ஓமம், வசம்பு, மாசிக்காய்... நோய்களிலிருந்து குழந்தைகளைக் காக்கும் எளிய மருந்துகள்! | herbals prevent child diseases!

வெளியிடப்பட்ட நேரம்: 11:39 (16/12/2018)

கடைசி தொடர்பு:11:39 (16/12/2018)

ஓமம், வசம்பு, மாசிக்காய்... நோய்களிலிருந்து குழந்தைகளைக் காக்கும் எளிய மருந்துகள்!

குழந்தைகளுக்கு நோய்கள் நெருங்காமல் பாதுகாப்பதுடன், நோய்களிலிருந்து விடுபடவும் மூலிகை மருந்துகள் உதவுகின்றன.

ஓமம், வசம்பு, மாசிக்காய்... நோய்களிலிருந்து குழந்தைகளைக் காக்கும் எளிய மருந்துகள்!

குழந்தை வளர்ப்பு என்பது ஒரு தனிக்கலை. அதில் தாய், தந்தை இருவருக்கும் சரிசமமான அக்கறையும் கரிசனமும் தேவை. முன்பெல்லாம் வீட்டுப் பெரியவர்களே பெரும்பாலும் குழந்தைகளை வளர்ப்பார்கள். தலைக்கு குளிப்பாட்டுவதில் தொடங்கி அவர்கள் நடை பயில்வது வரை எல்லாவற்றையும் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். அதேநேரம் மூக்கு ஒழுகலில் தொடங்கி சளி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு என எந்தவிதமான பிரச்னைகளுக்கும் எளிய மருந்துகளைக் கொடுத்துக் குணப்படுத்திவிடுவார்கள். தலைமுறை மாறினாலும் இன்றைக்கும் அந்த எளிய மருத்துவம் பின்பற்றப்பட்டு வருகிறது. 

 குழந்தைகள் உடல்நலனைக் காக்கும் எளிய முறையிலான அந்த மருத்துவம் பற்றிப் பார்ப்போம். 

 

மருந்துகள்

 

வசம்பு 

பேர் சொல்லா மருந்து, பிள்ளை மருந்து என வசம்பினைச் சொல்வார்கள். பால் அருந்தும் குழந்தைகளுக்கு சிலநேரங்களில் அது செரிமானமாகாமல் வயிறு உப்புசம், மாந்தம் ஏற்படும். உடனே நல்லெண்ணெய் தீபத்தில் வசம்பை சுட்டுக் கருக்கி, அதைத் தாய்ப்பாலில் குழைத்துக் கொடுத்தால் பிரச்னை விலகும்.வசம்பு

`டானின்' சத்து இருப்பதால் வசம்பு சுட்ட கரியை ஒரு டீஸ்பூன் அளவு குழந்தைகளுக்குக் கொடுத்தால் பேதி, ரத்தபேதி நிற்கும். வசம்புக்கு கிருமிநாசினி குணம் இருப்பதால் இதைத் தீயில் சுட்டு, அதன் கரியை தேங்காய் எண்ணெயில் குழைத்து நெற்றி, கன்னம், காலின் மேல்புறம் பொட்டு வைக்கும் பழக்கம் இன்றைக்கும் உள்ளது.

அதிமதுரம் 

குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலைப் போக்க அதிமதுரத்துடன் வேப்பந்துளிர், நாட்டுச் சர்க்கரை சமஅளவு எடுத்து நெய் விட்டு அரைத்து சுண்டைக்காய் அளவு கொடுத்தால் தாராளமாக மலம் போகும். சளி, இருமலுக்குக் காரணமான கிருமிகளை எதிர்த்துப் போராடி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது அதிமதுரம்.

மாசிக்காய் 

குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வழங்கப்படும் உரை மருந்தில் மாசிக்காய் முக்கியமானது. `டானின்' சத்து நிறைந்த மாசிக்காயைப் பொடியாக்கி ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து தேன் சேர்த்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் பேதி, சீத பேதி நிற்கும். 

வெள்ளைப்பூண்டு 

பூண்டினை தீயில் வாட்டி எடுத்த சாற்றுடன் சமஅளவு தேன் சேர்த்துச் செய்யப்படும் பூண்டுத் தேன் என்ற மருந்தைக் குழந்தைகளின் உள்நாக்கில் தடவினால் உள்நாக்கு வளர்ச்சி குணமாகும். பூண்டுடன் வசம்பு, ஓமம் சமஅளவு சேர்த்து இடித்த பொடியை அரை டீஸ்பூன் அளவு தினம் ஒருவேளை மூன்று நாள்  சாப்பிட்டால் மாந்தம்,பொருமல் குணமாகும். குப்பைமேனி இலையுடன் பூண்டு சேர்த்து அரைத்து சுண்டைக்காய் அளவு வாரம் ஒருமுறை குழந்தைகளுக்குக் கொடுத்தால் வயிற்றுப் பூச்சிகள் வெளியேறும்.

