ரத்தம் ஏற்றுதல்... தவிர்க்க முடியாத 5 காரணங்கள்! | Blood transfusions check and facts

வெளியிடப்பட்ட நேரம்: 20:47 (29/12/2018)

கடைசி தொடர்பு:20:47 (29/12/2018)

ரத்தம் ஏற்றுதல்... தவிர்க்க முடியாத 5 காரணங்கள்!

எந்த ஒரு நோயையும் வரும் முன் காப்பதே சிறந்தது. அந்த வகையில் ரத்தத்தின் அளவு மற்றும் அதன் ஆரோக்கியத்தைச் சீராக வைத்துக் கொள்ள உணவுமுறை மிகவும் முக்கியம்.

ரத்தம் ஏற்றுதல்...  தவிர்க்க முடியாத 5 காரணங்கள்!

சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு ரத்தம் செலுத்தியதால் ஹெச்.ஐ.வி வைரஸ் தாக்கியது. 

நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற ரத்தம் தானமாகப் பெறப்பட்டு செலுத்தப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தமட்டில் ரத்தம் தானமாகப் பெறப்படும் மாநிலங்களில் தமிழகம் முன்னிலையில் உள்ளது.

ரத்தம்

இப்படி ரத்தத்தை தானம் செய்வோரில் கல்லூரி மாணவர்களே அதிகம். உரிய நேரத்தில் தானம் செய்யப்படும் ரத்தம் பல லட்சம் உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறது. அவற்றின் நடுவே சாத்தூர் பெண்ணுக்கு நிகழ்ந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. 
மனித உடலில் இருக்கவேண்டிய ரத்தத்தின் சராசரி அளவு ஐந்து லிட்டராகும். இந்த அளவு குறையும்போதோ, ரத்த அணுக்களில் ஏதேனும் பிரச்னைகள் ஏற்படும்போதோ உடல் சீராகச் செயல்படுவதில் சிரமம் ஏற்படும். அதுபோன்ற நேரங்களில் உடல் இயக்கத்தைச் சீராக்க ரத்தத்தின் தேவை அவசியம். அது தானமாகப் பெறப்பட்டு செலுத்தும்போது எந்தவிதமான நோய்க் கிருமிகளும் இல்லாமல் இருக்க வேண்டியது அவசியம்.

ரத்தம்
ஒருவரிடமிருந்து தானமாக பெறப்படும் ரத்தத்தை எத்தகைய சூழலில், யாருக்கெல்லாம் ஏற்றலாம் என்று அரசு மருத்துவமனை ரத்த வங்கிகளின் முன்னாள் இயக்குநர் டாக்டர் செல்வராஜனிடம் கேட்டோம். 

``அவசரத் தேவை மற்றும் விபத்து
சாலை விபத்து மற்றும் தொழிற்சாலை விபத்துகளில் சிக்கி அதிக ரத்த இழப்பு ஏற்பட்டவர்களுக்கு, உறுப்புகளைச் சீராக இயங்கவைத்து அவர்களது உயிரைக் காப்பாற்ற ரத்தம் செலுத்தப்பட வேண்டியது அவசியம். சிறிய அளவில் காயம் ஏற்பட்டவர்களுக்கு ரத்தம் ஏற்றத் தேவையில்லை. காயங்களின் தன்மை மற்றும் எவ்வளவு ரத்தம் வெளியேறியிருக்கிறது என்பதைப் பொறுத்து ஏற்றப்பட வேண்டிய ரத்தத்தின் அளவு தீர்மானிக்கப்படும்.

அறுவை சிகிச்சை

பல மணி நேரம் நடைபெறும் சிக்கலான அறுவைச் சிகிச்சையின்போது ரத்த இழப்பு அதிகமாக இருக்கும். திட்டமிடப்படாத அவசர அறுவை சிகிச்சைகளின்போது, ரத்த இழப்பு ஏற்பட வாய்ப்புகள் உண்டு. எனவே, இதுபோன்ற நேரங்களில் அறுவை சிகிச்சை செய்யப்படுவதற்குமுன்பே ரத்தம் தயாராக வைக்கப்பட்டு நோயாளிகளுக்கு ஏற்றப்படும்.

