"செல்லப்பிராணிகள் வளர்த்தால் ஆஸ்துமா வராது" - ஆச்சர்யப்படவைக்கும் ஆய்வு | Pet animals wont cause asthma

வெளியிடப்பட்ட நேரம்: 19:15 (24/12/2018)

கடைசி தொடர்பு:19:15 (24/12/2018)

"செல்லப்பிராணிகள் வளர்த்தால் ஆஸ்துமா வராது" - ஆச்சர்யப்படவைக்கும் ஆய்வு

குழந்தைகளுக்கு ஒவ்வாமை என்றவுடன் நினைவுக்கு வருவது செல்லப்பிராணிகள்தான். ஆனால், அவற்றை வீட்டில் வளர்ப்பவர்களின்  குழந்தைகளுக்கு இந்தப் பாதிப்பு தடுக்கப்படுகிறது என்கிறது  ஓர் ஆய்வு.

செல்லப்பிராணிகள்


சுவீடனைச் சேர்ந்த ஆஸ்துமா (Swedish Asthma and Allergy Association Research Foundation) ஆராய்ச்சியாளர்கள், சமீபத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் ஒவ்வாமை பிரச்னைகள் தொடர்பாக ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.  செல்லப்பிராணிகள், பொதுவாகவே குழந்தைகளுக்கு அரவணைப்பைக் கொடுத்து பல நல்ல பழக்கங்களைச் சொல்லிக்கொடுக்கும் இயல்புடையவை. பிறந்த குழந்தைகள், செல்லப்பிராணிகளோடு நேரத்தைச்  செலவிடும்போது, தவழ்தலுக்கான பயிற்சிகளைக்கூட அவை அளிக்கும் என ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, 'செல்லப்பிராணிகளால் குழந்தைகளுக்கு ஏற்படும் நன்மைகள்' பட்டியலில், இனி 'ஒவ்வாமை தடுக்கப்படுவதையும்' சேர்த்துக்கொள்ளலாம்.

செல்லப்பிராணிகள்


249 பெற்றோர், அவர்களின் 1278 குழந்தைகளுக்கு மத்தியில்  இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில்,  செல்லப்பிராணிகள் இல்லாத வீடுகளில் வளரும் குழந்தைகளுக்கு 50 சதவிகிதம் ஒவ்வாமை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், செல்லப்பிராணிகளோடு வளரும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா, சரும ஒவ்வாமை (eczema), விலங்குகள் மற்றும் மகரந்தம் மூலமாக ஏற்படும் ஒவ்வாமைகள் யாவும் தடுக்கப்படுகின்றன. தடுக்கப்படும் சதவிகிதத்தின் அளவு, செல்லப்பிராணிகளின் எண்ணிக்கையைப் பொறுத்துதான் அமைகிறது.  
அதிக செல்லப்பிராணி வளர்க்கப்படும் வீடு என்றால், குழந்தையின் நோய்த் தடுப்பு சக்தி அதிகமாக இருக்கும்.

செல்லப்பிராணிகள் குறிப்பாக, முதல் ஒரு வயதுக்குள் ஐந்துக்கும் மேற்பட்ட செல்லப்பிராணிகளுடன் ஒரு குழந்தை வளர்ந்தால்,  ஏழு வயதுக்குப் பிறகு அக் குழந்தைக்கு ஆஸ்துமா, இதர ஒவ்வாமைப் பிரச்னைகள் எதுவுமே ஏற்படுவதற்கு ஒரு சதவிகிதம்கூட வாய்ப்பில்லை என்கின்றனர் ஆய்வாளர்கள்.  

இதுகுறித்து ஆய்வாளர்களில் ஒருவரான பில் ஹெசெல்ப்மார் கூறுகையில், "சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கும், உடன்பிறந்தவர்கள் நிறைய உள்ள குழந்தைகளுக்கும் ஒவ்வாமை தடுக்கப்படுகிறது என்பது உண்மை என்றாலும், ஒவ்வாமை தடுக்கப்பட, செல்லப்பிராணிகளே முழுமுதல் காரணமாக இருக்கின்றன. மேற்கூறியவை யாவும், எவ்வித ஒவ்வாமைப் பிரச்னையும் இல்லாத பெற்றோரைக்கொண்ட குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும். மரபு காரணமாக ஒவ்வாமை ஏற்பட்ட குழந்தைகளுக்கு இது பலனளிக்காது" என்று கூறியுள்ளார் அவர். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க