெண்பன்றி இறைச்சி சாப்பிடுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பண்ணைகளும் அதிகரித்து வருகின்றன. மக்கள்  அதிகம் கூடும் இடங்களில் பன்றிக் காய்ச்சல் என்று விளம்பரப் பலகைகளை வைத்து விளம்பரம் செய்கிறார்கள். அரசும் மருத்துவர்களும் H1N1 என்று கூற வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால், ஊடகங்கள் பன்றிக் காய்ச்சல் என்றே பதிவு செய்கின்றன. இதனால் மக்கள்  பன்றி இறைச்சியைச் சாப்பிட பயப்படுகிறார்கள். அதனால், எங்கள் வெண்பன்றித் தொழில் மிகவும் பாதிப்படைந்து எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகிறது. எனவே, பன்றிக்காய்ச்சல் என்ற வார்த்தையைத் தவிர்த்து H1N1 என்றே  அழைக்க வேண்டும்'' எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1933-ம் ஆண்டு பன்றியில் இருந்துதான் இந்த வைரஸ் மனிதர்களுக்குப் பரவியது. ஆனால், தற்போது பன்றிக்காய்ச்சல் பன்றியிடமிருந்தோ, வேறு எந்த விலங்கிடமிருந்தோ பரவுவதில்லை என்பதே உண்மை.