வெளியிடப்பட்ட நேரம்: 20:24 (27/12/2018)

கடைசி தொடர்பு:20:24 (27/12/2018)

வலிகளுக்குத் தீர்வு தரும் `வில்லோ' மரம்! 

குளிர்பிரதேசங்கள், நீர் நிறைந்த இடங்களில் காணப்படும் 'வில்லோ' மரம் பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளன.

லை, பூ, காய், பழம் மட்டுமன்றி சில மரங்களின் பட்டைகளும் எண்ணற்ற நன்மைகளைக் கொண்டுள்ளன. அந்தவகையில் குளிர்பிரதேசங்கள், நீர் நிறைந்த இடங்களில் காணப்படும் 'வில்லோ' மரம் பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளன. தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் காலத்தில் இந்த மரங்கள் பயிரிடப்பட்டன. சீனா, ஸ்பெயின், அமெரிக்கா, லத்தீன் நாடுகளில் வணிகத்துக்காக இந்த மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இவற்றில் இருந்துதான் கிரிக்கெட் மட்டை, ஹாக்கி மட்டைகள் தயாரிக்கப்படுகின்றன. 

வலி

இந்த மரத்துக்கு மற்றொரு முகமும் இருக்கிறது. பண்டைய காலத்திலிருந்தே இதை மருந்தாகப் பயன்படுத்தி வருகின்றனர். `Aspirin:The Remarkable Story of a Wonder Drug' என்ற நூலில் எகிப்தியர்கள் உடல் வலிகளைக் குறைப்பதற்காக வில்லோ மரப்பட்டையைப் பயன்படுத்தியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. காரணம், வில்லோ பட்டையில் இயற்கையாகக் காணப்படும் சாலிசிலிக் அமிலம். இந்த அமிலம் வலி நிவாரண மாத்திரையான ஆஸ்பிரினுக்கு நிகராகச் செயலாற்றும் தன்மை  உள்ளது. அதனால் அழற்சி, வலி போன்ற பிரச்னைகளுக்கு இது தீர்வாக இருக்கிறது. 

மருத்துவக் குணங்கள்: 

* தலைவலி: வில்லோ மரப்பட்டையில் இருக்கும் சாலிசிலிக் அமிலம் மைக்ரேன்' எனப்படும் ஒற்றைத் தலைவலிக்குச் சிறந்தது. 

*முதுகு வலி: இதில் காணப்படும் சாலிசிலிக்  அமிலம் வலி நிவாரணியாகப் பயன்படுகிறது. வில்லோ மரப்பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மூலக்கூறுகள் நிறைந்த மாத்திரைகளை முதுகு வலியால் அவதிப்படுபவர்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். 

வலி

* காய்ச்சல்: இந்த மரத்தின் பட்டையிலிருந்து  தயாரிக்கும் தேநீரைக் குடிப்பதால் காய்ச்சல் குறைவதுடன், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. மேலும், இது சளித் தொல்லையிலிருந்தும் பாதுகாக்கிறது. 

* இதய நோய்கள்: வில்லோ மரப்பட்டை தேநீரை தினமும்  குடிப்பதால் பக்கவாதம் மற்றும் இதய நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். 

இதுமட்டுமன்றி, சருமப் பிரச்னைகள், எலும்பு தொடர்பான பிரச்னைகள், மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் வலி, பல்வலி எனப் பல்வேறு உடல் உபாதைகளுக்கு வில்லோ மரப்பட்டை மருந்தாகப் பயன்படுகிறது. மனிதனுக்கு இயற்கை தந்த வரம் `வில்லோ' மரம்.