பனிக்காலப் பிரச்னைகளைத் தடுக்க 10 வழிகள்! | Prevent the snow and winter season problems using these 10 methods

வெளியிடப்பட்ட நேரம்: 11:57 (23/12/2018)

கடைசி தொடர்பு:11:57 (23/12/2018)

பனிக்காலப் பிரச்னைகளைத் தடுக்க 10 வழிகள்!

வெப்பத்துக்குப் பழக்கப்பட்ட நமது உடல் குளிரைச் சமாளிக்கத் தடுமாறும். காலநிலை மாறுவதால், சுவாசப் பிரச்னை,  காய்ச்சல், தோல் வறட்சி போன்ற உடல்நலப் பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

பனிக்காலப் பிரச்னைகளைத் தடுக்க 10 வழிகள்!

ழைக்காலம் விடைபெற்று, பனிக்காலம் கைகுலுக்கத் தொடங்கிவிட்டது. பகல் நேரம் குறைந்து, இரவுப் பொழுதுகள் நீளமாகிக் கொண்டிருக்கின்றன. வெப்பத்துக்குப் பழக்கப்பட்ட நமது உடல் குளிரைச் சமாளிக்கத் தடுமாறும். காலநிலை மாறுவதால், சுவாசப் பிரச்னை, காய்ச்சல், தோல் வறட்சி போன்ற உடல்நலப் பிரச்னைகள் ஏற்படக்கூடும். பனிக்காலத்தில் நமது உடலை நோயின்றி பாதுகாப்பதற்கான 10 வழிமுறைகளை விளக்குகிறார் சித்த மருத்துவர் மல்லிகா.

பனி

1. தசை வலி - குளிர்காலத்தில் உடல் அதிக நேரம் அசைவின்றி இருக்கக்கூடாது. உடலுக்குக் கதகதப்பு அளிக்கும் சில உடற்பயிற்சிகள், நிமிர்வது, குனிவது போன்ற அசைவுகளைச் செய்துகொண்டே இருக்க வேண்டும். இதனால், குளிரினால் ஏற்படும் உடல் மற்றும் தசை பனிவலி நீங்கும். 

2. சூடான உணவு -  உணவை மிதமானச் சூட்டில் உண்ண வேண்டும். நேரம் தவறாமல் சாப்பிடுவதால் உடல் ஆற்றல் அதிகரிக்க உதவும். 

3. உணவு முறை - எளிதில் செரிக்கக் கூடிய பச்சைக் காய்கறிகள் மற்றும் நார்ச்சத்து மிகுந்த பீன்ஸ், முருங்கைக்காய் அதிக அளவில் சாப்பிடலாம்.  அசைவ உணவுகள் எளிதில் ஜீரணமாகாது என்பதால் அதனைக் குறைத்துக் கொள்வது நல்லது. 

4. தேநீர் - தோல் நீக்கிய இஞ்சி, சிறிதளவு, புதினா, ஏலக்காய் ஆகியவற்றுடன் நாட்டுச் சர்க்கரை கலந்த இஞ்சி தேநீர் தயாரித்து அடிக்கடி குடிக்கலாம், அல்லது சுடு தண்ணீரும் குடிக்கலாம்.  

5. சரும வறட்சி - குளிக்கச் செல்லும்முன் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்யை உடலில் தேய்த்து மசாஜ் செய்தால், சருமம் வறண்டு போகாமல் ஆரோக்கியமாக இருக்கும். கற்றாழையைக் கூழாக அரைத்து முகம் மற்றும் உடலில் தேய்த்தாலும் சருமம் மிருதுவாக இருக்கும். ஒவ்வாமை மற்றும் சுவாசப் பிரச்னை உடையவர்கள் கற்றாழை க்ரீம் பயன்படுத்தலாம். 

பனி

6. வெந்நீர் குளியல் - குளிர்காலத்தில் வெந்நீர் குளியல் நல்லது. அதிக சூடான தண்ணீரில், அதிக நேரம் குளித்தால் சருமத்தில் அதிக வறட்சி ஏற்படும். அதனால் வெதுவெதுப்பான சூட்டில் குளிக்க வேண்டும்.

வலி7. தண்ணீர் - பனிக்காலத்தில் தாகம் குறைவாக ஏற்படும். அதனால் தண்ணீர் குடிப்பதைத் தவிர்த்தால் உடலில் உள்ள நீர்ச்சத்து குறைந்து, வேறு பிரச்னைகளை உருவாக்கும். எனவே, ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு லிட்டர் வரை தண்ணீர் அவசியம் குடிக்கவேண்டும். 

8. பொடுகுப் பிரச்னை - சருமத்தைப் போன்று தலையிலும் வறட்சி ஏற்படுவதால், பனிக்காலத்தில் பொடுகுப் பிரச்னை எளிதில் வந்துவிடும்.

சிறிது வெள்ளை மிளகை ஒரு கிண்ணம் தேங்காய் எண்ணெய்யில் ஊற வைத்து,  அந்தக் கலவையை சூடு ஏறும் வரை வெயிலில் காய வைத்து, தலைக்குத் தடவலாம். இது தலைமுடியில் பிசுபிசுப்பையும் பொடுகையும் நீக்கும்.

9. ஆடை தேர்வு - அதிக குளிர் காணப்படும் நேரத்தில்  உடலுக்குக் கதகதப்பு தரும் கம்பளி ஆடைகளை உடுத்த வேண்டும்.  இந்த ஆடைகள் குளிர்காலத்தில் வரும் நடுக்கத்தைக் குறைக்கும். கை, கால்கள், மூக்கு, காது பகுதியையும் கதகதப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். 

10. மாத்திரைகள் - ஆஸ்துமா, மூச்சுத் திணறல் மற்றும் சுவாச நோய்களால் அவதிப்படுபவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி தங்களுக்கான மாத்திரை மருந்துகளை எப்போதும் உடன் வைத்துக் கொள்ள வேண்டும். 


டிரெண்டிங் @ விகடன்