வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (26/12/2018)

கடைசி தொடர்பு:19:02 (26/12/2018)

சிங்கங்களின் உயிரைப் பறித்த அதே வைரஸ்! - நாய் வளர்ப்பவர்களுக்கு ஒரு அலர்ட்

கெனைன் டிஸ்டம்பர் எனப்படும் இந்த வைரஸ், ஒரு நாயைப் பாதிப்பதால் வரும் மர்மக் காய்ச்சல், அடுத்த நாய்க்கு மிக விரைவாகத் தொற்றுகிறது. இந்த வைரஸ் பாதிப்பைத் தடுக்க, தடுப்பூசிகள் உள்ளன.

`கெனைன் டிஸ்டம்பர்' (Cannaie  Distemper)  என்ற வைரஸ் காரணமாக மர்மக் காய்ச்சல் ஏற்பட்டு நாய்கள் பாதிக்கப்படுவதாகவும், அந்த வைரஸ் தமிழ்நாட்டில் நாய்களிடம் மிக வேகமாகப் பரவிவருவதாகவும் கூறப்படுகிறது. இந்த வைரஸ் காரணமாக, கடந்த சில வாரங்களாக நாய்களின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, கோவை மாவட்ட கால்நடைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

 

dog


இந்த வைரஸ் பாதிப்புகுறித்து கால்நடை மருத்துவர் ராஜாவிடம் கேட்டோம். அப்போது அவர், `` `கெனைன் டிஸ்டம்பர்' என்னும் இந்த வைரஸ், முதன்முதலில் ஸ்பெயின் நாட்டில்தான் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் ஒரு நாயைப் பாதிப்பதால் வரும் மர்மக் காய்ச்சல், அடுத்த நாய்க்கு மிக விரைவாகத் தொற்றுகிறது. இந்த வைரஸ் பாதிப்பைத் தடுக்கத் தடுப்பூசிகள் உள்ளன. பெரும்பாலும் தடுப்பூசி போடாத நாய்களையே இந்த வைரஸ் விரைவில் தாக்கும். குறிப்பாக, நோய் எதிர்ப்புசக்தி குறைவாக உள்ள ஒன்று மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய நாய்க்குட்டிகளை மிக எளிதாகத் தாக்கும். இந்த வைரஸ் பாதித்த நாய்கள், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உணவு உண்ண முடியாமல் சோர்ந்து காணப்படும். பின்பு, நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு உயிரிழக்க வாய்ப்புண்டு. இந்நோய் தாக்கிய நாய்களில் நூற்றில் ஒன்று மட்டுமே பிழைக்க வாய்ப்புள்ளது. 

`கெனைன் டிஸ்டம்பர்' வைரஸ் ஒரு நாயிடமிருந்து மற்றொரு நாய்க்கு மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ பரவ வாய்ப்பு உள்ளது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு நாயை நாம் கையால் தொட்டுவிட்டு அடுத்த நாயைத் தொடும்போது, மிக எளிதாகப் பரவும். அதேபோல, நோய் தாக்கிய  நாய், சாப்பிட்டுவிட்டு மீதம் வைத்த  உணவுகளை மற்றொரு நாய்க்கு வைக்கும்போதும் இந்த வைரஸ் பரவும்.
இந்த வைரஸ் நாய்களைப் பாதிக்காமலிருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசிகள் போட்டுக்கொள்வதே சிறந்த வழி. அதாவது, நாய்க்குட்டி பிறந்த  45 நாள்களுக்குள் முதல் தடுப்பூசி போட வேண்டும்.

 

செல்லப்பிராணி

ஆண்டுதோறும் இந்தத்  தடுப்பூசியை  கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும். நாய் வளரும் இடங்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். `கெனைன் டிஸ்டம்பர்' வைரஸ் தாக்கிய பிறகு,  அதைக் குணப்படுத்த இன்னும்  மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, வீடுகளில் செல்லப்பிராணிகளாக வளர்க்கும் நாய்களுக்கு தடுப்பூசி போட்டுப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்'' என்று தெரிவித்தார்.


கடந்த செப்டம்பர் மாதம், குஜராத்தைச் சேர்ந்த கிர் காடுகளில் சிங்கங்கள் அதிக அளவில் உயிரிழந்தன. இறந்த அந்த சிங்கங்களின் உடலை ஆய்வுசெய்து பார்த்தபோது, அவற்றின் மரணத்துக்கும் இதே `கெனைன் டிஸ்டம்பர்' வைரஸ்தான் காரணம் என்பது கண்டறியப்பட்டது. ஆனாலும், இந்த வைரஸ் நாய்களிடமிருந்தே சிங்கங்களுக்குப் பரவியிருக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. எனவே, நாய்கள் மட்டுமல்ல, வேறு விலங்குகளுக்கு இந்த வைரஸ் தாக்காமலிருக்க முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசியம்.