கேட்டல், தொடுதல் பிறவிக் குறைபாடுகளைப் போக்கும் `தெரப்பிட்டிக் பூங்கா'! | Story about Therapeutic park in Tiruvallur district head hospital

வெளியிடப்பட்ட நேரம்: 17:47 (15/12/2018)

கடைசி தொடர்பு:17:47 (15/12/2018)

கேட்டல், தொடுதல் பிறவிக் குறைபாடுகளைப் போக்கும் `தெரப்பிட்டிக் பூங்கா'!

பிறந்த குழந்தை முதல் 18 வயது நிரம்பிய குழந்தைகளுக்கு அவர்களது குறைபாடுகளுக்கு ஏற்ப உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கேட்டல், தொடுதல் பிறவிக் குறைபாடுகளைப் போக்கும் `தெரப்பிட்டிக் பூங்கா'!

ந்தியாவில் ஆறு முதல் ஏழு சதவிகிதக் குழந்தைகள் பிறவிக் குறைபாடுகளுடன் பிறப்பதாகத் தேசிய சுகாதார மையம் கூறியுள்ளது. அதன்படி ஆண்டுக்கு 17 லட்சம் குழந்தைகள் பிறவிக் குறைபாட்டுடன் பிறக்கின்றனர். எனவே, பிறவிக் குறைபாடு உடைய குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களுக்குச் சிகிச்சை அளிக்க பல்வேறு திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தி வருகின்றன.

தெரப்பிட்டிக் பூங்கா

இதன் ஒருபகுதியாக திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவை மையம் (DEIC) தொடங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பள்ளி சிறார் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டமான ராஷ்டிரிய பால் ஸ்வஸ்த்ய கார்யகரம் (RBSK) திட்டத்தின் கீழ் மருத்துவக் குழுவினர் பள்ளிகளிலும் அங்கன்வாடி மையங்களிலும் சிறப்பு முகாம்களை நடத்துகின்றனர். முகாமின்போது கண்டறியப்படும் பிறவிக் குறைபாடு உடைய குழந்தைகளுக்குச் சிகிச்சை அளிக்கப் பரிந்துரை செய்யப்படுகிறது. பிறந்த குழந்தை முதல் 18 வயது நிரம்பிய குழந்தைகளுக்கு அவர்களது குறைபாடுகளுக்கு ஏற்ப உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதன் ஒருபகுதியாக, குறைபாடுகளுடன் வரும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும்விதமாக மாநிலத்திலேயே முதல் முறையாக `தெரப்பிட்டிக் பூங்கா' (Therapeutic Park) என்னும் நவீனப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. 16 லட்சம் ரூபாய் செலவில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் உதவியுடன் இந்தப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள்

`தெரப்பிட்டிக் பூங்கா' பற்றி அறியவும், அங்கு எத்தகைய சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதை அறிந்துகொள்ளவும் விசிட் அடித்தோம். அங்கு தெரப்பிட்டிக் சிகிச்சை அளிக்கும் மருத்துவர் ஜெகதீஷ்குமார் கூறும்போது, ``தினமும் இங்கு சுமார் 50 குழந்தைகள் சிகிச்சைக்காக வருகின்றனர். ஆட்டிசம் (Autism), பெருமூளை வாதம் (Cerebral Palsy) போன்ற குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு பலவிதமான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. இந்த தெரப்பிட்டிக் பூங்கா அவர்களது கேட்டல், தொடுதல் உள்ளிட்ட திறன்களை மேம்படுத்த உதவுகிறது” என்றார். 

பூங்காவில் உலாவிக்கொண்டிருந்த குழந்தைகளை உற்சாகப்படுத்துவதுடன் அவர்களது குறைகளைக் கண்டறிந்து சிகிச்சை அளித்துவரும் ஆக்குபேஷனல் தெரப்பிஸ்ட் (Occupational therapist) மீனாவிடம் பேசும்போது, தினமும் இரண்டு மணி நேரம் குழந்தைகளுக்கு அவர்களது குறைகளுக்கு ஏற்ப சிகிச்சை அளிப்பதாகக் கூறினார். இந்தப் பூங்காவை மூன்றாகப் பிரித்து சிகிச்சை அளிப்பதாகவும் தெரிவித்தார்.  

