நடத்தையில் மாற்றம், கவனச்சிதறல் பிரச்னைகளைச் சரி செய்யும் `கலினரி ஆர்ட் தெரபி!' | Benefits of Culinary Art Therapy

வெளியிடப்பட்ட நேரம்: 10:28 (17/12/2018)

கடைசி தொடர்பு:11:58 (17/12/2018)

நடத்தையில் மாற்றம், கவனச்சிதறல் பிரச்னைகளைச் சரி செய்யும் `கலினரி ஆர்ட் தெரபி!'

நடத்தையில் மாற்றம், கவனச்சிதறல் பிரச்னைகளைச் சரி செய்யும் `கலினரி ஆர்ட் தெரபி!'

ருத்துவச் சிகிச்சை என்றாலே நம் நினைவில் வருவது மருந்துகள், மாத்திரைகள், அறுவை சிகிச்சைகள் மட்டுமே. ஆனால், அவை அனைத்தும் உடல் சார்ந்த பிரச்னைக்கான சிகிச்சைகளாக மட்டுமே இருக்கின்றன. உளவியல் பிரச்னைகளுக்கு கவுன்சலிங் மற்றும் தெரபிகள் அளிக்கப்படுகின்றன. ஆம், சமீபகாலமாக மனநலம் சார்ந்த பிரச்னைகளைத் தீர்ப்பதில் தெரபிகள் முக்கியப் பங்காற்றி வருகின்றன. குறிப்பாக, `ஆக்குபேஷனல் தெரபி'யின் பங்கு மிக அதிகம்.

ஆக்குபேஷணல் தெரபி

மனதுக்கு நெருக்கமான அல்லது பிடித்த செயல்களை முறையாகச் செய்வதன்மூலம் ஒருவரை உளவியல் பிரச்னைகளிலிருந்து மீட்பதே `ஆக்குபேஷனல் தெரபி'. பிடித்த செயல் என்பது வரைவது, விளையாடுவது, பேசுவது, சமைப்பது என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதை, ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் ஒருவரது உதவியுடன், நேர்த்தியாகச் செய்வதே இந்த தெரபி. குறிப்பாகச் சமையலை விரும்பிச் செய்வதன்மூலம் அவர்களுக்கு மனதளவில் சில மாற்றங்களைப் பெற்றுத் தரக்கூடியது`கலினரி ஆர்ட் தெரபி'. 

`சமையல் சிறந்த பொழுதுபோக்காக மட்டுமல்ல, அதை சில மாறுதல்களுடன் செய்யும்போது மனநலம் தொடர்பான பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும்' என்ற கருத்தை முழுமையாக ஆமோதிக்கிறார் ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் கிரேஸி. அவரிடம், `கலினரி ஆர்ட் தெரபி' Occupational Therapist Gracyகுறித்தும், அதன் நன்மைகள் குறித்தும் கேட்டோம்.

``கலினரி ஆர்ட் தெரபியில் ஈடுபடுவதற்கு முன், மனநல மருத்துவரின் பரிந்துரையின் பேரில் தெரபிஸ்ட்டை அணுகவேண்டும்.  சம்பந்தப்பட்ட நபர் எத்தகைய கலையின் மீது அதிக நாட்டம் வைத்திருக்கிறார், எந்த வேலையைச் செய்யும்போது அதிகம் மகிழ்கிறார், யாருடன் சேர்ந்து அந்த வேலையைச் செய்யவிரும்புகிறார், எதன் காரணமாக மனஅழுத்தத்துக்கு உள்ளானார் என்பதையெல்லாம் அடிப்படையாக வைத்தே, `அவர் எந்த தெரபியை மேற்கொள்ளலாம்' எனப் பரிந்துரை செய்வார்கள். சிலருக்குப் புதுப்புது விஷயங்களைக் கற்றுக்கொண்டு அதை சிறப்பாகச் செயல்படுத்துவதில் ஆர்வம் இருக்கும். இன்னும் சிலருக்கு வண்ணங்களின்மீதும் ஓவியத்தின்மீதும் ஆர்வமிருக்கும். அந்தவகையில், சமையல்மீது அடிப்படையில் ஆர்வம் கொண்டவர்களுக்கு `கலினரி ஆர்ட் தெரபி' பரிந்துரைக்கப்படும்.

