ஆளில்லா விமானத்தில் பசிபிக் தீவுக்கு அனுப்பப்பட்ட தடுப்பூசி! - வாழ்த்திய ஐ.நா | Vaccination sent to the island in unmanned drone

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (20/12/2018)

கடைசி தொடர்பு:18:00 (20/12/2018)

ஆளில்லா விமானத்தில் பசிபிக் தீவுக்கு அனுப்பப்பட்ட தடுப்பூசி! - வாழ்த்திய ஐ.நா

போலியோ, காசநோய் தடுப்பூசி மருந்துகள் உலகிலேயே முதன்முறையாக ஆளில்லா குட்டி விமானத்தில் (Drone) கொண்டு செல்லப்பட்டு, ஒரு மாதக் குழந்தைக்குப் போடப்பட்டுள்ளது. 

 தடுப்பூசி


பசிபிக் தீவுகளில் ஒன்றான வனுவாட்டு எனும் தீவில் உள்ள மலைப்பிரதேசப் பகுதிக்குச் செல்வதற்கு சரியான போக்குவரத்து வசதி இல்லை.  இந்தக் கடினமான பகுதிக்குதான் ஆளில்லா விமானத்தின் மூலம் தடுப்பூசி மருந்துகள் அனுப்பப்பட்டுள்ளன. 


குழந்தைகளுக்கான யுனிசெஃப் அமைப்பின் தரவுகளின்படி, வனுவாட்டு தீவில்  தடுப்பூசித்  திட்டங்கள் முறையாகச் செயல்படுத்தப் படாததால் ஆயிரம் குழந்தைகளில் 28 பேர், 5 வயதுக்கு முன்னரே உயிரிழந்து விடுகின்றனர். அந்தத் தீவில் ஐந்தில் ஒரு குழந்தைக்கு மட்டுமே தடுப்பூசிகள் கிடைக்கின்றன.  எனவே, அந்தத் தீவில் தடுப்பூசித் திட்டத்தைச் செயல்படுத்த மலேசியா தலைநகர் கோலாலம்பூரைச் சேர்ந்த 'தாம்சன் ராய்ட்டர்ஸ்' என்ற அறக்கட்டளை முனைந்துள்ளது. 

 தடுப்பூசி


இந்தத் திட்டத்தின் ஒருபகுதியாகவே போக்குவரத்து குறைவாகக் காணப்பட்ட பகுதிக்கு ஆளில்லா குட்டி விமானத்தின் மூலம் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளன. சுமார் 40 கி.மீ தூரத்தைத் தடுப்பூசி மருந்துகள் தாங்கிய விமானம் 25 நிமிடங்களில் சென்றடைந்தது. நடந்தோ, படகு மூலமாகவோ சென்றால் ஒரு மணி நேரத்துக்கும் மேல் ஆகும்.

தடுப்பூசிவிமானத்தில் சென்றடைந்ததும் தடுப்பூசி மருந்தை செவிலியர் ஒருவர் எடுத்து அங்கிருந்த 13 குழந்தைகளுக்கும், 5 கர்ப்பிணிகளுக்கும் ஊசி மூலம் செலுத்தினார். தடுப்பூசிகளைச் சிறிய விமானத்தின் மூலம் கொண்டு செல்வது மிகவும் சிரமம்.

 

அந்த மருந்துகளைக் குறிப்பிட்ட வெப்பநிலையில் தக்கவைக்க தெர்மகோல் பெட்டியில், ஐஸ்கட்டி பொட்டலங்கள் வைக்கப்பட்டு அனுப்பப்பட்டன. அத்துடன் மருந்துகளின் வெப்பநிலையைக் கண்காணிக்க சென்சாரும் பொருத்தப்பட்டிருந்தது.


'இந்த முயற்சியின் மூலம் உலகத்தில் போக்குவரத்து குறைவான அனைத்துப் பகுதிகளுக்கும் மருந்துகள், தடுப்பூசி மருந்துகளை அனுப்பிப் பல உயிர்களைக் காப்பாற்ற முடியும்' என்று இந்த முயற்சிக்கு ஐ.நா வாழ்த்து தெரிவித்துள்ளது.