இந்தியாவிலேயே முதல்முறை! - சென்னையில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறிய மூலக்கூறு ஆய்வகம் | Molecular Laboratory to Detect Cervical Cancer opened in chennai

வெளியிடப்பட்ட நேரம்: 19:45 (19/12/2018)

கடைசி தொடர்பு:19:45 (19/12/2018)

இந்தியாவிலேயே முதல்முறை! - சென்னையில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறிய மூலக்கூறு ஆய்வகம்

ந்தியாவிலேயே முதல்முறையாகக் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறிய, மூலக்கூறு ஆய்வகத்தைச் சென்னை புற்றுநோய் சிகிச்சை மையம் (டபிள்யூ ஐ ஏ) அறிமுகம் செய்துள்ளது.

கர்ப்பப்பை

இந்தியாவில் அதிநவீன நோய்க் கண்டறியும் சோதனைகளை `ரோஷ் டயக்னாஸ்டிக்ஸ் இந்தியா நிறுவனம்’ (Roche Diagonostics India) வழங்கி வருகிறது. இந்நிறுவனம் தற்போது சென்னை, அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தில் `ஹ்யூமன் பாபிலோமா வைரஸ் டிஎன்ஏ’ (Human Papiloma Virus - HPV) பரிசோதனை மையத்தைத் தொடங்கியுள்ளது. இதன்மூலம், இது இந்தியாவிலேயே கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்குத் தொடங்கப்பட்டுள்ள முதல் மூலக்கூறு பரிசோதனை மையம் (MolecularTestCentre) என்ற சிறப்பைப் பெற்றுள்ளது.

 

கர்ப்பப்பை


இதுகுறித்து அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தின் தலைவர் டாக்டர் வி.சாந்தா கூறும்போது, ``கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை எளிதில் தடுக்க முடியும். விரிவான அணுகுமுறைகள், தடுப்பூசிகள், திறம்பட்ட சோதனை நடைமுறைகள், தொடக்க நிலையிலேயே நோய்க் கண்டறிதல் மற்றும் சிகிச்சை ஆகியவற்றின் மூலம் புற்றுநோயால் ஏற்படக்கூடிய மரணங்களைக் குறைக்க முடியும்.

இந்தியாவில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறிய திறம்பட்ட பரிசோதனை நடைமுறைகள் குறைவாக உள்ள காரணத்தால், அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன. தமிழ்நாட்டில் மாநில அளவிலான பதிவேட்டு நடைமுறையை அமல்படுத்தியுள்ளோம். தமிழக அரசும் மாநில அளவிலான நோய் பரிசோதனைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது’’ என்றார். தற்போது, இந்தக் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறிய செல்லியல் (cytology) அடிப்படையிலான `பாப் ஸ்மியர்’ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இது நோயைக் கண்டறிந்து மரணத்தைத் தவிர்க்கப் பயன்படும். எனினும் மற்றொரு முறையான `ஹெச்.பி.வி டி.என்.ஏ’ (HBV DNA) பரிசோதனை நடைமுறை அதிநவீன முறையாகும்.

சைட்டாலஜிக்கல் அடிப்படையிலான பரிசோதனையைவிட `ஹெச்.பி.வி டி.என்.ஏ’ பரிசோதனை நடைமுறையில் மிகத் துல்லியமாக நோயைக் கண்டறியலாம். இதன்மூலம் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தாக்கத்தைத் தடுத்து, மரணங்களைத் தவிர்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.