கலினரி ஆர்ட் தெரபியின் நன்மைகள்...

* மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். 

* மன அழுத்தம் காரணமாக, நடத்தையில் மாற்றம் ஏற்பட்டவர்களுக்குச் சிறந்த தீர்வாக இருக்கும்.

* உணவு மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான விழிப்புஉணர்வைத் தரும்.

* நேரத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள முடியும். கவனச்சிதறல் பிரச்னையைச் சரிசெய்யும்.

* தன்னம்பிக்கை அளிக்கும். 

* சமையலின்போது ஐம்புலன்களையும் பயன்படுத்த வேண்டியிருக்கும் என்பதால், மூளையின் செயல்பாடு அதிகரித்து, சுறுசுறுப்பாகவும் நேர்த்தியாகவும் செயல்பட முடியும்.

சமையல் கலையின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், இதில் நேரக் கவனத்துடன் செயல்பட வேண்டியிருக்கும். `தெரபி' என்று பெயரில்  வரும்போது, கூடுதல் கவனத்துடன், சிறப்பாக எப்படிச் சமைக்கவேண்டும் என்று சொல்லிக்கொடுக்கப்படும். சின்னச் சின்ன விஷயத்துக்குக்கூடப் பாராட்டுவோம்.

மனஅழுத்தம்

மனிதர்கள் பெரும்பாலும், ஏதோவொரு விஷயத்தில் தொடர்ந்து தோல்வியைத் தழுவும்போதும் அவமானப்படும்போதும்தான் அதீத மனஉளைச்சலுக்கு ஆளாவார்கள்.  `நம்மாலும் ஒரு விஷயத்தைச் சிறப்பாகச் செய்யமுடிகிறதே' என அவர்களை எண்ண வைத்தாலேயே, அவர்கள் அதிலிருந்து வெளிவரத் தொடங்கிவிடுவர். சமையல் கலை தனி நபருக்கான பொழுதுபோக்காக மட்டுமல்லாமல் தன்னம்பிக்கையை அதிகப்படுத்தும் ஒன்றாகவும் இருக்கிறது. ஒருவரின் எல்லாச் செயலையும் எப்போதும் பாராட்டிக் கொண்டே இருக்கமுடியாது. எப்போது பாராட்ட வேண்டும், எப்போது தவற்றைச் சுட்டிக்காட்ட வேண்டும், எப்படிச் சுட்டிக்காட்ட வேண்டும் என்பதையெல்லாம் கணக்கில் கொண்டு செயல்படுவதே தெரபிஸ்டின் பணி. 

பிரச்னைகள் குறித்த சிந்தனை எதுவும் இல்லாமல், சமையலில் முழுமையாகக் கவனம் செலுத்துவது, மனதை ஒருநிலைப்படுத்துவதற்கான சிறந்த பயிற்சி. இன்றைய சூழலில் கவனச்சிதறல் பிரச்னை இருப்பவர்கள், தீவிர யோசனையில் மூழ்கித் திணறுபவர்கள், தோல்விகளிலிருந்து மீண்டுவர நினைப்பவர்களுக்கு இத்தகைய ஆர்ட் தெரபிகள் அதிகம் பரிந்துரைக்கப்படுகின்றன. 

நமக்காகவும், நமக்குப் பிடித்தவர்களுக்காகவும் நாம் எந்த விஷயத்தைச் செய்தாலும் அது கலை மட்டுமல்ல தெரபியும்கூட. அப்படி எந்தக் கலையை நேசித்துச் செய்தாலும், அதன் பலன் பலமடங்காக, பலவிதங்களில் கிடைக்கும்" என்கிறார் கிரேஸி.

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்