கர்ப்பிணி

கர்ப்பிணிகள்

பிரசவத்தின்போது தாய்மாருக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. பிரசவ காலத்தில் தாய்மாரின் இறப்புக்கு ரத்த இழப்பே முக்கியக் காரணமாக இருக்கும். அதுபோன்ற நேரங்களில் தாய்மாரின் உயிரைக் காப்பாற்ற பிரசவத்தின்போது ரத்தம் ஏற்றப்படும். 

புற்றுநோய்

ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு குறிப்பிட்டகால இடைவெளியில் ரத்தம் செலுத்த வேண்டியிருக்கும். பிற புற்றுநோய்களால் பாதிக்கப்பட்டோருக்கு கீமோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகளால் உள்ளுறுப்புகளில் ரத்தக்கசிவு ஏற்பட்டு ரத்தசோகை ஏற்படலாம். எனவே, புற்றுநோயாளிகளுக்கு ரத்தம் செலுத்தப்பட வேண்டிய அவசியம் இருக்கும். 

ரத்தசோகை

உடலில் ரத்த சிவப்பணுக்களில் காணப்படும் புரதமான ஹீமோகுளோபின் குறைவதே ரத்தசோகை நோய். நமது நாட்டைப் பொறுத்தவரை குழந்தைகள், கர்ப்பிணிகள், இளம்பெண்கள் என 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு ரத்தசோகை காணப்படுகிறது. இந்நோய் தீவிரமடையும்போது ரத்தம் ஏற்றப்படுகிறது. குறிப்பாக கர்ப்ப காலங்களில் ரத்தசோகையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு வழக்கமாக ரத்தம் ஏற்றப்படும்.

ரத்தம் யாருக்கு ஏற்றத் தேவையில்லை?

முன்னதாகவே திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகளுக்கு உடனடியாக  ரத்தம் செலுத்தவேண்டிய தேவையில்லை. நோயாளிகள் எடுத்துக் கொள்ளும் உணவுகள் மற்றும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரைகள் மூலம் ரத்தத்தின் அளவை படிப்படியாக அதிகரிக்க முடியும். ரத்தசோகையால் பாதிக்கப்பட்டோருக்கு உடனடியாக ரத்தம் ஏற்ற வேண்டிய அவசியம் இல்லை. அதன் தீவிரத்தன்மை அதிகரிக்கும்போது மட்டுமே ரத்தம் ஏற்றுவதற்கான தேவை ஏற்படும். அதற்கு மாற்றாக, அல்ஃபா எனப்படும் ஊசி (Alfa injection)இருக்கிறது. எலும்பு மஜ்ஜையில் போடப்படும் இந்த ஊசி மூலம் ரத்த அணுக்கள் மற்றும் ரத்தத்தில் காணப்படும் இரும்புச்சத்து அதிகரிக்கும். ரத்தசோகைக்கென மருந்து, மாத்திரைகளும் உள்ளன. 

ரத்த அணுக்கள்

இவை அனைத்துக்கும் மேலாக, எந்த ஒரு நோயையும் வரும் முன் காப்பதே சிறந்தது. அந்த வகையில் ரத்தத்தின் அளவு மற்றும் அதன் ஆரோக்கியத்தைச் சீராக வைத்துக் கொள்ள உணவு முறை மிகவும் முக்கியம். ஆரோக்கியமான உணவுகள் மூலம் உடலில் போதுமான அளவு ரத்தத்தையும் ரத்த அணுக்களையும் நிர்வகிக்க முடியும்.  கீரை வகைகள், பீட்ரூட், பேரீச்சம்பழம் போன்ற இரும்புச்சத்து அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்வதால் ரத்தத்தின் ஆரோக்கியத்தை நாமே கவனித்துக் கொள்ளலாம். துரித உணவுகளைத் தவிர்த்து நல்ல உணவுப்பழக்கங்களால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்" என்கிறார் டாக்டர் செல்வராஜன்.