 குழந்தை

சுக்கு 

`சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை' எனும் சிறப்பு அடைமொழி பெற்ற சுக்கினை வாயில் போட்டு அதன் சாற்றை விழுங்கினால் தொண்டைக்கட்டு, குரல் கம்மல் நீங்கும். சுக்கு, துளசி இலை சேர்த்துக் கசாயமாக்கிக் கொடுத்தால் குமட்டல், தொடர்வாந்தி, மந்தம் நீங்கும். சுக்கினை தனியாகவோ அதிமதுரம் சேர்த்துப் பொடித்தோ அரை டீஸ்பூன் வீதம் இரண்டுவேளை கொடுத்தால் வறட்டு இருமல் நீங்கும்.

ஜாதிக்காய் 

ஜாதிக்காயைப் பொடியாக்கி அரை டீஸ்பூன் அளவு தேன் சேர்த்துக் கொடுத்தால் வாந்தி, மந்தம், பொருமல் போன்றவை நீங்கும். இதிலுள்ள மக்னீசியம் சத்து மூளை நரம்புகளின் அழுத்தத்தைக் குறைத்து நிம்மதியான தூக்கத்தை வரவழைக்கும். செரட்டோனின் உற்பத்தியைத் தூண்டக்கூடியது என்பதால், தூங்காத குழந்தைகளுக்கு இரவில் கால் முதல் அரை கிராம் அளவு சாதிக்காய் பொடியைப் பாலில் கலந்து கொடுக்கலாம். குழந்தைகளின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க வழங்கும் உரை மருந்தில் இதுவும் ஒரு முக்கியப் பொருளாகும்.

 பெருங்காயம் 

குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தம், வயிற்றுப்பொருமல் சரியாக ஒரு சங்கு (பாலாடை) அளவு வெந்நீரில் அரை கிராம் பெருங்காயத்தைக் கரைத்து ஓமவாட்டர் சேர்த்துக் கொடுக்கலாம். பெருங்காயத்துக்கு நுண்புழுக்கொல்லி, மலமிளக்கி போன்ற குணங்கள் இருப்பதால் இதைப் பொரித்து அரை கிராம் அளவு எடுத்து நீர் அல்லது மோரில் கலந்து வாரம் ஒருமுறை கொடுத்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியேறும்.      

மஞ்சள் 

ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியை  பால், பனங்கற்கண்டு, மிளகு சேர்த்துக் குழந்தைகளுக்கு கொடுத்தால் தொண்டைக்கம்மல், சளி, இருமல் சரியாகும். மஞ்சளை அரைத்துப் பூசி குழந்தைகளைக் குளிப்பாட்டினால் உடலுக்கு நறுமணத்தையும் பொன் நிறத்தையும் தரும். சூரியனின் ஒளிக்கதிர்களால் ஏற்படக்கூடிய தோல் நோய்கள் அணுகாமல் பாதுகாக்கும். இதிலுள்ள குர்குமின் எனும் வேதிப்பொருள் அலர்ஜியை நீக்கக்கூடியது என்பதால் எக்சீமா, ஆஸ்துமா போன்றவற்றை எளிதில் குணப்படுத்தும்.     

 குழந்தை

ஓமம் 

ஓமத்தில் செய்யப்படும் ஓமத்தீநீர் குழந்தைகளின் மாந்தம், கழிச்சலைப் போக்கும். ஓமத்தை ஒரு தூய வெள்ளைத் துணியில் கட்டி தலை நீரேற்றம், மூக்கடைப்பின்போது மோந்தால் நிவாரணம் கிடைக்கும். ஓமத்துடன் வேப்பங்கொழுந்து, மஞ்சள் பொடி சமஅளவு சேர்த்து அரைத்து ஒரு சுண்டைக்காய் அளவு வாரம் இருமுறை கொடுத்தால் வயிற்றுப்புழுக்கள் ஒழியும்.

திப்பிலி 

திப்பிலியைப் பொடியாக்கி ஒரு கிராம் அளவு எடுத்து தேன் சேர்த்து  வெற்றிலைச் சாற்றுடன் கொடுத்தால் குழந்தைகளுக்கு வரக்கூடிய காய்ச்சல், சளியுடன் கூடிய இருமல் அகலும். இருமல் குணமாக ஐந்து கிராம் திப்பிலியைப் பசும்பாலில் காய்ச்சிக் குடிக்கலாம்.

அதிமதுரம்ஒரு கிராம் திரிகடுகு சூரணத்தை தேனில் கலந்து இரண்டு வேளை கொடுத்தால் மாந்தம், செரியாமை, இருமல் குணமாகும்.

இதுபோன்று பல எளிய மூலிகைகள் பல குழந்தைகளுக்கு நோய்கள் நெருங்காமல் பாதுகாப்பதுடன், நோய்களிலிருந்து விடுபடவும் உதவுகின்றன. எடுத்ததற்கெல்லாம் மருத்துவமனைக்கும் மருந்துக்கடைக்கும் செல்லாமல் இயற்கையான இந்த மூலிகைகளைக் கொண்டு நம் வருங்கால சந்ததிகளை நோய்கள் வராமல் காப்போம்.

 


டிரெண்டிங் @ விகடன்