வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (29/12/2018)

கடைசி தொடர்பு:01:00 (29/12/2018)

சென்னை அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் இறப்பு விகிதம் குறைவு!  

சென்னை அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் இறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

அரசு மருத்துவர்கள்

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவனையில் இயங்கிவரும் தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை மேம்பாடு திட்டத்தின் (Tamilnadu  Accident and Emergency Care Initiative - TAEI) கீழ் உள்ள அவசர சிகிச்சை மையத்தை நிதி ஆயோக் (Niti Aayog) அமைப்பிலிருந்து வந்த இரு ஆய்வாளர்கள் கடந்த வாரம் ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள், மருத்துவமனையின் நடைமுறைகளை இந்தியா முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் அமல்படுத்த ஆலோசனை வழங்கிச் சென்றனர். 

இந்நிலையில், இன்று (28.12,2018), சென்னை அரசு பொது மருத்துவமனையில் தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டக் கலெக்டர் அனுமந்த் தலைமையிலான ஏழு பேர் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர். அவர்கள் இங்குள்ள தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை மேம்பாட்டுத் திட்டத்தின் சிறந்த மருத்துவ நடைமுறைகளை அவர்களது மாநிலத்திலும் செயல்படுத்தும் நோக்கில் இந்த ஆய்வை நடத்தினர். 

மருத்துவர்கள்

`கடந்த 11 மாதங்களில் விபத்தால் ஏற்படும் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. விபத்தில்லாத அவசர சிகிச்சை பெறுவோரின் (Non Trauma cases) இறப்பு விகிதமும் கணிசமாகக் குறைந்துள்ளது’ என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை மேம்பாடு திட்டம் (TAEI) தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.