``சாத்தூர் கர்ப்பிணிக்கு ஐ.வி அயர்ன் இன்ஜெக்‌ஷன் கொடுத்திருந்தாலே போதும்!’’ - மருத்துவர் விளக்கம் | Senior gynaecologist shares her views on HIV blood transfer to a pregnant lady's issue

வெளியிடப்பட்ட நேரம்: 16:25 (28/12/2018)

கடைசி தொடர்பு:16:25 (28/12/2018)

``சாத்தூர் கர்ப்பிணிக்கு ஐ.வி அயர்ன் இன்ஜெக்‌ஷன் கொடுத்திருந்தாலே போதும்!’’ - மருத்துவர் விளக்கம்

சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு ரத்தம் குறைவாக இருந்த காரணத்தால்தான், அவருக்கு இன்னொருவரின் ரத்தம் ஏற்றப்பட்டது. நோக்கம் நல்லதுதான். ஆனால், அந்த ரத்தத்தில் ஹெச்.ஐ.வி கிருமி இருந்ததுதான், கர்ப்பிணியின், அவர் வயிற்றில் இருக்கிற கருவின், அவருடைய குடும்பத்தின் எதிர்காலத்தை என எல்லாவற்றையும் கலைத்துப் போட்டிருக்கிறது. கர்ப்பிணிகளுக்கு ரத்தம் ஏற்ற வேண்டிய நிலை பற்றி, மூத்த மகப்பேறு மருத்துவர் ஜெயஸ்ரீ கஜராஜிடம் பேசினோம். 

கர்ப்பிணி

``கர்ப்பிணிகளைப் பொறுத்தவரை இரும்புச்சத்து மாத்திரையைக் கர்ப்பம் கன்ஃபார்ம் ஆன நாளில் இருந்து சாப்பிட கொடுத்துவிடுவோம். ரெகுலர் செக்கப்பின்போது, ஹீமோகுளோபின் அளவு 8-க்குக் கீழே குறைந்தால் உடனே இரும்புச்சத்து இன்ஜெக்‌ஷன் போடுவோம். ஒரு காலத்தில் இந்த இன்ஜெக்‌ஷன் போடுவது பாதுகாப்பே கிடையாது. இதில் நிறைய சைடு எஃபெக்ட் வரும். ஆனால், தற்போது, ஐ.வி அயர்ன் இன்ஜெக்‌ஷன் வந்துவிட்டது. இதில் எந்தவித பக்க விளைவும் கிடையாது. இந்த ஐ.வி அயர்ன் ஊசியைப் போட்டுத்தான் ஹீமோகுளோபின் லெவலை அதிகரிக்க வேண்டுமே ஒழிய, கர்ப்பிணிப் பெண்களுக்கு ரத்தம் ஏற்ற வேண்டிய அவசியமே கிடையாது. அந்த அளவுக்கு ஒரு கர்ப்பிணியின் நிலை மோசமாகும்வரைக்கும் மகப்பேறு மருத்துவர்கள் விடக்கூடாது. 

டாக்டர் ஜெயஶ்ரீ கஜராஜ்டெலிவரி நேரத்தில் சில பெண்களுக்கு 2 அல்லது 3 லிட்டர்கூட ரத்தம் வெளியேறிவிடும். இதைப் போஸ்ட்பார்ட்டம் ஹெமரேஜ் என்று சொல்வோம். இந்த மாதிரி நேரங்களில் ரத்தம் ஏற்றித்தான் ஆக வேண்டும். சம்பந்தப்பட்டப் பெண்ணின் உயிரைக் காப்பாற்ற வேறு வழியில்லை. ஆனால், ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு ரத்தம் ஏற்றுவதை நூற்றுக்கு நூறு தவிர்த்திருக்க வேண்டும்.

அரசு மருத்துவமனைகளில் இன்றைக்கு எல்லா வசதிகளும் இருக்கின்றன. அதேபோல, மகப்பேறு மருத்துவத்திலும் நிறைய அப்டேட்ஸ் வந்துவிட்டன. ஐ.வி அயர்ன் இன்ஜெக்‌ஷன் பற்றிய அப்டேட் தெரிந்து, ரத்தம் ஏற்றாமல் அதைப் போட்டிருந்தாலே அந்தப் பெண்ணுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது'' என்றார்.