விளையாட்டு

தொடு உணர்வு மற்றும் செவித் திறனை மேம்படுத்தும் பாதை

பார்வைத் திறனற்ற குழந்தைகளுக்குத் தொடு உணர்வையும் கேட்டல் திறனையும் மேம்படுத்துவதற்காகத் தண்ணீர், மரப்பலகை, மணல், கூழாங்கல், சங்கு போன்றவற்றால் ஆன பாதை அமைக்கப்பட்டுள்ளது. அவற்றின் மீது அந்தக் குழந்தைகள் கால் ஊன்றி நடப்பதால் அவர்களால் உணர்ச்சியை அறிந்துகொள்ள முடிகிறது. மேலும் இங்குள்ள கூண்டில் பஞ்சவர்ணக் கிளிகள் உள்ளன. அவை கத்தும் சத்தத்தைக் கேட்டு ஓசை வரும் திசையை குழந்தைகள் சரியாகக் கண்டறியவும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

உடல் சமநிலை, தசை வளர்ச்சி மேம்பாடு மற்றும் அசைவு உணர்வு ஒருங்கிணைப்புப் பகுதி

பூங்காக்கள் எல்லாவற்றிலும் இருப்பதுபோல ஊஞ்சல், சறுக்குமரம், சீசா பலகை போன்ற விளையாட்டுச் சாதனங்கள் உள்ளன. கூடவே,  தசைகளை மேம்படுத்த சில சாதனங்கள் வைக்கப்பட்டுள்ளன. தொங்குவதற்கு ஒரு சாதனம், பிடித்துக்கொண்டு நடக்கவும், ஏறுவதற்கும் கம்பிகள் போன்ற சிகிச்சை சாதனங்களும் அமைக்கப்பட்டுள்ளன. கால் மூட்டு சரியாக இயங்காத குழந்தைகளுக்கு, நடக்கும் பாதை வட்டமாகப் பல வண்ணங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கால் மூட்டின் கீழ்ப் பகுதி (Lower Limb) சரியாகச் செயல்படாமல் இருக்கும் குழந்தைகள் கால்களை அந்த வட்டத்துக்குள் சரியாக வைக்கப் பயிற்சி அளிக்கப்படும். அதிலும் நாம் சொல்வதைப்போன்று சரியாகக் கால்களை வட்டத்துக்குள் வைக்கிறார்களா என்பதை அறிந்து அவர்களின் திறனைக் கண்டறிய முடியும்.

நடைபாதை

புலன்களை ஒருங்கிணைக்கும் பகுதி

துளசி, கற்பூரவள்ளி போன்ற வாசனைச் செடிகள் மூலம் நுகர்தல் திறன் மேம்படுத்தப்படுகிறது. இதேபோல் மணல் தரை மற்றும் புல் தரை அமைத்துத் தொடுதல் திறனையும், பல வண்ணப் பூக்களின் மூலம் பார்த்தல் திறனையும் ஒன்றிணைத்து புலன்களை ஒருங்கிணைக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பிற குழந்தைகளுடன் இணைந்து விளையாடும்போது இந்தச் சூழல் அவர்களை உளவியல் ரீதியாகவும் மேம்படுத்தும்'' என்றார்.

பறவைகள்

குறைபாடுகளைக் கண்டறிந்து அவர்களுக்குத் தரப்படும் இந்த வித்தியாச சிகிச்சைகளைப் பெறுவதற்கு குழந்தைகள் ஆர்வத்துடன் வருகின்றனர். மனரீதியாகவும் குழந்தைகளுக்கு இந்த சிகிச்சை மகிழ்ச்சியை அளிக்கிறது. இது குழந்தைகளின் பெற்றோர் மத்தியில் மட்டுமல்ல, அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.


டிரெண்டிங் @ விகடன்