மெல்லிய இடுப்புக்குச் சொந்தக்காரரா நீங்கள்? அப்போ இதப்படிங்க முதல்ல... #Research #Health | women with slim hips are more at risk of heart attack and diabetes

வெளியிடப்பட்ட நேரம்: 20:15 (31/12/2018)

கடைசி தொடர்பு:20:15 (31/12/2018)

மெல்லிய இடுப்புக்குச் சொந்தக்காரரா நீங்கள்? அப்போ இதப்படிங்க முதல்ல... #Research #Health

லியானா இடுப்பு போன்று ஜீரோ சைஸ் இடுப்பைப் பெற முயல்பவரா நீங்கள்? உங்களுக்கு அதிர்ச்சி தரும் ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது. மெலிந்த இடை உள்ளவர்கள் ஆரோக்கியமானவர்கள், அவர்களுக்கு நோய்கள் வருவதற்கான வாய்ப்பு குறைவு என்பது பலரின் எண்ணம். ஆனால், மெல்லிய இடையைக் கொண்ட பெண்களுக்கும் மாரடைப்பு, சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்கிறது அந்த ஆய்வு. உடலில் எடை அதிகம் இருப்பது ஆபத்து என்று பல ஆண்டுகளாக மருத்துவர்கள் கூறி வந்ததை இந்த ஆராய்ச்சி முடிவு தகர்த்துள்ளது. 

இடுப்பு

அமெரிக்க மருத்துவச் சங்கத்தின் இதழில் அந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக 6 லட்சம் பெண்களின் மரபணுக்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இடுப்புப் பகுதியில் குறைவான கொழுப்புச் சேர்மானம் உடையவர்கள் மற்றும் இல்லாதவர்கள் எனப் பிரித்து ஆய்வு செய்யப்பட்டது. ஆராய்ச்சியின் முடிவில், இடுப்புப் பகுதியில் கொழுப்புச் சேர்மானம் குறைவாகக் காணப்பட்டவர்களுக்கு சர்க்கரை நோய், மாரடைப்பு வருவதற்கான ஆபத்து அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது.

 இடுப்புப் பகுதி மெலிந்து காணப்படும் வகையில் மரபணுக்களை உடையவர்களுக்கு, உணவு உட்கொள்வதில் இருந்து கிடைக்கும் கொழுப்பானது  கல்லீரல், தசைகள், கணையம் அல்லது ரத்தத்தில் கலந்துவிடுகிறது. இது சர்க்கரை நோய், மாரடைப்பு ஏற்படுவதற்கு வழிவகுக்கிறது. மற்றவர்களுக்கு உணவிலிருந்து கிடைக்கும் கொழுப்பு இடுப்புப் பகுதியில் மட்டுமே சென்று படியும்.

சர்க்கரை நோய்

இதனால் மெல்லிடை இருப்பவர்களைக் காட்டிலும், இடுப்புப் பகுதியில் சதை போட்ட பெண்களுக்கு இந்த நோய்களுக்கான வாய்ப்பு குறைவு என்று தெரிவிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.  ஆராய்ச்சியில் ஈடுபட்ட கேம்பிரிட்ஜ் மருத்துவ ஆராய்ச்சிக் கழகப் பேராசிரியர் லூகா லோட்டா கூறுகையில், ``இந்த ஆராய்ச்சி முடிவு சிலரின் நம்பிக்கைக்கு எதிராக இருக்கலாம். ஆனால், மரபணுக்களின் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இடுப்புப் பகுதியில் கொழுப்புச் சேர்மானம் குறைவாக உடையவர்களும் ஆபத்தான நோய்களுக்கான பட்டியலில்தான் இருக்கிறார்கள்" என்றார்.