புத்தாண்டு உறுதிமொழியாக உப்பு, சர்க்கரை, எண்ணெயைக் குறையுங்கள்! உலகச் சுகாதார நிறுவனம் பரிந்துரை | World health organisation's new year resolutions

வெளியிடப்பட்ட நேரம்: 11:17 (31/12/2018)

கடைசி தொடர்பு:11:34 (31/12/2018)

புத்தாண்டு உறுதிமொழியாக உப்பு, சர்க்கரை, எண்ணெயைக் குறையுங்கள்! உலகச் சுகாதார நிறுவனம் பரிந்துரை

பிறக்கப்போகும் 2019-ம் ஆண்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சில உறுதிமொழிகளை எடுக்கலாம் என்று பரிந்துரைப்பதுடன் அவற்றைப் பட்டியலிட்டுள்ளது உலகச் சுகாதார நிறுவனம்.

புத்தாண்டு உறுதிமொழியாக உப்பு, சர்க்கரை, எண்ணெயைக் குறையுங்கள்! உலகச் சுகாதார நிறுவனம் பரிந்துரை

புத்தாண்டு ஒவ்வொருமுறை பிறக்கும்போதும் புதுப்புது உறுதிமொழிகளை எடுப்பதும், அவற்றை அடுத்த சில நாள்களிலேயே காற்றில் பறக்கவிட்டுவிடுவதும் வாடிக்கையான ஒன்று. இந்த வேடிக்கைக்கு நடுவே, `இந்தப் புத்தாண்டில் நான் எந்த உறுதிமொழியும் எடுக்கப்போவதில்லை' என்று பலர் விளையாட்டாகச் சொல்வதுண்டு. பிறக்கப்போகும் 2019-ம் ஆண்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சில உறுதிமொழிகளை எடுக்கலாம் என்று பரிந்துரைப்பதுடன் அவற்றைப் பட்டியலிட்டுள்ளது உலகச் சுகாதார நிறுவனம். 

புத்தாண்டு உறுதிமொழி

 உணவு வகைகள்

 நம்முடைய உடல் அமைப்பைக் கண்டறிவது மிகவும் கடினமான ஒன்று. நமது உடலுக்குக் கிடைக்கும் நன்மைகள் அனைத்தும் ஒரு உணவால் கிடைப்பதல்ல. நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவுக்கும் பல்வேறு மகத்துவங்கள் உள்ளன. எனவே, பல்வேறு உணவு வகைகளைக் கலந்து உண்ண வேண்டும். பால், கோதுமை, அரிசி, பருப்பு வகைகள், பழங்கள் மற்றும் அசைவ உணவுகளான இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றைத் தினமும் அல்லது வாரத்துக்கு மூன்று நாளாவது சாப்பிட வேண்டும். பதப்படுத்தப்பட உணவு வகைகளைத் தவிர்ப்பது நல்லது. எந்த உணவையும் வறுத்துச் சாப்பிடாமல் வேகவைத்துச் சாப்பிடலாம். இனிப்பு மற்றும் கொழுப்பு நிறைந்த பண்டங்களைத் தவிர்த்து பச்சைக் காய்கறிகள், நட்ஸ் மற்றும் பழங்களை நொறுக்குத்தீனிகளாகச் சாப்பிடலாம். 

இதயம்

உப்பு

 உப்பின் அளவைக் குறைத்துக்கொண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும். உப்பை அதிக அளவு உணவில் சேர்த்துக் கொள்வதால் ரத்தஅழுத்தம் அதிகரித்து இதயம் தொடர்பான நோய்கள் வர வாய்ப்பு உள்ளது. எனவே, உலகச் சுகாதார நிறுவனம் ஒரு நாளைக்கு 5 கிராம் மட்டுமே உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று பரிந்துரைத்துள்ளது. ஆனால் நாம் இரண்டுமடங்கு அதிகமாக உப்பைப் பயன்படுத்துகிறோம். எனவே, வீட்டில் சமையலில் உப்பின் அளவைக் குறைக்க வேண்டும். அதேபோல், உப்பு அதிகம் இருக்கும் தின்பண்டங்களைக் குறைத்துக்கொள்வது நல்லது. உப்பின் அளவைக் குறைவாகப் பயன்படுத்தப் பழகிவிட்டால் நாளடைவில் அந்தச் சுவைக்கு ஏற்றவாறு நம் சுவை அரும்புகளும் மாறிவிடும். 

உடல் பருமன்

எண்ணெய் மற்றும் கொழுப்பு வகைகள்

 கொழுப்புச்சத்து உடலுக்கு அவசியமானதுதான். ஆனால் அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டால் உடல் பருமன், இதய நோய்கள் வர வாய்ப்பு உள்ளது. மேலும், செயற்கையாக உற்பத்தி செய்யப்படும் `டிரான்ஸ் கொழுப்புகள்' (Trans fat) மிகவும் ஆபத்தானவை. இந்த வகை உணவுகளைச் சாப்பிடுவதால் இதய நோய்கள் வர 30 சதவிகிதம் அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சோயா பீன் எண்ணெய், சோள எண்ணெய், குங்குமப்பூ எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். இறைச்சி வகைகளில் சிவப்பு இறைச்சிகளைத் தவிர்த்து வெள்ளை இறைச்சிகளைச் சாப்பிடலாம். 

இனிப்புகள்

இனிப்புகள்

 அதிக இனிப்பு வகைகளைச் சாப்பிடுவதால் பற்கள் பாதிப்படைவதுடன் உடல் எடை அதிகரிக்கும். பதப்படுத்தப்பட்ட உணவுகளிலும் சர்க்கரை அதிக அளவில் சேர்க்கப்பட்டிருக்கும். உதாரணமாக ஒரு பாட்டில் குளிர்பானத்தில் 10 டீஸ்பூன் சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளது. அதிக சர்க்கரை பயன்பாடு உடலுக்குத் தீங்கு விளைவிப்பதுடன் பல்வேறு நோய்களுக்கு முக்கியக் காரணியாக அமைகிறது. குழந்தைகளுக்கு இரண்டு வயது வரை எந்தவித இனிப்புகளையும் சாப்பிடக் கொடுக்காமல் இருப்பது நல்லது. இரண்டு வயதுக்கு மேல் குறைந்த அளவு இனிப்புகளைக் கொடுக்கலாம். 

உறுதிமொழி

மது

ஆரோக்கியமான உணவுப் பட்டியலில் இல்லாத ஒன்று மது. பலர் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது மது அருந்துவதை பழக்கமாக வைத்திருக்கின்றனர். தொடர்ந்து அதிக அளவு மது அருந்துவதால் நீண்டகால நோய்களான கல்லீரல் சேதம், புற்றுநோய், இதய நோய் மற்றும் மன நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறைந்த அளவு குடிப்பழக்கம் இருப்பவர்களுக்கும் உடல்நிலை பாதிப்படையும். கர்ப்பிணிகள் அல்லது தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், வாகன ஓட்டிகள், வேலைக்குச் செல்வோர், உடல்நிலை பாதித்தவர்கள் மற்றும் நோயாளிகள் கட்டாயம் மது அருந்தக் கூடாது. எனவே, உங்களுக்குப் பிடித்தவர்களுக்கு மதுப்பழக்கம் இருக்கிறது என்றால், அவர்களை அந்தப் பழக்கத்திலிருந்து வெளியே வர உதவுங்கள்.