வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (17/12/2018)

கடைசி தொடர்பு:17:20 (17/12/2018)

உலகில் முதல்முறையாக பக்கவாத பாதிப்பை மீட்ட ஸ்டெம் செல் சிகிச்சை!

ஸ்டெம்செல் சிகிச்சையின் மூலம் நரம்பியல் செயல்பாடுகள் தூண்டப்பட்டு, உடல் இயக்கம் நடைபெறுகிறது.

கை, கால்கள் செயலிழந்த நிலையில் இருந்த இளைஞருக்கு ஸ்டெம் செல் சிகிச்சையால் உடல் இயக்கம் மீட்கப்பட்டுள்ளது. 
இதுபோன்ற சிகிச்சை வெற்றியடைவது உலகிலேயே இதுதான் முதல்முறை. 

 

ஸ்டெம் செல்


அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர் போஸன். இவர் கார் விபத்தில் சிக்கியதால் உடலில் கழுத்துக்குக் கீழ் அனைத்து பாகங்களும் செயலிழந்துவிட்டன.  கை, கால்களை அசைக்கக் கூட முடியாத நிலை இருந்தது. மருத்துவர்களும் இந்த நிலையில் இருந்து அவரை மீட்பது கடினம் என்று கைவிரித்துவிட்டனர். ஆனால், இவர் கதையில் திடீர் திருப்பமாக அமைந்தது ஸ்டெம் செல் சிகிச்சை. தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள், கருமுட்டை செல்களில் இருந்து ஸ்டெம்செல்களை உருவாக்கி, அந்த செல்களை மூளை மற்றும் முதுகுத் தண்டுவடத்தில் காணப்படும் சாதாரண செல்களாக உருமாற்றினர்.

சிகிச்சை


உருமாற்றம் செய்யப்பட்ட செல்கள் கிறிஸ்டோபர் போஸன் உட்பட, உடல் பாகங்கள் செயலிழந்த ஐந்து பேருக்கு பரிசோதனை முயற்சியாக உடலில் செலுத்தப்பட்டன.  கிறிஸ்டோபருக்கு அவருடைய முதுகுத் தண்டுவடத்தில் 1 கோடி செல்கள் ஏற்றப்பட்டன. 
இந்த முயற்சி வெற்றியடையும் என்று மருத்துவர்களே முழுமையாக நம்பவில்லை. ஆனால், செல்கள் செலுத்தப்பட்ட இரண்டு வாரத்திலேயே உடலில் மாற்றங்களை அவரால் உணர முடிந்தது. மூன்று மாதத்தில் தன் வேலைகளை அவரே செய்துகொள்ளும் அளவுக்கு கைகளும், தோள்பட்டையும் இயங்கத் தொடங்கின.

தெரபி

தற்போது பல் துலக்குவது, சாப்பிடுவது, செல்போனில் மெசேஜ் அனுப்புவது, உடற்பயிற்சி செய்வது என அனைத்து வேலைகளையும் வீல் சேரில் அமர்ந்தவாறே அவரால் செய்ய முடிகிறது.  

``முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டு உடலியக்கம் செயலிழந்தவர்களுக்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வாக இருந்தது. அறுவை சிகிச்சை முதுகு தண்டுவடத்தை நிலைப்படுத்துமே தவிர, உடல் இயக்கத்துக்கு வழிவகுக்காது. ஆனால், ஸ்டெம்செல் சிகிச்சையின் மூலம் நரம்பியல் செயல்பாடுகள் தூண்டப்பட்டு, உடல் இயக்கம் நடைபெறுகிறது " என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.