`அவங்களை விட்டுட்டுப்போக மனசு கேக்கல!' - 85 வயதிலும் மக்கள் தொண்டாற்றும் 5 ரூபாய் டாக்டர் | Mayiladuthurai people heap praise on doctors, who serve them with five rupees of charge

வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (29/12/2018)

கடைசி தொடர்பு:17:40 (29/12/2018)

`அவங்களை விட்டுட்டுப்போக மனசு கேக்கல!' - 85 வயதிலும் மக்கள் தொண்டாற்றும் 5 ரூபாய் டாக்டர்

ருத்துவச் சேவையாற்றும் மயிலாடுதுறை டாக்டர் ஊரைவிட்டுப் போவதாகச் சொன்னபோது ஊரே திரண்டு தடுத்து, தங்கள் சொந்தம்போல் பார்த்துக்கொள்ளும் வியப்பூட்டும் நிகழ்வு நடந்துள்ளது.  

டாக்டர் ராமமூர்த்தி

அந்த டாக்டரின் பெயர் ராமமூர்த்தி. 85 வயதான அவர் 60 வருடங்களுக்கு மேலாக மருத்துவச் சேவை செய்து வருகிறார். மயிலாடுதுறை சுற்றுவட்டாரக் கிராமங்களில் அவர் கால்படாத இடமே இல்லை. தீபாவளி, பொங்கல் பண்டிகை நாள்களில்கூட மருத்துவம் பார்க்கும் அவர் வாங்கும் அதிகபட்ச கட்டணம் 5 ரூபாய் மட்டுமே. 

ஒருநாள் அவர் திடீரென்று ஊரைவிட்டுப் போவதாகச் சொன்னதும் மயிலாடுதுறை மக்கள் வருத்தப்பட்டனர். இதையடுத்து ஒவ்வொருநாளும் நூறு நூறு பேராக அவரிடம் சென்று அவரை ஊரைவிட்டுப் போகவேண்டாமென்று தடுத்துவிட்டார்கள். அத்துடன், `உங்க மகன் பார்த்துக்கிறதைப்போல நாங்கள் பார்த்துக்கிறோம்'னு சொல்லியிருக்காங்க. அந்த மக்களின் பாசத்துக்குக் கட்டுப்பட்டு அவரும் சரி என்று சொன்னதுடன் மயிலாடுதுறையிலேயே தங்கிவிட்டார். 

பி.ராமமூர்த்தி

மக்கள் கோரிக்கை வைப்பதற்கு முன்பாகவே டாக்டர் ராமமூர்த்தி, தனது வீட்டை விற்றுவிட்டதால் அவர் குடியிருக்கவும் மருத்துவச் சேவை செய்யவும் இடமில்லாமல் போனது. டாக்டர் ராமமூர்த்தி இடம் கிடைக்காமல் திண்டாடுகிறார் என்ற செய்தி அவரிடம் வீடு வாங்கிய பி.ராமமூர்த்தியின் காதுகளை எட்டியிருக்கிறது. இதுபற்றி பி.ராமமூர்த்தியிடமே கேட்டோம்.  

“16 வருஷமா, டாக்டர் ராமமூர்த்தியை எனக்குத் தெரியும். அவருடைய சேவையைப் பார்த்து ஆச்சர்யப்பட்டிருக்கேன். அவர் சென்னை போகிறேன்னு சொன்னது எனக்கு வருத்தம்தான். ஆனா, அவர் மக்களுக்காக மனம் மாறி இங்க இருந்தபடி சேவை செய்றேன்னு சொன்னது எங்களுக்குச் சந்தோஷமா இருந்தது. ஆனால், அவர் இருக்க இடம் இல்லாமல் திண்டாடுறதைக் கேள்விப்பட்டதும் மனசு கேட்கலை. உடனே அவரைப் பார்த்து `நீங்க எங்கேயும் போக வேண்டாம். நீங்க எவ்வளவு காலம் இருக்கணும்னு நினைக்கிறீங்களோ அவ்வளவு காலம்வரை இருந்து மக்களுக்குச் சேவை செய்யுங்க. அதுவரை இந்த வீட்டை இலவசமாப் பயன்படுத்திக்கோங்க. அதுக்கு வாடகை தர வேண்டாம்'னு சொல்லிட்டேன்" என்று கூறி நெகிழ்ந்தார்.நீலா (டாக்ட்ரின் மனைவி)

டாக்டருக்கும் ஊருக்குமான இந்த உறவையும் அன்பையும் அவர் மனைவி நீலா எப்படிப் பார்க்கிறார் என்று அவரிடமே கேட்டோம். ``அவருக்குப் பணம் முக்கியமில்ல. ஒருநாள்கூட கிளினிக்கை அடைச்சது கிடையாது. இத்தனை வருஷ சர்வீஸ்ல அவர் சம்பாதிச்சி வச்சுருக்கிறது இந்த மக்களையும் அவங்களோட பாசத்தையும் மரியாதையையும்தான். இதுதான் எங்களுக்கு மிகப்பெரிய சொத்து. வாழ்க்கையில இதைவிட வேற என்ன வேணும்" என்றார் டாக்டரின் மனம் புரிந்துகொண்ட அவர் மனைவி.டாக்டர் ராமமூர்த்தி

மக்களின் அன்பைப் பெற்ற டாக்டரைச் சந்தித்தபோது, ``1958-ல மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ்ல டாக்டர் படிப்பு படிச்சேன். சொந்த ஊர்ல சேவை செய்யணுங்கிற முடிவோட மயிலாடுதுறை வந்தேன். நாம படிச்ச படிப்பு மத்தவங்களுக்கு உதவணும்கிற எண்ணம் அந்த வயசுலயே என் மனசுல ஊறிடுச்சு. அதை இந்த வயசுவரைக்கும் கடைப்பிடிக்கிறேன். ஊர்மக்கள் என்மேல நிறைய அன்பு வச்சிருக்காங்க. அதனால அவங்களை விட்டுட்டுப்போக மனசு கேக்கல" என்றார்.  

ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாகச் சேவைசெய்துவரும் டாக்டரை நாமும் வாழ்த்துவோம்! 

நீங்க எப்படி பீல் பண்றீங்க