அறுவை சிகிச்சையில் சிரமம் தவிர்க்க புதிய கருவி!- அசத்தும் புதுக்கோட்டை அரசு மருத்துவர் | Pudukottai government doctor designs New medical device used while surgery

வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (28/12/2018)

கடைசி தொடர்பு:18:20 (28/12/2018)

அறுவை சிகிச்சையில் சிரமம் தவிர்க்க புதிய கருவி!- அசத்தும் புதுக்கோட்டை அரசு மருத்துவர்

றிவியல் உதவியுடன் மருத்துவத் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியைச் சேர்ந்த அரசு மருத்துவர் பெரியசாமி. மருந்து மாத்திரைகள், அறுவை சிகிச்சைகள் என மருத்துவப் பணியோடு மட்டும் நிற்காமல் மக்களுக்குப் பயன்தரும் வகையில் புதுப்புது கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டு வருகிறார்.

புதிய கருவி

மருத்துவத்தில் அனைவருக்கும் பயனளிக்கும்விதமாக ஏற்கெனவே ஐந்து கருவிகளைக் கண்டுபிடித்துள்ள அவர், தற்போது ஆறாவதாக ஒரு கருவியை சமீபத்தில் கண்டுபிடித்துள்ளார். மருத்துவர் பெரியசாமி கண்டுபிடித்த அந்தக் கருவி குறித்து கேட்டபோது, விரிவாகப் பேசினார்.

புதிய கருவி``வயிற்றுப் பகுதியில் நுண்துளை அறுவை சிகிச்சை செய்யும்போது, உள்உறுப்புகளைத் துண்டிக்கவும், உள்ளே இருக்கும் திரவத்தை உறிஞ்சி எடுக்கவும், உறுப்புகளை விலக்கிப் பார்க்கவும் `ட்ரோகார் கேனுலா' (Trocar Cannula) உள்ளிட்ட பல்வேறுவிதமான நவீனக் கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வயிற்றில் தனித்தனியாக துளையிட்டு இந்தக் கருவிகளை உள்ளே செலுத்தி, ஒரே நேரத்தில் இயக்கி அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இவற்றை நேரடியாகப் பயன்படுத்தாமல், ஒவ்வொரு துளையிலும் ஒரு உட்கருவியைப்  பொருத்தி, அதன் வழியாகவே கருவிகள் உள்ளே செலுத்தப்படும்.

தோல் பகுதியில் போதிய பிடிப்பு இல்லாததால் உட்கருவியில் அடிக்கடி அசைவு ஏற்படும். அப்போது, வயிற்றைப் பெரிதாக்குவதற்காக செலுத்தப்படும் காற்று (கார்பன்டை ஆக்சைடு) வெளியேறுவதால், வயிற்றுப் பகுதி சுருங்கும். அசைவு ஏற்படுவதால் துளை பெரிதாகி, அந்தக் கருவி வெளியே வந்துவிடும். எனவே, அந்த இடத்தில் மீண்டும் உட்கருவியை வைப்பதில் சிரமம் ஏற்பட்டு காயங்கள் பெரிதாகவும் ரத்தப்போக்கு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. ஓட்டை பெரிதாகி காற்று வீணாகும் என்பதால் வேறு இடத்தில் துளையிட வேண்டியிருக்கும். இதனால் அறுவை சிகிச்சையில் தாமதம் ஏற்படும். இத்தகைய சிரமங்களைத் தவிர்க்கவே புதிய கருவியைக் கண்டுபிடித்துள்ளேன். இந்தக் கருவிக்கு `பெரிஸ் லேப்ராஸ்கோபிக் ட்ரோகார் கேனுலா' ( Peri's Laparoscopic Trocar Cannula) எனப் பெயரிட்டுள்ளேன். மற்ற கருவிகளைப் போல் இல்லாமல், இந்தக் கருவியில் 10 செ.மீ நீளமுள்ள குழாய் வடிவிலான பகுதியில் 10 மி.லி அளவு காற்று நிரப்பக்கூடிய பலூன் பொருத்தப்பட்டுள்ளது. 

புதிய கருவி

இந்தக் கருவியை வயிற்றின் உள்ளே செலுத்தியதும், முன்பு சொன்ன அந்த பலூனில் காற்று நிரம்பிவிடும். எனவே, பலூனுக்கு அடுத்துள்ள உட்கருவியும் அறுவை சிகிச்சையின்போது வெளியே வராது. உள்ளே இருக்கும் காற்றையும் வெளியே வரவிடாமல் பார்த்துக்கொள்ளும். மேலும், அறுவை சிகிச்சை முடிந்ததும் உபகரணத்தில் பொருத்தப்பட்டுள்ள பலூனிலிருந்து பைலட் பலூன் வழியாகக் காற்றை வெளியேற்றிவிட்டு அந்தக் கருவியை எளிதாக அகற்றிவிடலாம். இதனால், குறித்த நேரத்தில் அறுவை சிகிச்சை செய்வதுடன், அதிக காயம் ஏற்படாமலும் தடுக்கலாம்.

சமீபத்தில், கும்பகோணத்தில் நடைபெற்ற மருத்துவர்கள் மாநாட்டில் அந்தக் கருவி மற்றும் அதன் பயன்பாடு குறித்த ஆராய்ச்சிக் கட்டுரையைச் சமர்ப்பித்தேன். இதன் பயனை ஆர்வத்துடன் கேட்ட மற்ற மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எனக்கு மிகுந்த ஊக்கமளித்தனர். இந்தக் கருவிக்கான காப்புரிமையும் எனக்குக் கிடைத்துவிட்டது. விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது'' என்கிறார்.