வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (17/12/2018)

கடைசி தொடர்பு:17:40 (17/12/2018)

முதுமையால் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்கும் தியேட்டர், மியூசியம் விசிட்!

``சில மாதங்களுக்கு ஒருமுறை தியேட்டர் சென்று திரைப்படம் பார்ப்பவர்கள் மற்றும் மேடை நாடகங்களைப் பார்ப்பவர்கள், அவ்வப்போது அருங்காட்சியகம் செல்பவர்கள் மற்றும் விதம்விதமான கண்காட்சிகளுக்குச் செல்பவர்களுக்கு மனஅழுத்தம் குறைகிறது."

முதுமைப் பருவம் என்றாலே, உடல் சார்ந்த கவனம் அதிகம் தேவை என்றே பலரும் நினைக்கிறோம். ஆனால், முதுமையின் மிகப்பெரிய சிக்கல்கள் யாவும் உளவியல் ரீதியானவையே. இப்படியான உளவியல் சிக்கல்களை, மருந்து மாத்திரைகளால் மட்டும் குணப்படுத்திவிட முடியாது. முதுமை அடைந்தவர்களுடன் அதிக நேரம் செலவிடுவது, அவர்களுக்குத் தனிமை உணர்வு ஏற்படாமல் பார்த்துக்கொள்வது, பொழுதுபோக்கில் அவர்களை அவ்வப்போது ஈடுபட வைப்பது என ஏதேனும் ஒன்றில் அவர்களது எண்ணங்களைச் செலுத்த வேண்டும்.

முதுமை - மனஅழுத்தம்

முதியவர்களை மனஅழுத்தத்திலிருந்து மீட்பது குறித்து பல்வேறு ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. அந்த வகையில் அண்மையில் லண்டன் பல்கலைக்கழகம் (University College London) ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. 50 வயதுக்கு மேற்பட்ட 2,000 பேர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆய்வின் முடிவில், சில மாதங்களுக்கு ஒருமுறை தியேட்டர் சென்று திரைப்படம் பார்ப்பவர்கள் மற்றும் மேடை நாடகங்களைப் பார்ப்பவர்கள், அவ்வப்போது அருங்காட்சியகம் செல்பவர்கள் மற்றும் விதம்விதமான கண்காட்சிகளுக்குச் செல்பவர்களுக்கு மனஅழுத்தம் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. அதிலும், மற்றவர்களைக் காட்டிலும் 32 சதவிகிதம் குறைந்திருப்பது கண்டறியப்பட்டது.

பிரிட்டிஷ் மனநலப் பத்திரிகை ஒன்று (British Journal of Psychiatry) இந்த ஆய்வை வெளியிட்டிருந்தது. இந்த ஆய்வைச் செய்த டெய்சி ஃபேன்கோர்க் என்பவர் இதுகுறித்துப் பேசும்போது, ``பொதுவாகவே உணவு, உடற்பயிற்சி மூலமாகக் கிடைக்கும் மனநலம், உடல்நலம் மீதான விழிப்புஉணர்வு பலருக்கும் இருக்கிறது. ஆனால், கலாசார நிகழ்ச்சிகள் மனதுக்கும் உடலுக்கும் தரும் புத்துணர்ச்சி பற்றிய விழிப்புஉணர்வு மிகக்குறைவானவர்களுக்கே இருக்கிறது. அந்த விழிப்புஉணர்வை அதிகரிக்க, அது தரும் நன்மைகளைச் சொல்ல வேண்டும் என்று நினைத்தோம். அதுதான், எங்களது ஆய்வின் நோக்கம். 

முதுமை

கலாசார நிகழ்ச்சிகளில் பொது சமூகத்தைக் குறிக்கும் வகையிலான படைப்பாற்றல்கள் மனதளவிலும் உடலளவிலும் தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தைத் தரும். பொருளாதாரரீதியாக மேம்பட்டவர்கள், வறுமையில் இருப்போர், படிப்பறிவுள்ளவர்கள், படிப்பறிவில்லாதவர்கள் என எந்த வித்தியாசமும் கலாசார நிகழ்ச்சிகளில் இருக்காது. கலாசார நிகழ்ச்சிகளுக்குச் செல்வதன்மூலம் உளவியல் நன்மைகளையும், மன அழுத்தத்திலிருந்து விடுதலையையும் பெறமுடியும். ஒருவகையில், இது நடைப்பயிற்சி போன்றதொரு பயிற்சி முறைதான். சில காலம் இடைவெளிவிட்டு மீண்டும் தொடங்கலாம் என நினைத்து இடைவெளிவிட்டால்கூட, மீண்டும் முதலில் இருந்து எல்லாவற்றையும் தொடங்க வேண்டி இருக்கும்" என்று கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க