`உப்பின் அளவைக் குறைக்க வேண்டிய அவசியமில்லை!’ - ஆய்வு சொல்லும் உண்மை | Research says reducing salt intake does not have any impact on heart health

வெளியிடப்பட்ட நேரம்: 18:45 (19/12/2018)

கடைசி தொடர்பு:18:45 (19/12/2018)

`உப்பின் அளவைக் குறைக்க வேண்டிய அவசியமில்லை!’ - ஆய்வு சொல்லும் உண்மை

``குறைவாகச் சோடியம் சத்து எடுத்துக்கொள்பவர்களுக்குப் பாதிப்புகள் தடுக்கப்படுகின்றன என்பதற்கான எந்தத் தெளிவான ஆதாரமும் இல்லை."

உணவில் உப்பு அதிகமாகச் சேர்க்கும்போது, உடல் இயக்கம் எதிர்மறையாகச் செயல்படக்கூடும். உதாரணமாக, உயர் ரத்தஅழுத்தமும், அதனால் சர்க்கரைநோயும் வரலாம். சிறுநீரகப் பிரச்னைகள் வர வாய்ப்பு உள்ளது. இப்படியாக உப்பு தொடர்பான பல நம்பிக்கைகள் வெகுகாலமாக இருந்து வருகிறது. இந்த நம்பிக்கைகளின் உண்மைத்தன்மையைக் கண்டறிய, கனடா பல்கலைக்கழகம் சமீபத்தில் ஆய்வு ஒன்றைச் செய்தது. குறிப்பாக, அதிகமாக உப்பு சேர்த்துக்கொள்வதால் சர்க்கரை நோய் ஏற்படுமா, இதயப் பிரச்னைகள் மற்றும் பக்கவாதம் ஏற்படுமா என்பதன் பின்னணியை ஆய்வு செய்துள்ளனர். 

உப்பு - ஆய்வு

சில மாதங்களுக்கு முன்பு லேன்செட் இதழில், மெக் மாஸ்டர் பல்கலைக்கழகத்தின் மக்கள் சுகாதார ஆராய்ச்சி நிறுவனம் (Population Health Research Institute) மற்றும் கனடாவின் சில ஆய்வுக்குழுக்கள் இணைந்து, ஆய்வு முடிவு ஒன்றை வெளியிட்டன. 18 நாடுகளைச் சேர்ந்த 35 முதல் 70 வயதுக்குட்பட்ட 95,767 பேர் அந்த ஆய்வில் பங்கெடுத்தனர். அதில், ஒரு நாளில் ஐந்து கிராம் என்ற அளவுக்குக் குறைவாக உப்பு உட்கொள்பவர்களுக்கு, இதயப் பிரச்னையோ பக்கவாதமோ ஏற்படாது என்பது தெரியவந்துள்ளது. 

ஆய்வில் பங்கெடுத்த 18 நாடுகளில், சீனர்களில் மட்டும் என்பது சதவிகிதத்துக்கும் அதிகமானோர் ஐந்து கிராமுக்கும் மேலாகத் தினமும் உப்பு உட்கொள்வது தெரியவந்துள்ளது. மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் அனைவரும், மூன்று முதல் ஐந்து கிராமுக்கும் குறைவாகவே உப்பு எடுத்துக்கொள்வது நிரூபணமாகியுள்ளது. உப்பு அதிகமாக உட்கொள்ளும் சீனர்களுக்கு மட்டும் ஆரோக்கியமின்மை பிரச்னைகள், உயர் ரத்தஅழுத்தம், மாரடைப்பு போன்றவை ஏற்படுவதற்கான சதவிகிதம் அதிகரித்துள்ளது. மற்றவர்களுக்கு, எந்த மாற்றமும் ஏற்படவில்லை. 

இதயப் பிரச்னைகள்

ஆய்வாளர்களில் ஒருவரான ஆன்ட்ரியூ இதுபற்றி கூறும்போது, ``உலக சுகாதார அமைப்பு மற்றும் அமெரிக்க இதயநோய் சங்கத்தின் (American Heart Association) கூற்றுப்படி, ஒருநாளில் ஒருவர் இரண்டு கிராமுக்கும் குறைந்த அளவே சோடியம் சத்தினை எடுத்துக்கொள்ளலாம். இது, ஒரு டீஸ்பூன் என்ற அளவைக் குறிக்கும். ஆய்வாளர்கள் கூறிய ஐந்து கிராம் என்பது, இரண்டரை டீஸ்பூன் அளவைக் குறிக்கும். ஆனால் இந்த ஆய்வு முடிவின்படி, ஐந்து கிராமுக்கு மேல் உட்கொண்டவர்களுக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கும் குறைவாக சோடியம் சத்து எடுத்துக்கொள்பவர்களுக்கு பாதிப்புகள் தடுக்கப்படுகின்றன என்பதற்கான எந்த தெளிவான ஆதாரமும் இல்லை" எனக்கூறியுள்ளார்.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க