வெளியிடப்பட்ட நேரம்: 11:13 (22/12/2018)

கடைசி தொடர்பு:11:13 (22/12/2018)

``கட்டுக்குள் இருக்கிறது ஜிகா..." - அமெரிக்காவுக்கு ராஜஸ்தான் அரசு பதில்!

கர்ப்பிணிகள் இந்திய எல்லைக்குள் செல்ல வேண்டாம் என்றும், குறிப்பாகப் பாதிப்பு அதிகமாக இருக்கும் ராஜஸ்தான் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்றும் கூறியுள்ளது அமெரிக்க ஹெல்த் மானிட்டர்.

``கட்டுக்குள் இருக்கிறது ஜிகா...

டெங்கு காய்ச்சலுக்குக் காரணமான `ஏடிஸ்' (Aedes) கொசுவால் பரவக்கூடிய மற்றொரு வைரஸ், ஜிகா. இந்த ஜிகா வைரஸ், மற்றவர்களைக் காட்டிலும் கர்ப்பிணிகளையே அதிகம் பாதிக்கும். உயிருக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றபோதிலும், வயிற்றிலுள்ள சிசுவின் மூளை வளர்ச்சியைப் பாதிப்புக்குள்ளாக்கும். இத்தகைய பாதிப்பு, `மைக்ரோசெபலி' (Microcephaly) எனப்படும். இந்த பாதிப்பு, கடந்த இரண்டு மாதங்களாக ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகமாகக் காணப்படுகிறது. 

ஜிகா வைரஸ்

இந்தநிலையில், ஜிகா வைரஸால் பாதிக்கப்படும் மக்களைக் காக்கவேண்டும் என்ற எண்ணத்தில், `அமெரிக்க ஹெல்த் மானிட்டர்' (US health monitor) எனப்படும் நோய்த் தடுப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்பு இரண்டாம் கட்ட எச்சரிக்கை ஒன்றை நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில், `கர்ப்பிணிகள் இந்திய எல்லைக்குள் செல்ல வேண்டாம்' என்றும், குறிப்பாக `பாதிப்பு அதிகமாக உள்ள ராஜஸ்தான் எல்லைக்குள் செல்ல வேண்டாம்' என்றும் கூறப்பட்டுள்ளது. அக்டோபர் - நவம்பர் மாத இடைவெளியில் மட்டும், ராஜஸ்தானில் 153 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாகவே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

ஜிகா வைரஸால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படும் ராஜஸ்தானில், அம்மாநில அரசின் சார்பில் ஜிகா குறித்த விழிப்புஉணர்வுகள் நிகழ்ச்சிகள் மிகத்தீவிரமாக நடந்துகொண்டிருக்கிறது. ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்ள, மத்திய சுகாதார அமைச்சகத்தின் உத்தரவின் பேரில், தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையத்தைச் சேர்ந்தவர்கள் மாநிலம் முழுவதும் செயல்பட்டு வருகின்றனர். ஏராளமான குழுக்கள் நேரில் சென்று ஆய்வு செய்துகொண்டிருக்கின்றன. குறிப்பாக, ஜெய்ப்பூர் பகுதியில் மட்டும் 170 குழுக்கள் உள்ளனவாம்.

ராஜஸ்தான் அரசு - ஜிகா வைரஸ்

பாதிக்கப்பட்டவர்களை `ஹிரா பாக்' என்ற பயிற்சி மையத்துக்கு (Hira Bagh Training Centre) அழைத்துச் சென்று தனி வார்டு மற்றும் நோய்த் தடுப்பு மையம் அமைத்துச் சிகிச்சையளித்து வருகின்றனர். அதற்கென ஒரு கன்ட்ரோல் ரூம் ஏற்படுத்தி தீவிரமாக களத்தில் இறங்கிச் செயல்பட்டு வருகின்றனர். இத்தகைய தீவிர நடவடிக்கைகளால், `கடந்த அக்டோபர் 28-ம் தேதிக்குப் பிறகு ஜிகா வைரஸ் காரணமாக யாரும் பாதிக்கப்படவில்லை' என அரசு தரப்பில் கூறப்படுகிறது. எனவே, தற்போதைக்கு நிலைமை முழுமையாகக் கட்டுக்குள் உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

``இத்தனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும், அம்மாநிலத்தின்மீது அமெரிக்க ஹெல்த் மானிட்டர் `இரண்டாம் கட்ட எச்சரிக்கை' விடுத்திருப்பது சரியல்ல" எனக்கூறி, ராஜஸ்தான் மாநில அரசு அவர்களைக் கடுமையாகச் சாடியுள்ளது. அத்துடன் ராஜஸ்தான் மாநில சுகாதாரச் செயலாளர் ரோஹித் குமார் தலைமையில், புனேவைச் சேர்ந்த தேசிய `வைராலஜி' ஆணையத்தில் (National Institute of Virology) இந்தப் பாதிப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதன் முடிவில், ராஜஸ்தானில் இதுவரை ஏற்பட்டுள்ள ஜிகா வைரஸ் பாதிப்பு, மைக்ரோசெபலி பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்குத் தீவிரமானதல்ல என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

கொசு

இதுகுறித்து ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை சார்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், ``ராஜஸ்தானில், கடந்த செப்டம்பர் 21-ம் தேதிதான் முதன்முதலில் ஜிகா வைரஸ் மூலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. அது முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டதால் அக்டோபர் 28-ம் தேதிக்குப் பிறகு யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகள், தடுப்பு முறைகள் என அரசுத் தரப்பு முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. இப்போதுவரை, நிலைமை முழுமையாகக் கட்டுக்குள் இருக்கிறது. இத்தகைய சூழலில் அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அச்சுறுத்தும் விதத்தில் எச்சரிக்கை விடுப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. மேலும், பாதிக்கப்பட்டவர்கள் 144 பேர்தானே தவிர, 153 அல்ல. இதிலிருந்தே, அவர்களின் தகவல்கள் அனைத்தும் போலியானவை என்பது தெரியவரும். எனவே பொதுமக்கள் மற்றும் கர்ப்பிணிகள் யாரும் அமெரிக்க அமைப்பின் இந்த எச்சரிக்கை குறித்து பயப்பட வேண்டிய அவசியமில்லை." எனக் கூறப்பட்டுள்ளது.

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்