வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (01/01/2019)

கடைசி தொடர்பு:09:34 (02/01/2019)

உடல் எடை குறைக்கும் 8 புரத உணவுகள்: புத்தாண்டு உறுதிமொழியாக எடுக்க ஒரு யோசனை!

புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வதுடன் நாள்தோறும் உடற்பயிற்சி செய்தால் உடல் எடையை எளிதாகக் குறைக்கலாம்.

உடல் எடை குறைக்கும் 8 புரத உணவுகள்: புத்தாண்டு உறுதிமொழியாக எடுக்க ஒரு யோசனை!

2019-ம் ஆண்டு பிறந்துவிட்டது. ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும்போதும் நாம் சில உறுதிமொழி எடுப்பதுண்டு. இதுவரை எப்படியோ இருந்த நான் இனி வரும் ஆண்டில் என் நிலையை மாற்றிக்கொண்டு புது மனிதனாக, புது மனிதியாக மாறுவேன் என்று சூளுரைப்போம். இன்றைய சூழலில் உடுத்தும் உடை உண்ணும் உணவு என அனைத்து நிலைகளிலும் நிறைய மாற்றங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக உணவுகளால் பல்வேறு நோய்களில் சிக்கி அவதிப்பட்டு வருகிறோம். பொதுவாகவே, எல்லோருமே இந்த ஆண்டு முதல் ஆரோக்கியமான உணவுகளை உண்பேன் எனவும் உடல் பருமனாக உள்ளவர்கள் உடல் எடையைக் குறைக்கத் தேவையான உணவுகளை உண்பேன் எனவும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளலாம்.  

புத்தாண்டு

புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதுடன் நாள்தோறும் உடற்பயிற்சி செய்தால் உடல் எடையை எளிதாகக் குறைக்கலாம் என்று மருத்துவர்கள் ஆலோசனை அளித்து வருகின்றனர். 

புரதச் சத்து உடல் எடையை நிர்வகிக்கும் ஹார்மோன்களில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. புரதம் அதிகமுள்ள உணவுகளை எடுக்கும்போது, எடையை நிர்வகிக்கும்  ஹார்மோன்களில் கொழுப்பு, கார்போஹைட்ரேட் சேர்வது தடுக்கப்படுகிறது. மேலும் பசி உணர்வைத் தூண்டும் ஹார்மோன்கள் மட்டுப்படுத்தப்பட்டு, வயிறு நிறைந்த உணர்வைத் தரும் ஹார்மோன்களின் செயல்பாட்டை அதிகரிக்கும். இதனால் அடிக்கடி பசியெடுக்கும் உணர்வு குறைவதால் அடிக்கடி சாப்பிடுவது, நொறுக்குத் தீனிகள், தின்பண்டங்களை அதிக அளவில் சாப்பிடுவதைத் தடுக்கலாம். 

புத்தாண்டு

உடல் எடையைக் குறைக்க உதவும் புரத உணவுகள் என்னென்ன என்பதுபற்றி பார்ப்போம்.

முட்டை

புரதச் சத்து அதிகமுள்ள உணவுகளில் முக்கியமானது முட்டை. 100 கிராம் முட்டையில் 13 கிராம் புரதம் இருக்கிறது. மனித உடலால் தானாக உற்பத்தி செய்யமுடியாத அத்தியாவசிய அமிலங்கள், புரதங்கள் முட்டையில் இருக்கின்றன. புரதம் மட்டுமன்றி, பிற ஊட்டச்சத்துகளும் முட்டையில் அதிகம் காணப்படுகின்றன. அதனால் உடல் எடை குறைப்பதற்கான உணவு முறையில் முட்டை ஒரு பகுதியாக இருக்க வேண்டும். 

கோழி இறைச்சி

உடலைக் கட்டுக்கோப்பாக வைக்க உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சி எடுப்பவர்கள் மட்டுமன்றி உடல் எடை குறைக்க முயற்சிப்பவர்கள் மத்தியிலும் பிரபலமாகி இருக்கிறது கோழியின் நெஞ்சுக் கறி. பொதுவாகவே கோழி இறைச்சியில் புரதச்சத்து அதிகமாகவும் கலோரிகள் குறைவாகவும் உள்ளதால் உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க உதவும். பிராய்லர் கோழிக் கறியைத் தவிர்ப்பது நல்லது.

புத்தாண்டு

மீன்

அசைவ உணவுகளில் மீன் உட்பட அனைத்துக் கடல் உணவுகளிலும் புரதச்சத்து அதிகமாகவும் கொழுப்புச்சத்து குறைவாகவும் காணப்படும். பன்னா, காலா போன்ற மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக இருப்பதால் இதய ஆரோக்கியத்துக்கும், மூளையைக் கூர்மைப்படுத்தவும் உதவுகிறது. 

தயிர்

பால் பொருள்கள் அனைத்திலும் புரதச்சத்து அதிகமாகக் காணப்படுகிறது. தயிர், பாலாடைக் கட்டி, பனீர் போன்ற பொருள்களில் புரதச்சத்து மட்டுமன்றி கால்சியம் சத்தும் இருக்கிறது. இதனால் எலும்புகள், பற்கள் உறுதியாவதுடன், 'ஆஸ்டியோபோரோசிஸ்' என்ற எலும்பு அடர்த்திக் குறை நோய் வராமல் தடுக்கலாம். 

தினை

சிறுதானியங்களில் தினையில் புரதச்சத்து நிறைந்து காணப்படுகிறது. குறிப்பாக, ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்கள் காணப்படுகின்றன. அசைவ உணவுகளைச் சாப்பிடாதவர்களுக்கு தினை சிறந்தது. காய்கறிகளுடன் தினை சேர்த்துச் சாப்பிட்டால் சிறந்த புரதம் நிறைந்த உணவாக மாறும்.

புத்தாண்டு

பாதாம்

பாதாமில் நல்ல கொழுப்புகள், நார்ச்சத்து, புரதம், மக்னீசியம் மற்றும் வைட்டமின் ஈ ஆகிய சத்துகள் நிறைந்துள்ளன. ஒரு நாளைக்குக் கைப்பிடி அளவு பாதாம், பிஸ்தா உள்ளிட்டவற்றை எடுத்துக்கொண்டால், உடலுக்குத் தேவையான புரதச்சத்து கிடைத்துவிடும். 

பூசணி விதைகள்

பூசணி விதைகளில் இரும்புச் சத்து மற்றும் மக்னீசியம் அதிகமாக இருப்பதுடன் போதுமான அளவு புரதச்சத்தும் உள்ளது. இந்த விதைகளை சாலட் மற்றும் சூப்களில் சேர்த்துச் சாப்பிடலாம்.

பருப்பு வகைகள்

துவரம்பருப்பு, கொண்டைக் கடலை போன்ற பருப்பு வகைகளில் புரதச்சத்து அதிகம் காணப்படுகின்றன. இவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதால் அடிக்கடி பசியெடுக்காமல் வயிறு நிறைந்த உணர்வு இருக்கும். இந்தப் பருப்பு வகைகளை சிவப்பரிசியுடன் சேர்த்துச் சாப்பிடுவது கூடுதல் பலனளிக்கும் உணவாக இருக்கும்.


டிரெண்டிங் @ விகடன்